பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

பயறு வகை HP 3a3afed86e28adb0e6e6c98033b39ada

ந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைக் கடந்து போய்க் கொண்டு உள்ளது. ஆனால், சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது.

மேலும், தற்போது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளைத் தேவைக்கு மேல் இடுவதால், மண்வளமும் கெட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுகிறது.

இந்நிலையில், பயறுவகைப் பயிர்களின் மகசூலைப் பெருக்க, மண்ணை ஆய்வு செய்து அதற்கேற்ப உரமிட வேண்டும். இதனால், மண்வளம் காத்து மகசூலைப் பெருக்கலாம்.

மண்ணாய்வு

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அங்குள்ள நிலச்சரிவு, நிறம் மற்றும் பயிர்ச் சுழற்சிக்கு ஏற்ப,

பல பகுதிகளாகப் பிரித்து, தனித்தனியாக மண் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும்.

வரப்பு, வாய்க்கால், மரத்தடி நிழல், கிணற்றுக்கு அருகில், மட்கு, குப்பை, பூசணம் மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது.

அதிக பட்சமாக 5 எக்டருக்கு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்.

மண் மாதிரி எடுக்கும் காலம்: நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

உரமிட்டதும் எடுக்கக் கூடாது. குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது.

மண் மாதிரிகளைச் சேகரிக்கும் முறை: மண் மாதிரிகளை எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல் மற்றும் செடிகளை, மேல் மண்ணை நீக்காமல் கையால் அகற்ற வேண்டும்.

ஆங்கில எழுத்து V வடிவில், மண் வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும்.

பிறகு, நிலத்தின் மேல் பகுதியில் இருந்து, கொழு ஆழம் வரை, அதாவது, 15 செ.மீ. அல்லது 23 செ.மீ. ஆழத்தில், ஓர் அங்குலப் பருமனில் மண்ணைச் சேகரிக்க வேண்டும்.

இப்படி, ஓர் எக்டரில் 10-20 இடங்களில் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும்.

ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.

நுண் சத்துகளை அறிய வேண்டுமெனில், எவர் சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் மண் மாதிரிகளை எடுத்து பிளாஸ்டிக் வாளியில் இட வேண்டும்.

பிறகு, இவற்றை நன்றாகக் கலந்து அதிலிருந்து அரைக்கிலோ மண்ணைக் கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.

மண்வெட்டி, இரும்புச் சட்டியைப் பயன்படுத்தக் கூடாது.

கால் குறைப்பு முறை: வாளியில் சேகரித்த மண்ணைச் சுத்தமான சாக்கு அல்லது நெகிழித் தாளில் பரப்பி,

அதை நான்காகப் பிரித்து, எதிரெதிர் முனைகளில் உள்ள இரண்டு பகுதிகளைக் கழித்து விட வேண்டும்.

ஆய்வுக்குத் தேவைப்படும் அரைக் கிலோ மண் கிடைக்கும் வரை இம்முறையைத் திரும்பத் திரும்பக் கையாள வேண்டும்.

சேகரித்த மண் மாதிரியைச் சுத்தமான துணிப்பை அல்லது நெகிழிப் பையில் இட்டு அதன் மீது,

நில அளவை எண், இதற்கு முன் செய்த பயிர், இனி செய்யப் போகும் பயிர் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

உரம் மற்றும் பூச்சி மருந்து இருந்த சாக்கு அல்லது பையை, மண் மாதிரி வேலையில் பயன்படுத்தக் கூடாது.

மண் மாதிரி எடுக்கும் ஆழம்: புல் மற்றும் புல்வெளி சாகுபடிக்கு 2 அங்குல ஆழத்திலும்,

நெல், பயறு வகைகள், நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானியப் பயிர்கள் சாகுபடிக்கு 6 அங்குல ஆழத்திலும் மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

உர மேலாண்மை

விதை நேர்த்தி: ஓர் எக்டருக்குத் தேவையான விதைகளை நேர்த்தி செய்ய, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தயாரிப்பான ரைசோபியம் சி. ஆர்.யு.7 மூன்று பொட்டலம்,

தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் மூன்று பொட்டலம், பாஸ்போ பாக்டீரியா மூன்று பொட்டலம் தேவை.

இவற்றை ஆறிய கஞ்சியில் கலந்து, அதில் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்யாத நிலையில், எக்டருக்கு, ரைசோபியம் பத்துப் பொட்டலம்,

தாவர வளர்ச்சி ஊக்கி பாக்டீரியாக்கள் பத்துப் பொட்டலம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா பத்துப் பொட்டலம் தேவை.

இவற்றை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலில் கலந்து, விதைக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

உரமிடுதல்: மானாவாரி சாகுபடியில், எக்டருக்கு 12.5 கிலோ தழைச் சத்து, 25 கிலோ மணிச் சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்தை, விதைக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

இறவை சாகுபடியில், எக்டருக்கு 25 கிலோ தழைச் சத்து, 50 கிலோ மணிச் சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

நெல் தரிசாக இருந்தால், எக்டருக்கு 2 சத டி.ஏ.பி. கரைசலை, பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களில், 2 சத டி.ஏ.பி. கரைசல் அல்லது 2 சத யூரியா கரைசலை, பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இட வேண்டிய சத்துகள்: ஓர் எக்டர் மானாவாரி உளுந்து சாகுபடிக்கு, தழை: மணி: சாம்பல்: கந்தகச் சத்து முறையே 12.5: 25: 12.5: 10 கிலோ தேவை.

இறவை சாகுபடிக்கு முறையே 50: 50: 25: 20 கிலோ தேவை.

குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக இடாத நிலையில், ஜிப்சம் மூலம் கந்தகச் சத்தை இடலாம்.

நடவு வயலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நுண்ணுரக் கலவையை, எக்டருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட வேண்டும்.

ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க, 1:10 வீதம் நுண்ணுரக் கலவை: தொழுவுரத்தைக் கலந்து, ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.

மகசூலைக் கூட்டும் யூரியா கரைசல்: பயறுவகைப் பயிர்களில் மகசூலைக் கூட்டிட, ஒரு சத யூரியா கரைசலை, விதைத்த 30, 45 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும்.

டெல்டா பகுதி நெல் தரிசு பயறுவகைப் பயிர்களில், 2 சத டி.ஏ.பி. கரைசலைத் தெளிக்க வேண்டும்.

டி.என்.ஏ.யு. பயறு விந்தை: இது, பயறு வகைகளுக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இடுபொருள்.

இதனால், பூக்கள் உதிர்வது குறையும். விளைச்சல் 20 சதம் வரை கூடும். பயிர்களில் வறட்சியைத் தாங்கும் திறன் கூடும்.

இதை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, பயிர்கள் பூக்கும் போது தெளிக்க வேண்டும்.

இந்தக் கரைசலில், தேவையான அளவில் ஒட்டும் திரவத்தைச் சேர்க்க வேண்டும்.

வறட்சியைத் தாங்கும் இலைவழித் தெளிப்பு: வறட்சிக் காலத்தில் உளுந்தைப் பயிரிட்டால், அதன் இடைப் பருவத்தில், 2 சத பொட்டாசியம் குளோரைடு 100 பிபிஎம் போரான் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

ரபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு கரைசலைத் தெளித்தால் அதிக மகசூலைப் பெறலாம்.

தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்: பயறுவகைப் பயிர்களுக்குத் தழைச் சத்தை இடுவதற்கு மாற்றாக, உயிர்ம ஆதாரங்களை இடலாம்.

அதாவது, 50 சத நைட்ரஜனுக்கு மாற்றாக, ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம் வீதம் இடலாம்.

பயறு வகைகள் விளையும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 க்கும் குறைவாக இருந்தால், அந்நிலத்தில் சுண்ணாம்பை இட வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம்: பயிர்களில், ஒரு லிட்டர் நீருக்கு 40 மில்லி கிராம் என்.ஏ.ஏ. மற்றும் 100 மில்லி கிராம் சாலிசிலிக் அமிலம் வீதம் கலந்து, பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்

நெல் தரிசு பயறுவகைப் பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மானாவாரி மற்றும் இறவைப் பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. 20 கிராம் அல்லது 20 கிராம் யூரியா வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.


பயறு வகை P.KARUPPASAMY

பி.கருப்புசாமி, ப.சாந்தி, வி.மு.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading