மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

மாம்பழ Heading Pic

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

முக்கனிகளில் முதற்கனியாம் மாங்கனி பழங்களின் இராணி. இதில், மனிதனுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ,சி, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் நிறைந்துள்ளன. கோடையில் மிகுதியாக விளைந்து, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களைப் பயன்படுத்தி, ஸ்குவாஷ், ஜாம், சிரப், கேண்டி, பார், ஊறுகாய், தொக்கு, சட்னி என, மதிப்புக் கூட்டப்பட்ட பல பொருள்களைத் தயாரிக்கலாம். சிறுதொழில் செய்ய விரும்புவோர், ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில், வீட்டிலிருந்தோ அல்லது குடிசைத் தொழிலாகவோ மாம்பழப் பொருள்களை உற்பத்தி செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். இது, சிறிய முதலீடு மிகுந்த இலாபம் என்னும் மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மாம்பழச் சாறு (ஸ்குவாஷ்)

தேவையான பொருட்கள்: மாம்பழக்கூழ் 265 கிராம், சர்க்கரை 425 கிராம், நீர் 250 கிராம், சிட்ரிக் அமிலம் 15 கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 6.5 கிராம், எசன்ஸ் 6.5 கிராம், லெமன் மஞ்சள் நிறமி 3 கிராம்.

செய்முறை: நன்கு பழுத்த நல்ல பழங்களை எடுத்துச் சுத்தமான நீரில் கழுவித் தோலை நீக்க வேண்டும். பின்பு, துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு கூழாக்க வேண்டும். இந்தக் கூழைச் சுத்தமான வெள்ளைத் துணியில் அல்லது நைலானில் வடிகட்டி எடுக்க வேண்டும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கொண்டு சர்க்கரைப் பாகைத் தயாரிக்க வேண்டும். பிறகு, இந்தப் பாகை வெள்ளைத் துணியில் வடிகட்டி நன்கு ஆற வைக்க வேண்டும். அடுத்து, இத்துடன் பழச்சாறு, எசன்ஸ், நிறமி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

இப்படித் தயாரித்த பழச்சாறு கெடாமல் இருக்க, பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்டைச் சேர்க்க வேண்டும். பிறகு, 80 டிகிரி செல்சியஸ் வரையில் சூடாக்கி, கொதிநீரில் கழுவிய புட்டிகளின் கழுத்து வரையில் நிரப்பி  காற்றுப் புகாமல் மூடி வைக்க வேண்டும். தேவையின் போது ஒரு பங்கு பழச்சாறுடன் மூன்று பங்கு நீரைச் சேர்த்துப் பருகலாம்.

மாம்பழ ஜாம்

தேவையான பொருள்கள்: மாம்பழம் 1 கிலோ, சர்க்கரை 250 கிராம், சிட்ரிக் அமிலம் 250 கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 6.5 கிராம், நிறமி தேவைக்கேற்ப.

செய்முறை: ஏற்கெனவே கூறியபடி மாம்பழக்கூழைக் தயாரிக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பழப்பாகு கெட்டியாகிப் பதமாக வரும்போது சிட்ரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். கரண்டியில் எடுத்து வழிய விடும்போது,  தாள் போல் விழுந்தால் சரியான பதமென்று அறியலாம். இதைக் கொதிநீரில் கழுவிய புட்டிகளில், சுத்தமான முறையில் நிரப்பிப் பாதுகாப்பாக வைத்தால், தேவையின் போது பயன்படுத்தலாம்.

மாம்பழத் தயார்நிலை பானம்

தேவையான பொருள்கள்: மாம்பழம் 1 கிலோ, சர்க்கரை 500 கிராம், நீர் 2.5 லிட்டர், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 2 கிராம்.

செய்முறை: முதலில், மாம்பழக்கூழைத் தயாரிக்க வேண்டும். அடுத்து, தேவையான அளவு சர்க்கரை, நீர், சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்துச் சர்க்கரைப் பாகைத் தயாரிக்க வேண்டும். பிறகு, பாகை வடிகட்டி அத்துடன் பழக்கூழைச் சேர்க்க வேண்டும். இத்துடன் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட், எசன்ஸைச் சேர்த்து, கிருமி நீக்கப்பட்ட புட்டிகளில் நிரப்பிப் பாதுகாப்பாக வைத்திருந்தால், தேவையின்போது, நன்றாகக் குலுக்கி விட்டுப் பருகலாம்.

மாம்பழ மிட்டாய் (கேண்டி)

தேவையான பொருள்கள்: மாம்பழம் 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, சிட்ரிக் அமிலம் 1.5 கிராம்.

செய்முறை: நன்கு பழுத்த கெட்டியான பழங்களை நீரில் கழுவித் தோலை நீக்கித் துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு, அந்தப் பழத் துண்டுகளை மெல்லிய துணியில் கட்டி வெந்நீரில் வைத்து எடுத்து ஆறவிட வேண்டும். பின்பு, சர்க்கரைப் பாகை சிட்ரிக் அமிலத்துடன் சேர்த்து, அதில் மாம்பழத் துண்டுகளை 10-12 மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு, அதிலிருந்து எடுத்து உலர வைத்தால் மாம்பழ மிட்டாய்கள் தயார். இவற்றைத் தேவைப்படும் போது, சர்க்கரைப் பொடியில் புரட்டிச் சாப்பிடலாம்.

மாம்பழ அல்வா (பார்)

தேவையான பொருள்கள்: மாம்பழக்கூழ் 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, சோள மாவு  20 கிராம், சிட்ரிக் அமிலம் 1.5 கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 400 மில்லி கிராம்.

செய்முறை: முதலில் பழக்கூழைத் தயாரிக்க வேண்டும். அடுத்துச் சிறிதளவு சோளமாவை நீரில் கட்டியின்றிக் கரைக்க வேண்டும். பின்பு, சர்க்கரை, சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச்சாறு, மாம்பழக்கூழ் ஆகியவற்றுடன் சோளமாவைச் சேர்த்து அடுப்பில் வைத்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும். இந்தக் கலவை, மூன்றில் ஒரு பங்காகக் குறையும் வரையில் காய்ச்ச வேண்டும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, அத்துடன் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்டைச் சேர்த்து, சதுர அல்லது செவ்வகத் தட்டில் அரை செ.மீ. உயரத்தில் பரப்பி, 60 டிகிரி செல்சியஸ் மின் உலர்த்தியில் ஏழு மணி நேரம் உலர்த்த வேண்டும். பிறகு, இதைத் தேவையான வடிவத்தில் வெட்டி, பாலித்தீன் பைகளில் இட்டுக் காற்றுப் புகாமல் வைக்க வேண்டும். இது ஓராண்டு வரையில் கெடாமல் இருக்கும். தேவையின் போது பயன்படுத்தலாம்.

குடிசைத் தொழிலாகப் பழக்கூழ் தயாரித்தல்

முதலீட்டுத் தொகை தோராயமாக ரூபாய் 50,000 வரை தேவைப்படலாம். இடம் சொந்தமாக அல்லது வாடகைக்கு. பழக்கூழ் அரைவை இயந்திரம் ரூ.30,000. எரிவாயு அடுப்பு அல்லது மின்னடுப்பு ரூ.5,000. பாத்திரங்கள், பலகைகள், கத்திகள், கரண்டிகள், வடிகட்டிகள், தேக்கரண்டிகள், மேசைக் கரண்டிகள் முதலியன ரூ.10,000.

20 கிலோ பழரசத்தைத் தயாரிப்பதற்கான செலவுகள்

தோராயமாக 35 கிலோ மாம்பழங்களில் இருந்து 60 லிட்டர் ஸ்குவாஷ் என்னும் பழச்சாற்றைத் தயாரிக்கலாம். இதை, 700 மில்லி வீதம், 86 புட்டிகளில் நிரப்பலாம். ஒரு புட்டிப் பழச்சாற்றை 100 ரூபாய்க்கு விற்றால், 86 புட்டிகளுக்கு ரூ.8,600 வரையில் கிடைக்கும். ஆகவே, ஒரு நாளைக்கு 3,925 ரூபாய் இலாபம் கிடைக்கும். அதாவது, 8,600-4,675 = ரூ. 3,925. இதையே ஒரு மாதம், அதாவது 25 நாட்கள் வேலை என்று கணக்குப் பார்த்தால், மாதத்திற்கு  98,125 ரூபாய் வரையில் சுயமாகச் சம்பாதிக்கலாம்.


மாம்பழ P.GEETHA

டாக்டர் .கீதா,

டாக்டர் அ.கார்த்தியாயினி, உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி,

கோடுவெளி, சென்னை.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!