கொய்யா மரத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களாகும். இது, வெப்ப மற்றும் மித வெப்பப் பகுதிகளில் நன்கு வளரும்.
கொய்யாவில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, உடல் நலனுக்கு, பற்கள் மற்றும் எலும்பு வளச்சிக்கு முக்கியச் சத்தாகும்.
இத்தகைய சிறப்புமிகு கொய்யாவை, நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். அவற்றில் சுருள் வெள்ளை ஈயும் அடங்கும்.
பூச்சியின் விவரம்
கொய்யாவைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈயின் (அலிரோ டைக்கஸ் டிஸ்பர்சஸ்) பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும்.
இதன் தாக்குதல் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் அறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக, 1993 ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு உட்பட்ட கேரளம் மற்றும் குமரி மாவட்டத்தில், இதன் தாக்குதல் காணப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இந்த ஈயினம் பரவியது.
இந்தியாவில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல், 200-க்கும் மேற்பட்ட செடி வகைகளில் இருந்தாலும், கொய்யா, மிளகாய், மரவள்ளி, மல்பெரி, வாழை, பப்பாளி மற்றும் நிலக்கடலைச் செடிகளில் அதிகமாகும்.
வளர்ந்த பெண் வெள்ளை ஈ, சுருள் வடிவில் முட்டையை இடுவதால், இந்த ஈ சுருள் வெள்ளை ஈ எனப்படுகிறது.
இதன் இளம் பருவம் நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டது. இதன் உடலை, வெள்ளை மெழுகைப் போன்ற பொருள் மூடியிருக்கும்.
இலையின் அடியில் தங்கிச் சாற்றை உறிஞ்சும். வெள்ளைப் பூச்சிகளாக, இலைககளில் அடை அடையாக, மாவுப் பூச்சிகளைப் போல ஒட்டி யிருக்கும். அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
சேத அறிகுறிகள்
வளர்ந்த வெள்ளை ஈக்களும், இளம் பூச்சிகளும், ஊசி போன்ற வாயால், இலை மற்றும் பூங்கொத்துச் சாற்றை உண்டு உயிர் வாழும்.
இவற்றின் தாக்குதல் அதிகமாக உள்ள செடிகளில், தேனைப் போன்ற திரவக் கழிவு இருக்கும்.
இது, இலை மற்றும் பூங்கொத்துகளில் படிவதால் கரும் பூசணம் வளரும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடும்.
இந்தக் கழிவில் எறும்புகள் கூடியிருக்கும். தொடர்ந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். சில சமயம் இலைகள் உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். களைகளை அகற்ற வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை வைத்து, பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
என்கார்சியா ஹய்டெரிஸ், என்கார்சியா காடெல்பே ஆகிய ஒட்டுண்ணிகளை நிலத்தில் விடலாம்.
கிரிப்டோலேமஸ் மாண்டரொஸரி பொறி வண்டை விட்டும் கட்டுப்படுத்தலாம்.
மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்து சத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்கலாம்.
தாக்குதல் அதிகமாக இருந்தால், 0.01 சத இமிடா குளோபிரிட் 200 எஸ்.எல். அல்லது 0.06 சத ட்ரை அசோபாஸ் 40 இ.சி. மருந்தைத் தெளிக்கலாம்.
சீ.சின்னதுரை, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை- 625 104.
சந்தேகமா? கேளுங்கள்!