நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

Pachai boomi groundnut nutritious

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

னைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து சில தின்பண்டங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

கடலை மிட்டாய்

தேவையான பொருள்கள்: வறுத்துத் தோல் நீக்கப்பட்ட நிலக்கடலை பருப்பு 2 கிலோ, சர்க்கரை 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, நெய் 2 தேக்கரண்டி, சோள மாவு 2 தேக்கரண்டி.

செய்முறை: சர்க்கரையையும் வெல்லத்தையும் தேவையான அளவு நீரில் கரைத்து வடிகட்டி எடுக்க வேண்டும். இந்தக் கரைசலை 115-120 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு மிதமான தீயில் பாகு நிலைக்குக் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து, வறுத்துச் சுத்தம் செய்த கடலைப் பருப்பை வெல்லப் பாகில் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். வெல்லப் பாகுடன் நிலக்கடலைப் பருப்பு நன்கு ஒட்டி வர வேண்டும்.

இந்த நிலையில், நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி நன்கு பரப்ப வேண்டும். மேலும், இதன்மேல் சிறிதளவு சோளமாவைத் தூவிக் கட்டையால் அழுத்திவிட வேண்டும். பிறகு சதுரமாக வெட்டியெடுத்தால் சுவையான கடலை மிட்டாய் தயார்.

நிலக்கடலைப் பொடி

உளுந்தால் செய்யப்படும் பொடி, இட்லியைத் தொட்டுச் சாப்பிடவும், சாதத்தைப் பிசைந்து சாப்பிடவும் மிகவும் ஏற்றது. அதைப் போன்றே ருசியும் சத்தும் நிறைந்தது நிலக்கடலைப் பொடி.

தேவையான பொருள்கள்: நிலக்கடலைப் பருப்பு ½ கிலோ, பூண்டு 50 கிராம், மிளகாய் வற்றல் 50 கிராம், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் ¼ தேக்கரண்டி.

செய்முறை: நிலக்கடலைப் பருப்பை வறுத்துத் தோலை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். பூண்டை உரித்து வறுக்க வேண்டும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு ஆகியவற்றையும் லேசாக வறுக்க வேண்டும். ஆறிய பிறகு, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்தால் சத்தும் ருசியும் நிறைந்த நிலக்கடலைப் பொடி தயார். இதை, இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

நிலக்கடலை ஊறுகாய்

தேவையான பொருள்கள்: நிலக்கடலைப் பருப்பு 1 கிலோ, பூண்டு 200 கிராம், புளி 100 கிராம், மிளகாய்த்தூள் 50 கிராம், கடுகு, வெந்தயம், பெருங்காயம் தலா 10 கிராம், சிட்ரிக் அமிலம் 10 கிராம், சோடியம் பென்சோயேட் 3 கிராம், நல்லெண்ணெய் 300 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: நிலக்கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். வெந்தயம், கடுகு, பெருங்காயத்தை லேசாக வறுத்துப் பொடியாக்க வேண்டும். புளியைச் சிறிதளவு நீரில் ஊற கரைத்துக் கெட்டியாகக் கரைத்து வடிகட்ட வேண்டும். பூண்டை ஒன்றிரண்டாக நறுக்கி நல்லெண்ணெய்யில் நன்கு வதக்க வேண்டும். பிறகு, இதில் கடலைப் பருப்பைச் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து, புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பைச் சேர்த்து வதக்க வேண்டும்.

இப்படி எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வதக்கி, வெந்தயம், கடுகு, பெருங்காயத்தூள், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பிறகு, சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்து, சுத்தமான புட்டி அல்லது தரமான நெகிழிப் பைகளில் அடைத்து வைத்தால் ஆறு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்.

நிலக்கடலைப் பால்

தேவையான பொருள்கள்: நிலக்கடலைப் பருப்பு ½ கிலோ, நீர் 2 லிட்டர், சர்க்கரை 250 கிராம், ஏலக்காய்ப் பொடி ½ தேக்கரண்டி.

செய்முறை: நிலக்கடலைப் பருப்பில் கொஞ்சம் நீரைச் சேர்த்து வெண்ணெய்யைப் போல அரைக்க வேண்டும். இத்துடன் மீதமுள்ள நீரைச் சேர்த்து வடிகட்டிக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, சர்க்கரை, ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்தால் சுவையான நிலக்கடலைப் பால் தயார். இதைச் சூடாக அல்லது ஆற வைத்துப் பருகலாம்.

நிலக்கடலை சூப்

தேவையான பொருள்கள்: நிலக்கடலைப் பருப்பு 100 கிராம், தனியா 4 மேசைக் கரண்டி, சீரகம் 2 மேசைக் கரண்டி, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 4, எலுமிச்சம் பழம் 1, வெங்காயம் 1 கிண்ணம், எண்ணெய் அல்லது வெண்ணெய் 1 மேசைக் கரண்டி, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லித் தழை சிறிதளவு.

செய்முறை: நிலக்கடலை, தனியா, சீரகத்தை வறுத்துப் பொடியாக்க வேண்டும். எண்ணெய்யைச் சூடாக்கி, நறுக்கிய பூண்டு, மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும். பிறகு, இதில் ஒரு லிட்டர் நீரைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இதில், வறுத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழையைச் சேர்த்துச் சூடாகப் பருகலாம். இந்த சூப் புதுகையாகவும், சுவையாகவும் இருக்கும்.

நிலக்கடலை அல்வா

தேவையான பொருள்கள்: வறுத்துத் தோல் நீக்கப்பட்ட நிலக்கடலை ¼ கிலோ, பால் 1 லிட்டர், தேங்காய் 1, சர்க்கரை 1 கிலோ, நெய் 50 கிராம், ஏலக்காய்ப் பொடி ½ தேக்கரண்டி.

செய்முறை: தேங்காயைத் துருவ வேண்டும். கடலைப் பொடியாக அரைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், பால், சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளற வேண்டும். இத்துடன் கடலைப் பொடியைக் கலந்து, பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும் வரையில் வேகவிட வேண்டும். பிறகு நெய்யைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டுக் கொஞ்ச நேரம் குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்திருந்து எடுத்துச் சாப்பிடலாம்.

இப்படி, நிலக்கடலையில் இருந்து சுவையான உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம். நிலக்கடலையை ஓட்டோடு விற்காமல், பருப்பாக அல்லது மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்றால் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.


நிலக்கடலை VIMALA RANI

முனைவர் மா.விமலாராணி,

முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!