நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால், தேங்காய் விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னையில் நல்ல இலாபத்தை அடைய, தேங்காயை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி விற்க வேண்டும். விவசாயிகள் பெரும்பாலும், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யாக மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றைத் தவிர, இன்னும் மதிப்புள்ள பல உணவுப் பொருள்களைத் தேங்காயில் இருந்து தயாரிக்கலாம்.
இளநீர்
இயற்கையின் கொடை இளநீர். உடல் நலத்துக்கு ஏற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டது. மொத்தச் சர்க்கரை, குறைவுபடும் சர்க்கரை, தாது மற்றும் புரதம் நிறைந்த இன்சுவை பானம். இது செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இப்போது இளநீரைப் பதப்படுத்தி உறைகளில் அடைத்து விற்பதற்கான தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இளநீர், சாதாரண வெப்ப நிலையில் மூன்று மாதமும், குளிர்ந்த வசதியுள்ள நிலையில் ஆறு மாதமும் கெடாமல் இருக்கும்.
உலர் தேங்காய்ப்பூ
நன்றாக முற்றிய தேங்காய்ப் பருப்பை வெய்யிலில் அல்லது எந்திரத்தின் மூலம் உலர வைக்க வேண்டும். பிறகு, பருப்பின் பழுப்புநிறத் தோலை, கத்தியால் சீவிச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இந்தப் பருப்பை எந்திரம் மூலம் வெட்டி நசுக்கி, மீண்டும் உலர வைத்துச் சல்லடை மூலம் தரம் பிரிக்க வேண்டும். இப்பூவைத் தயாரிக்கும் போது, பாக்டீரியா, பூசணம் போன்ற கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பாதுகாத்தால், உறைகளில் நெடுநாட்கள் வைத்திருந்து விற்பனை செய்யலாம்.
உலர் தேங்காய்ப்பூ, மிட்டாய், கேக், ரொட்டி போன்ற பல்வேறு பண்டங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் தேங்காய்ப்பூ தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப்பூ தயாரிப்புப் பயிற்சி, மைசூரிலுள்ள மத்திய உணவுப்பொருள் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது.
தேங்காய் கிரீம்(கொழுமம்)
முற்றிய தேங்காயிலிருந்து எடுக்கும் பாலை இயந்திரத்தில் அரைக்கும் போது, அதிலுள்ள கொழுப்பு தனியே பிரிந்து நிற்கும். இதைத் தான் கிரீம் என்கிறோம். இது, பிஸ்கட், ரொட்டி போன்ற பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இலாபம் தரும் வணிகப் பொருளாக விளங்கும் கிரீம், இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிகுதியாகப் பயன்படுகிறது.
தேங்காய்ப்பால் பொடி
தேங்காய்ப் பருப்பிலிருந்து பாலைப் பிரித்துச் சல்லடையில் வடித்த பிறகு, குளிர வைத்து நுண் கிருமிகளை நீக்க வேண்டும். பிறகு, இந்தப் பாலில் மால்ட்டோ டெக்ஸிரின் மற்றும் பால் புரதமான காசினேட்டைச் சேர்த்து, அடர் திரவமாகவும், பொடியாகவும் மாற்ற வேண்டும். இதற்கு நீரை உறிஞ்சும் தன்மை உள்ளதால், ஈரமில்லாத காற்றறையில் வைத்துச் சிறிய டப்பாக்களில் அடைக்க வேண்டும். அடர்த்தியான பாலைச் சூடாக்கும் போது தீப்பிடிக்காமல் பாதுகாப்பது அவசியம். முறைப்படி தயாரித்த தேங்காய்ப்பால் பொடி, 18 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இப்பொடி நீரில் எளிதில் கரைந்து, தேங்காய்ப் பாலாக மாறிவிடும். இது, பல்வேறு உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
தேங்காய்ச் சீவல்
தேங்காய்ப் பருப்பின் பழுப்புத் தோலை நீக்கிவிட்டு, காய்கறிகளைச் சீவுவதைப் போல மெல்லிய சீவல்களாகச் சீவ வேண்டும். அடுத்து, 250 கிராம் சர்க்கரையை ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். அடுத்து, சீவல்களை இந்தக் கரைசலில் முக்கியெடுத்து, உலர்ப்பானில் உலர்த்தினால், மொறுமொறு நிலையில் சுவையான சீவல்கள் தயாராகி விடும். உப்பு, இஞ்சி போன்ற பொருள்களைக் கலந்து, சுவையும், மணமுமுள்ள சீவல்களைத் தயாரிக்கலாம். மிகவும் எளிதான தேங்காய்ச் சீவல் தயாரிப்பை, பெண்கள், வீட்டிலிருந்தே செய்து வருமானம் பெறலாம். இனிப்பு மற்றும் காரமுள்ள சிப்சையும் தயாரித்து உள்ளூர்க் கடைகளிலேயே விற்று விடலாம்.
தேங்காய்பால்
பல்வேறு உணவுப் பொருள்களில் தேங்காய்ப்பால் பயன்படுகிறது. தேங்காய்த் துருவலைப் பிழிந்து, தேங்காய்ப்பால் எடுக்கப்படுகிறது. இது, உணவின் சுவையையும் சத்தையும் கூட்டும். தேங்காயிலுள்ள புரதம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இது சத்துமிகு ஊடகமாகும்.
தேங்காய்ப்பாலைத் தயாரிக்க, வெளிநாட்டு உத்திகளும் உள்நாட்டு உத்திகளும் உள்ளன. தேங்காய்ப்பாலை எடுத்த பின் கிடைக்கும் சக்கையில் சட்னிப் பொடியைத் தயாரிக்கலாம். 20% க்கு அதிகமாகக் கொழுப்பு இருந்தால் அது தேங்காய்ப்பால் குழைவு. 5-20% கொழுப்பு இருந்தால் அது தேங்காய்ப்பால்.
தென்னைக் கருப்பட்டி
மலராத தென்னம் பாளையிலிருந்து பதனீர் எடுக்கப்படும். இதை நன்கு காய்ச்சி அச்சில் வார்த்தால் கிடைப்பது கருப்பட்டி. மருத்துவக் குணமுள்ள தென்னைக் கருப்பட்டி, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
வினிகர்
முற்றிய தேங்காய் நீரிலிருந்து தரமான வினிகர் தயாரிக்கப்படுகிறது. இது, உணவுகளைத் தயாரிக்கவே பயன்படுகிறது. வினிகரைத் தயாரிக்க, ஈஸ்ட் என்னும் நுண்ணுயிர் தேவை. இந்த ஈஸ்ட் பலவாகப் பெருகும் போது ஆல்கஹால் உற்பத்தியாகிறது. இந்த ஆல்ஹகால் அசிட்டிக் அமிலமாகவும், அடுத்த நிலையில் வினிகராகவும் மாற்றப்படுகிறது.
நெட்டா-டி கொக்கோ
நெட்டா- டி கொக்கோ என்பது முதிர்ந்த தேங்காய் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல்லி போன்ற பொருளாகும். இது வெள்ளை நிறத்தில் வழவழப்பாக இருக்கும் உணவுப் பொருளாகும். அசிட்டோ பாக்ட்டர் சைலினினம் என்னும் நுண்ணுயிரி மூலம், சர்க்கரை சேர்க்கப்பட்ட தேங்காய் நீரிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. கிளேசியல் அசிட்டிக் அமிலத்தில் தேங்காய்ப் பாலைக் கலந்து இதைத் தயாரிக்கலாம். தரமான நெட்டோ-டி கொக்கோ மென்மையாக, தெளிவாக, மெல்ல ஏற்றதாக இருக்கும். சர்க்கரைக் கரைசலுடன் இதைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இனிப்பூட்டப்படுகிறது.
பழக்கலவை, கிரீம் பை, ஐஸ் சர்பத் போன்றவற்றில் நெட்டோ-டி கொக்கோ சேர்க்கப்படுகிறது. இன்சுவைப் பானங்கள், ஒயின் போன்றவற்றுடன் கலந்தும் இதை உண்ணலாம். ஒலிப்பெருக்கிக் கருவிகள் மற்றும் கணிப்பொறிச் சில்லுகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. மருந்துக் குளிகை மேலுறைகள், அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் நூல் கையுறைகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. நெசவுத் தொழிலில் பாலீஸ்டருக்கு மாற்றாகப் பயன்படுகிறது. நெட்டா-டி கொக்கோ தயாரிப்பு உத்தியை, தென்னை வளர்ச்சி வாரியம் உருவாக்கியுள்ளது.
நூறு லிட்டர் தேங்காய் நீரிலிருந்து 30 கிலோ நெட்டா-டி கொக்கோவைத் தயாரிக்கலாம். இது கேக், பழ வகைகள், மிக்சர் போன்ற முக்கியப் பண்டங்களில் பூசப்படுகிறது. தற்போது கேரளத்தின் மத்திய பகுதிகளில் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொப்பரை
முதிர்ந்த தேங்காய் கொப்பரையாகும். இது எண்ணெய் எடுக்கவும், உணவிலும் பயன்படுகிறது. எண்ணெய் எடுப்பதற்கு, முற்றிய தேங்காயை வெட்டி வெய்யிலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த தேங்காய் சிரட்டையிலிருந்து பிரிந்து விடும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி, ஆலையில் இட்டுப் பிழிந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. உணவுப் பயனுக்கு, முற்றிய தேங்காயை 10-11 நாட்கள் வரை வெய்யிலில் உலர்த்த வேண்டும். இதனால் நீர் ஆவியாகி உலர் கொப்பரை தயாராகும். இந்நிலையில், தேங்காயை உரித்து, பந்தைப் போலக் கொப்பரை எடுக்கப்படும். இந்தப் பந்துக் கொப்பரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
தேங்காய் எண்ணெய்
சமையலிலும், தலையில் தேய்க்கவும், ஆலைகளிலும், தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. நன்கு முற்றிய தேங்காய்ப் பருப்புகளை 6 சத ஈரப்பதம் உள்ள வரை உலர்த்த வேண்டும். மணமான தரமான எண்ணெய்யை எடுக்க, கொப்பரையை ஆவியில் உலர்த்த வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெய், பிஸ்கட், சாக்லேட் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
தேங்காய்ப் புண்ணாக்கு
எண்ணெய்யை எடுத்த பின் கிடைக்கும் சக்கையே தேங்காய்ப் புண்ணாக்கு. இதில் 4-5% எண்ணெய் இருக்கும். இந்தப் புண்ணாக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்குப் பயன்படுகிறது. எண்ணெயற்ற புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது.
வெர்ஜின் எண்ணெய்
புளிக்க வைத்த தேங்காய்ப்பாலில் இருந்து இயந்திரத்தின் மூலம் பிரித்து எடுக்கப்படுவது வெர்ஜின் எண்ணெய். இது பெரும்பாலும் மருத்துவத்தில் தான் பயன்படுகிறது. இந்த எண்ணெய்யில் இருக்கும் மிதமான கொழுப்புச்சத்து, தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கு நிகரானது. மேலும், இந்த எண்ணெய்யில் வைட்டமின் இ அதிகமாக உள்ளது. உயர்தர எண்ணெய் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
தென்னை நார்
இது தேங்காயைச் சுற்றியிருக்கும் நார்ப்பகுதியாகும். இது உரிமட்டை, தேங்காய் நார் எனவும் சொல்லப்படும். இதில் வெள்ளை நார், பழுப்பு நார் என இருவகை உண்டு. பச்சை மட்டையிலிருந்து எடுக்கப்படுவது வெள்ளை நார். முற்றிய தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கப்படுவது பழுப்பு நார். உரி மட்டையிலிருந்து நாரைப் பிரிக்க, இரண்டு முறைகள் உள்ளன. மட்டையை அவை, உப்புநீரில் 5-6 மாதம் ஊற வைத்துக் கட்டையால் அடித்து நாரைப் பிரிப்பது. மட்டையை இயந்திரத்தில் வைத்து நசுக்கி நாரைப் பிரிப்பது.
ஊறவைத்துப் பிரிக்கும் நார் உயர்தரக் கயிறுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதற்கு நல்ல விலை கிடைக்கிறது. பழுப்பு நார், பிரஷ், மெத்தை, தரை விரிப்புகள் போன்ற பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது. நாரைத் தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவை, கம்போஸ்ட் உரமாக மாற்றலாம். இந்த உரமானது குழித்தட்டு நாற்றங்காலில் சிறந்த ஊடகமாக உள்ளது. ஒரு கிலோ கம்போஸ்ட் 3-4 ரூபாய். எட்டு மடங்கு நீரை உறிஞ்சி வைக்கும் இந்த உரத்தை நிலத்தில் இட்டால், வறட்சியில் பயிரைக் காக்கப் பேருதவியாக இருக்கும்.
சிரட்டைத்தூள்
நன்கு முற்றிய சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் சிரட்டைத்தூள், கொசுப்பத்தி, லேமினேஷன் செய்யப்பட்ட பலகை போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக், ரெக்சின், பினாயில் ஆலைகளில் சிரட்டைப்பொடி முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. தமிழக அளவில் நான்கு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிரட்டைப்பொடி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது இப்பொடியின் பயன் மேற்கத்திய நாடுகளில் பரவலாகி வருகிறது.
ஊக்குவிக்கப்பட்ட கரி
சிரட்டைக்கரி பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது. இதற்குக் குறைந்த விலையே கிடைக்கிறது. ஆனால், ஊக்குவிக்கப்பட்ட கரியின் தேவை அதிகமாக உள்ளது. வாயு மற்றும் நிறங்களைத் தரும் பொருள்களை உறிஞ்சும் ஆற்றல் கூட்டப்பட்ட கரியே ஊக்குவிக்கப்பட்ட கரி. மூன்று டன் சிரட்டைகளில் இருந்து ஒரு டன் ஊக்குவிக்கப்பட்ட கரி கிடைக்கும். தரமாக உற்பத்தி செய்யப்படும் இந்தக் கரிக்கு உலகெங்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கரி, நீர்மூழ்கிக் கப்பல், அனல்மின் நிலையம், செயற்கைத் துணைக்கோள்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. அசுத்த வாயு, துர்நாற்றம், விஷவாயு ஆகியவற்றை உறிஞ்சவும் உதவுகிறது. தங்கத்தைப் பிரித்தெடுக்கும் ஆலைகளிலும் இது பயன்படுகிறது. இந்தக் கரியைச் சேர்த்துச் சுவர்களைக் கட்டினால், தேவையற்ற நாற்றத்தை இது உறிஞ்சி வைத்துக் கொள்ளும். அதனால், வீடு சுத்தமாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் நெய்யப்படும் சில துணிகளிலும் கூட, இது சேர்க்கப்படுகிறது.
கீற்றுகள்
கீற்றுகளாகப் பின்னப்படும், காய்ந்த தென்னை ஓலைகள், கூரையை அமைக்கப் பயன்படுகின்றன. இப்போதுள்ள பருவநிலை மாற்றத்தால், பல்லடுக்குக் கட்டடங்களின் மேற்கூரைகள் தென்னங் கீற்றுகளால் அமைக்கப்படுகின்றன. வெப்பத் தாக்கத்தைத் தென்னங் கீற்றுகள் வெகுவாகக் குறைக்கும். தென்னை ஓலைக் குச்சிகள் துடைப்பமாகப் பயன்படுகின்றன.
கைவினைப் பொருள்கள்
சிரட்டையிலிருந்து பல்வேறு கைவினைப் பொருள்கள், அணிகலன்கள் செய்யப்படுகின்றன. இதிலிருந்து தயாரிக்கப்படும் வீட்டுப்பயன் பொருள்கள், ஜஸ்கிரீம் கோப்பைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
ஆகவே, தென்னை விவசாயிகள் மதிப்பூட்டப் பொருள்களைத் தயாரித்து நிறைய இலாபம் பெறலாம். இவற்றைத் தயாரிக்கத் தேவையான உத்திகளை, தென்னை வளர்ச்சிக் கழகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
முனைவர் அ.பாரதி,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை,
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், முனைவர் ஆ.கார்த்திகேயன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், தஞ்சை.