இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், சர்க்கரையின் தேவையும் கூடி வருகிறது. ஆனால், கரும்பு சாகுபடி நிலப்பரப்புக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரச்சினைக்கு உரிய களர், உவர் நிலங்களைச் சீர்திருத்தி, கரும்பைப் பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்குவது அவசியம். இந்தியாவில் சுமார் 7 மில்லியன் எக்டர் பரப்பும், தமிழ்நாட்டில் சுமார் 4.7 இலட்சம் எக்டர் பரப்பும், களர் உவர் நிலங்களாக உள்ளன. இந்த 4.7 இலட்சம் எக்டர் பரப்பில், 2.8 இலட்சம் எக்டர் நிலங்கள், களர் நிலங்களாக உள்ளன. இதில், களர்நிலப் பரப்பு அதிகமாகும்.
களர் நிலம்
களர் நிலம் என்பது, மண்ணின் களித் துகள்களில், சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையாகும். மண்ணின் கார அமில நிலை, 8.5-க்கு மேலும், சோடிய அயனிகள் படிவு, 15 சதத்துக்கு மேலும் இருக்கும். மண்ணின் களித் துகள்கள், சோடிய அயனிகளைக் கூடுதலாக ஈர்த்து வைத்திருக்கும். அப்படி ஈர்த்து வைத்திருந்தால், மண்ணில் நீர் சேரும் போது, மண் கட்டி, சிறு துகள்களாக உடைந்து, களித் துகள்கள் தனித்தனியாகப் பிரிந்து விடும். அடுத்து, களர் நிலத்தில் மழை அல்லது பாசனம் மூலம், மண்ணின் கட்டமைப்புச் சிதைந்து, பிரிந்த களித் துகள்கள், மண்ணிலுள்ள துளைகளை அடையும்.
இதனால், மண்ணின் நீர்க் கடத்தும் திறன் குறைந்து, நீர்த் தேக்கம் ஏற்படும். பயிர்களின் வேர் சுவாசம் தடைபடும். களர் மண், கோடையில் இறுகியும், மழைக் காலத்தில் குழைந்தும் இருப்பதால், மண்ணில் காற்றோட்டம் குறைந்து, வேரின் சுவாசம், வளர்ச்சி மற்றும் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படும்.
இவ்வகை நிலத்தில், சோடியம் கார்பனேட் மற்றும் பை கார்பனேட் உப்புகள் அதிகமாக இருப்பதாலும், தழை, மணி, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள் குறைவாக இருப்பதாலும், பயிர்கள் சரிவர வளர்வதில்லை. நுண்ணுயிர்கள் மற்றும் அவற்றின் செயல் திறன், மிகவும் குறைவாக இருப்பதால், அங்ககப் பொருள்கள், சீரான அளவில் சிதைபடுவது இல்லை.
எனவே, உப்புகளால் பாதிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், அதிகமாக உள்ள களர் நிலங்களைச் சீர் செய்வது முக்கியம். களர் நிலத்தைச் சீர்திருத்தம் செய்வதில் பல முறைகள் உள்ளன. இவற்றில் முதலில் இருப்பது, ஜிப்சம் மூலம் களரைச் சரி செய்வது. இதற்கு, களர் நிலத்தைச் சமப்படுத்தி, சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். மண்ணின் இயக்கநிலை 8.5-க்கு மேலுள்ள பிரிவுகளில், ஜிப்சம் உப்பைப் போட்டு நீரைத் தேக்கி நிலத்தை நன்றாக உழ வேண்டும். இப்படிச் செய்யும் போது, மண்ணில் நன்றாகக் கலக்கும் ஜிப்சம், மாற்றுத் தன்மையுள்ள சோடியம் உப்பை, நீரில் கரையும் சோடியம் சல்பேட்டாக மாற்றும்.
இதன் பிறகு, உவர் நிலத்தில் செய்வதைப் போல், நீரைத் தேக்கி வைத்து வடிப்பதன் மூலம், சோடியம் மற்றும் இதர உப்புகளை வெளியேற்றலாம். இதனால், மண்ணின் கார அமில நிலை குறைந்து, கரும்பு வளர்ச்சிக்கு ஏற்ற, பௌதிக, இரசாயன மாற்றங்கள் ஏற்படும்.
மற்றொரு முறை, எரிசாராய ஆலைக் கழிவுநீரை, எக்டருக்கு 5 இலட்சம் லிட்டர் வீதம் விட்டு, ஏழு நாட்களுக்குப் பிறகு, 10-15 செ.மீ. உயரத்தில் வாய்க்கால் நீரைத் தேக்கி, 24 மணி நேரம் கழித்து வடிக்க வேண்டும். இதைப் போல, நல்ல பாசன நீரையும் 2-3 முறை தேக்கி வைத்து, வடியச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், களர் நிலம் சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாறும்.
களர் நிலத்தில் கரும்பு
பெரும்பாலும் களர் நிலக் கரும்பு சாகுபடியில், அதிக வருமானம் கிடைப்பது இல்லை. ஏனெனில், களர் மண்ணில் கரும்பின் முளைப்புத் திறன் மிகவும் பாதிக்கப்படும். கரும்புத் தோகைகளின் நுனியும் ஓரங்களும் காய்ந்து விடும். மேலும் சுருண்டும், வாடியும் இருக்கும். தூர்க்கட்டு, தண்டு மற்றும் வேர்களின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படும். கரும்பின் உயரமும் குறைந்து விடும். மேலும், கரும்புப் பயிர் ஆங்காங்கே திட்டுத் திட்டாகக் காய்ந்திருக்கும்.
இதனால், மகசூல் குறைவதோடு, கரும்புச் சாற்றின் தன்மையும், சர்க்கரைத் திறனும் பாதிக்கப்படும். இங்கே விளைந்த கரும்பு வெல்லத்தில், உப்புக் கூடுதலாக இருக்கும்.
களர் நிலக் கரும்பு சாகுபடியில், இத்தகைய எதிர் விளைவுகள் இருந்தாலும், தகுந்த இரகங்களை, உரிய பருவத்தில், சரியான உழவியல் உத்திகளைக் கொண்டு பயிரிட்டால், அதிக மகசூலைப் பெறலாம் என்பது உறுதி. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கரும்பு இரகங்கள் தேர்வு
கோ.சி.96071, கோ.சி.95071, கோ.சி.(க).6, கோ.கு.95076, கோ.கு.(க)5, கோ.94008, கோ.99004, கோ.99006, கோ.சி.(க)24 மற்றும் சி.2000-02 ஆகியன, களர் நிலையைத் தாங்கி வளரும் இரகங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை நடவு செய்யலாம். குறிப்பாக, கோ.சி.(க)6 இரகமும், சி.2000-02 இரகமும், களர் நிலத்தில் அதிக மகசூலைத் தந்துள்ளன.
கரும்பு நடவுக்கு ஏற்ற பருவம்
பெரும்பாலும் கரும்பு நடவு, டிசம்பர் முதல் மே மாதம் வரை நடந்தாலும், டிசம்பர் – ஜனவரி மாதம், அதாவது, முன்பட்ட நடவுப் பருவம் தான், களர் நிலத்தில் கரும்பைப் பயிரிட ஏற்றது. ஏனெனில், இந்தப் பருவத்துக்கு முன், வடகிழக்குப் பருவமழை நீர், களர் நில மேல் மண்ணில், தீமை தரும் நிலையில் உள்ள உப்புகளின் அடர்வைக் குறைத்து, கரணை நடவுக்கான நிலச்சூழலை உருவாக்குகிறது.
எரு இடுதல்
ஏக்கருக்கு 5 டன் வீதம் தொழுவுரம், கம்போஸ்ட் அல்லது காற்றோட்டம் கொண்ட 5 டன் கரும்பாலைக் கழிவை இடுவதால், களர் நிலத்தில் உள்ள உப்புத் தன்மை குறைகிறது. கரும்பாலை அழுக்கு, களர் நிலத்தைச் சீர் செய்வதுடன், கரும்புப் பயிருக்குத் தேவையான, தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தையும் தருகிறது. எனவே, கரும்பாலைக் கழிவால், மண் வளமும் கூடுகிறது.
ஜிப்சம் இடுதல்
மிதமான களர் நிலத்தில், கரணை நடவுச் சாலில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை இட்டு, களர் நிலைக்குக் காரணமான சோடிய உப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். ஜிப்சத்தில் உள்ள கால்சிய சல்பேட்டும் கார்பனேட்டும், மண்ணில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து, சோடிய சல்பேட் மற்றும் சோடிய கார்பனேட்டாக மாறும். இது, வடிநீரின் வழியே, கரைந்த நிலையில் வெளியேறி விடும்.
பசுந்தாள் ஊடுபயிர்
முன்பட்டக் கரும்பு சாகுபடிக்கு முன், நிலத்தில் நெல்லைப் பயிரிட்டு இருந்தால், தக்கைப்பூண்டு, சணப்புப் போன்ற, தழைச்சத்தைத் தரும் பயிர்களைத் தனிப் பயிராகப் பயிரிட இயலாது. இந்த நேரத்தில், நெல்லைப் பயிரிடாத நிலத்தில், தக்கைப்பூண்டு அல்லது சணப்பு அல்லது கொளுஞ்சி அல்லது நரிப்பயறைப் பயிரிட்டு, 30-45 நாட்களில் பிடுங்கி, கரும்பு சாகுபடி நிலத்தில் இட்டு உழுது விட்டால், களர் நிலத்திலும் கரும்பு சிறப்பாக வரும்.
அப்படிச் செய்ய இயலாத போது, கரும்பு நடவுக்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து, பாரின் இருபுறமும் பசுந்தாள் உரப் பயிர்களை விதைத்து, பூப்பதற்கு முன் பிடுங்கி, கரும்புக்கு அருகில் இட்டு மண்ணை அணைக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து, அதன் வேர் முடிச்சுகளில் சேமித்து வைக்கும். இது, கரும்பு பயிருக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தழைச்சத்தாகும். மேலும், பசுந்தாள் பயிரை விதைப்பதால், கரும்பில் தட்பவெப்பத் தாக்கம் குறையும், இடைக்கணுப் புழுவின் தாக்கமும் குறையும்.
தக்கைப்பூண்டு
தக்கைப்பூண்டு, களர் நிலத்துக்கு ஏற்ற பசுந்தாள் உரமாகும். களர் நிறைந்த நிலங்களில் மற்றும் ஈரப்பதம் அதிகமுள்ள நிலங்களில், தக்கைப்பூண்டு மிக நன்றாக வளரும். இதன் இலைகளில் உள்ள அமிலச்சாறும் புரதச்சத்தும், களர் நிலையைத் தாங்கி வளரக் காரணங்கள் ஆகும். இந்தச் செடிகளில், களர் மண்ணின் சோடிய அயனி மாற்று 70 சதம் இருக்கும் வரை, வேர் முடிக்சுகள் உருவாகும். இவை, காற்றிலுள்ள நைட்ரஜனைச் சேகரித்து மண் வளத்தைக் கூட்டும்.
ஒரு எக்டர் தக்கைப்பூண்டுச் செடிகளில், அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப, 45-80 கிலோ தழைச்சத்து நிலத்தில் சேமிக்கப்படும். கொத்தவரை, சணப்பு போன்ற பசுந்தாள் பயிர்களில் இருப்பதை விட, அதிகளவு கால்சியம், தக்கைப்பூண்டில் இருக்கிறது. இந்தக் கால்சிய அயனிகள், களர் நிலத்தில் உள்ள சோடிய அயனிகளை இடமாற்றம் செய்து வெளியேற்ற உதவும். தக்கைப்பூண்டுச் செடிகளின் வேர்கள் ஆழமாகப் பரவுவதால், நிலத்தில் உள்ள மணிச்சத்தை, அதிகளவில் வெளியே கொண்டு வரும்.
தக்கைப்பூண்டுக்கு அடுத்து, சணப்பு, கொத்தவரை போன்ற பசுந்தாள் பயிர்களைப் பயிரிடலாம். தக்கைப்பூண்டை விட அதிக வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது சணப்பு. கரும்பில், தக்கைப்பூண்டை ஊடுபயிராக வளர்த்து, மடக்கி மண்ணை அணைத்து விட்டதில், ஏக்கருக்கு 5-8 டன் மகசூல், கூடுதலாகக் கிடைத்துள்ளது.
கூடுதல் யூரியா
மண் ஆய்வின் அடிப்படையில் உரமிடுதல், மண் வளத்துக்கு நல்லது. ஆனால், களர் நிலத்தில் பரிந்துரை அளவை விட, 25 சதவீதத் தழைச்சத்தைக் கூடுதலாக அளிப்பது மிகுந்த பயனை அளிக்கும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தில் 25 சதம் மற்றும் சாம்பல் சத்தை நான்காகப் பிரித்து, 30, 60, 90 மற்றும் 120 நாளில் இட்டால், கரும்பு விரைவாக வளர்ந்து, நல்ல மகசூலைத் தரும். மேலும், யூரியாவில் உள்ள யூரிக் அமிலம், சிறிதளவு களர் நிலையைக் குறைக்கும்.
நுண்ணுரம் இடுதல்
களர் நிலத்தில் துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், மண் ஆய்வின்படி, சிங்க் சல்பேட்டை 25 சதம் கூடுதலாக, அதாவது, எக்டருக்கு 37.5 கிலோ வீதம் எடுத்து, கரும்புச் சால்களில் இடுவதாலும், நட்ட பயிரில் துத்தநாகப் பற்றாக்குறை இருந்தால், ஏக்கருக்கு 2 கிலோ சிங்க் சல்பேட், 1 கிலோ யூரியா வீதம் எடுத்து, நூறு லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம், மாலை 3 மணிக்கு மேல் தெளிப்பதாலும், கரும்பு மகசூல் அதிகமாகும்.
துத்தநாகம் குறைவாக இருந்தால், தண்டு வளர்ச்சித் தடைபட்டு, தூரில் இருந்து பக்கச் சிம்புகள் முளைக்கத் தொடங்கும். பிறகு, இந்தச் சிம்புகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இலைப்பரப்புக் குறைந்தும், இலைகளில் பரவலாக வெண் புள்ளிகளும் காணப்படும். துத்தநாகக் குறைபாடு கூடும் போது, கரும்புத் தண்டில் உள்ள நார்த் திசுக்கள், பஞ்சு நிலையை அடைந்து, தண்டின் மத்தியில் குழாயைப் போலத் தெரியும். இதனால், கரும்பின் எடையும், சர்க்கரைச் சத்தும் பெரிதும் குறைந்து விடும்.
முனைவர் மு.சண்முகநாதன், இணைப் பேராசிரியர், பயிர் இனப்பெருக்கத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!