My page - topic 1, topic 2, topic 3

மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

டல் நலத்துக்குத் தேவையான நீர்ச்சத்து, உயிர்ச் சத்துகள் அதிகமுள்ள தக்காளியை மதிப்புக்கூட்டிச் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

தக்காளி நமது உடல் நலத்துக்கு அவசியம். 93 சதம் நீருள்ள தக்காளி சிறந்த கோடைக்கால உணவாகும்.

மீதமுள்ள 7 சதத்தில், உடலுக்குத் தேவையான உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உள்ளன.

தக்காளிப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம் இருமடங்கு உள்ளன. பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது.

அதாவது, 100 கிராம் தக்காளியில், 310 மைக்ரோ கிராம் கரோட்டின் உள்ளது. இது, நம் அன்றாட கரோட்டின் தேவையில் பாதியை நிறைவு செய்யும்.

அதோடு, தக்காளியில் லியிகோபின் உள்ளது. இதன் சிறப்பு, உடலில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாக மாறுவது.

இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு, நமது உடலில், நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டி உடலைப் பாதுகாக்கிறது.

மேலும், உயிர்ச்சத்து ஏ குறைவதால் நமக்கு ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்கிறது. நமது தோல் பொலிவுடன் விளங்க, இச்சத்து மிகவும் அவசியம்.

இந்தப் பழம், குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் அதிகமாக விளையும். இதனால், இதன் விலை மிகவும் குறைந்து விடும்.

எனவே, விவசாயிகள் தக்காளியை அப்படியே விற்காமல், பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி, பல்வேறு மாற்றுப் பொருள்களாக விற்றால், நல்ல இலாபம் கிடைக்கும்.

பொதுவாக, ஒரு பொருளைப் பதப்படுத்தும் போது, அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் வீணாகும் என்னும் கருத்து மக்களிடம் உள்ளது. ஆனால், முறையான பதப்படுத்தலில் இதைத் தவிர்க்கலாம்.

ஒரு கிண்ணத் தக்காளிப் பழக்கூழில், சராசரியாக 534 மைக்ரோ கிராம் பொட்டாசியம் இருந்தால், அதை சாஸாக மாற்றும் போது, 454 மைக்ரோ கிராம் பொட்டாசியம் தான் இருக்கும்.

எனவே, தக்காளியை மலிவான காலங்களில் வாங்கி, அதை இயந்திரங்கள் மூலம், தக்காளிப் பொடி, தக்காளி சாஸ், தக்காளி சூப் பொடி, தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் போன்ற பொருள்களாக மாற்றி விற்றால் நல்ல இலாபம் ஈட்டலாம்.

பெரிய இயந்திரங்கள், அதிக முதலீடு இல்லாமல், தக்காளிப் பொருள்களை வீட்டிலேயே தயாரிக்கும் சிறு தொழிலாகத் தொடங்கலாம்.

தக்காளி பேஸ்ட்

இது, தக்காளியைத் தோல் நீக்கிச் சமைப்பதன் மூலம் கிடைக்கிறது. இது, அடர்த்தி மிகுந்த சிவப்புப் பொருளாகும். முழுதாகப் பதப்படுத்திய தக்காளி மூலம் தயாரிக்கும் பேஸ்ட்டில், 4.5 முதல் 6.0 சதம் வரை, தக்காளி திடப் பொருள்கள் இருக்கும்.

ஆனால், தக்காளி பேஸ்ட்டில் டி.எஸ்.எஸ். என்னும் கரையும் திடப்பொருள் குறைந்தது 14 சதம் இருக்க வேண்டும்.

ஆறு கிலோ தக்காளியில் இருந்து ஒரு கிலோ தக்காளி பேஸ்ட்டைத் தயாரிக்கலாம். இது, 26-28 டிகிரி பிரிக்ஸ் செறிவில் இருக்கும்.

தக்காளிக் கூழ், அதன் நிலைத் தன்மை மற்றும் சுவையில், தக்காளி பேஸ்ட்டிலிருந்து வேறுபடும்.

தக்காளி பேஸ்ட் செறிவும், சிறந்த சுவையும் மிக்கது. அதே சமயம், தக்காளிக் கூழ் நீர்த்த சுவையும், நிலைத் தன்மையும் கொண்டது.

தக்காளிக் கூழில் 11-14 சதம் டி.எஸ்.எஸ். இருக்கும். இந்தக் குறைவான செறிவு காரணமாக, தக்காளிக் கூழ், தக்காளி பேஸ்ட்டிலிருந்து வேறுபடுகிறது.

தக்காளி பேஸ்ட் தயாரிப்பு முறை: தக்காளியை நன்றாக நீரில் கழுவ வேண்டும்.

அடுத்து, 3-5 நிமிடம் 90 டிகிரி செல்சியசில் வேக விட்டுக் குளிர வைக்க வேண்டும்.

அடுத்து, கூழாக அரைத்து வடிகட்ட வேண்டும்.

அடுத்து, தேவையான நிலைத் தன்மையை அடையும் வரையில், காய்ச்ச வேண்டும்.

தக்காளி பேஸ்ட்டில் 25 சதம் கரையும் திடப்பொருள் இருக்க வேண்டும். இதை, Hand Refracto meter மூலம் அளவிடலாம்.

இந்த பேஸ்ட்டை, 82-88 டிகிரி செல்சியஸ் சூட்டில், புட்டிகளில் நிரப்பி, கொதிநீரில் இருபது நிமிடம் வைத்து நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.

பிறகு, குளிரச் செய்ய வேண்டும். கலப்பினத் தக்காளி, பேஸ்ட் செய்ய ஏற்றது. நீண்ட காலம் கெடாமல் இருக்க, 0.1 சத சோடியம் பென்சோ யேட்டைக் கலந்து வைக்க வேண்டும்.

தக்காளி கெச்சப்

இது, இந்தியாவில் பிரபல மதிப்புக் கூட்டுப் பொருளாகும். தக்காளிக் கூழைக் கொதிக்க வைத்து, அதனுடன் உப்பு, சர்க்கரை, மசாலா மற்றும் வினிகரைச் சேர்த்து, அடர் தன்மையில் கண்ணாடிப் புட்டிகளில் வைக்கப்படும்.

கவரும் சிவப்பு நிறம் மற்றும் காரச்சுவை இதன் சிறப்பாகும். இதைத் தயாரிப்பது எளிது எனினும், அதன் சேமிப்பில், விற்பனையில் சில சிக்கல்கள் உள்ளன.

பிளாக் நெக் என்னும் கரு வளையம், குறுகிய கழுத்துப் புட்டிகளில் இடப்படும் கெட்சப்பில் ஏற்படுவதும், கெட்சப்பில் இருந்து நீர் பிரிவதும், பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

இந்தக் குறைகளை, தரமான தக்காளி மற்றும் நிலையான தயாரிப்பு முறையின் மூலம் சரி செய்யலாம்.

தேவையான பொருள்கள்: தக்காளிச் சாறு 25 கிலோ,

உப்பு 50 கிராம்,

நறுக்கிய பூண்டு 30 கிராம்,

பட்டை 13 கிராம்,

ஏலக்காய் 5 கிராம்,

ஜாதிக்காய் 1 கிராம்,

சர்க்கரை 1 கிலோ,

வெங்காயம் 320 கிராம்,

கிராம்பு 13 கிராம்,

மிளகு 5 கிராம்,

சீரகம் 5 கிராம்,

மிளகாய் பொடி 10 கிராம்.

இறுதியாக, 0.025 சதம் சோடியம் பென்சோ யேட்டைச் சேர்த்தால், நெடு நாட்களுக்குச் சேமிக்க முடியும்.

தயாரிப்பு முறை: பழுத்த தக்காளிகளை நீரில் நன்றாகக் கழுவி, வெட்டி நறுக்க வேண்டும்.

அடுத்து, 70-90 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 3-5 நிமிடம் குழைய வேக வைக்க வேண்டும்.

அடுத்து, வடிகட்டிப் பழக்கூழைத் தனியாக எடுக்க வேண்டும். இதில் கால் பங்கு சர்க்கரை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

அடுத்து, நறுமணப் பொருள்கள் உள்ள பையை அதற்குள் போட வேண்டும்.

அடுத்து, பழக்கூழ் மூன்றில் ஒரு பங்காக வரும் வரை வேக வைக்க வேண்டும்.

அடுத்து, நறுமணப் பொருள்கள் அடங்கிய பையை அகற்ற வேண்டும்.

அடுத்து, மீதமுள்ள சர்க்கரை மற்றும் உப்பைச் சேர்த்து, நன்கு கலக்கி வேகவிட வேண்டும்.

அடுத்து, Hand Refracto meter மூலம் பழக்கூழின் திடநிலையை அறிய வேண்டும்.

அடுத்து, வினிகர், அசிட்டிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும்.

அடுத்து, 88 டிகிரி செல்சியஸ் சூட்டில் புட்டிகளில் நிரப்பி கிரவுன் கார்க்கால் அடைக்க வேண்டும்.

நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்க, முப்பது நிமிடம் வரை 85-90 டிகிரி செல்சியஸ் கொதிநீரில் வைத்து எடுத்துச் சேமிக்க வேண்டும்.

தக்காளிச் சட்னி

தேவையான பொருள்கள்: தக்காளி 1 கிலோ,

உப்பு 25 கிராம்,

நறுக்கிய பூண்டு 5 கிராம்,

ஜாதிக்காய் 1 கிராம்,

சர்க்கரை 500 கிராம்,

வெங்காயம் 100 கிராம்,

மிளகாய்ப் பொடி 10 கிராம்,

இஞ்சி, மிளகு, பட்டை, ஏலக்காய், சீரகம், பட்டை, சோம்பு தலா 10 கிராம்,

வினிகர் 100 மில்லி,

சோடியம் பென்சோயேட், கிலோவுக்கு 0.5 கிராம்.

தயாரிப்பு முறை: பழுத்த தக்காளிகளை எடுத்து நீரில் நன்கு கழுவ வேண்டும்.

அடுத்து இரண்டு நிமிடம் பிளான்சிங் செய்து, உடனே குளிர்ந்த நீரில் இட வேண்டும். இதனால், தக்காளி தோலில் வெடிப்பு ஏற்படும். இது, தோலை நீக்க வசதியாக இருக்கும்.

அடுத்து, தக்காளிகளைப் பிழிந்து, அதில், உப்பு, வினிகரைத் தவிர, மீதமுள்ள பொருள்களை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.

அடுத்து, உப்பு, வினிகரைச் சேர்த்து, சரியான பக்குவம் வரும் வரை வேகவிட வேண்டும்.

பிறகு, சூடான நிலையில் புட்டிகளில் நிரப்பி, குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

தக்காளி சூப் பொடி

தேவையான பொருள்கள்: தக்காளிப் பொடி 5 கிராம்,

வெங்காயப் பொடி 0.5 கிராம்,

சோள மாவு 2.0 கிராம்,

சீரகத்தூள் 0.5 கிராம்,

மிளகுத்தூள் 0.3 கிராம்,

உப்பு 1.5 கிராம்,

அஜினோ மோட்டோ 0.5 கிராம்.

தயாரிப்பு முறை: நன்கு பழுத்த, கெட்டியான தக்காளிப் பழங்களை, குழாயில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

அடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டி, தனி அறை உலர்த்தியில் 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து மணி நேரம் உலர்த்த வேண்டும்.

அடுத்து, நீர் நீக்கம் செய்த துண்டுகளை, மின்னம்மியில் அரைத்துப் பொடியாக்க வேண்டும்.

அடுத்து, பெரிய வெங்காயத்தை எடுத்துத் தோலை உரித்து விட்டு, குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

பிறகு, இதைத் தனி அறை உலர்த்தியல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 7 மணி நேரம் உலர்த்த வேண்டும்.

பிறகு, நீர் வற்றிய துகள்களை அரைத்துப் பொடியாக்க வேண்டும்.

பிறகு, இத்துடன் தக்காளிப் பொடி, சோளமாவு, சீரகத்தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் அஜினோ மோட்டோவைக் கலந்து, நெகிழிப் பைகளில் சேமித்து வைக்கலாம்.

பத்து கிராம் தக்காளி சூப் பொடியை, 150 மில்லி கொதிநீரில் கலந்து பருகலாம்.


ச.கோகிலவாணி, மனையியல் தொழில் நுட்ப வல்லுநர், ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks