தொழில் துறையிலும் பெரியளவில் பயன்படும் முருங்கை!

முருங்கை Drumstik

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

முருங்கையின் தாயகம் இந்தியாவாகும். இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும்; இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும்; குடற்புழுக்களை அழிக்கும்; இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக் கலந்து குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும். இதைப்போல, பூ, காய், வேர் ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் முருங்கைக் கீரையில் 1-3 வயதுக் குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் உள்ளன.

தொழில்துறைப் பயன்கள்

எண்ணெய்: முருங்கை விதையில் இருந்து 42% எண்ணெய் கிடைக்கிறது. இது உராய்வு மற்றும் சமையல் எண்ணெய்யாகப் பயன்படுகிறது. வாசனைத் திரவியம் தயாரிக்க உதவுகிறது. இதில் 70% ஒயிலிக் அமிலம் உள்ளது. மற்ற சமையல் எண்ணெய்களில் 40% ஒயிலிக் அமிலம் உள்ளது.

நீர்த் தூய்மை: முருங்கை விதைப் புண்ணாக்கு நீரைத் தூய்மைப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள பாலி எலக்ட்ரோலைட், படிமங்கள் மற்றும் தூசியை நீரின் அடியில் படிய வைக்கிறது. இது இயற்கையாகக் கிடைக்கும் பொருள் என்பதால், குடிநீரைச் சுத்தமாக்கவும், வீழ்படிவை உண்டாக்கிச் சமையல் எண்ணெய்யைத் தூய்மையாக்கவும் பயன்படுத்தலாம். இப்போது அசுத்த நீரையும் இது தூய்மையாக்கும் என அறியப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நீரைச் சுத்தப்படுத்த, ஒரு விதை போதும்.

எரிவாயு தயாரித்தல்: முருங்கை மரத்தை அரைத்து நீரில் கலந்து வடிகட்டும் போது கிடைக்கும் வடிபொருளில் 81% மீத்தேன் உள்ளது. ஒரு கிலோ வடிபொருளில் இருந்து 580 லிட்டர் மீத்தேன் வாயு கிடைக்கும். எனவே, எதிர்காலத்தில் இது சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படும்.

கீரைப் பொடி: முருங்கைக் கீரைப் பொடி மாத்திரையாகத் தயாரிக்கப்படுகிறது. சாம்பார்த் தூள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இக்கீரை சிறந்த உணவாகப் பயன்படுகிறது. இப்படி, பல்வேறு சத்துகளுடன் கூடிய தொழில் துறை மூலப்பொருளாகவும் பயன்படுவதால், எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாகும்.


முருங்கை SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி,

முனைவர் கரு.பசுபதி, முனைவர் த.பாலசுப்பிரமணியம்,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading