My page - topic 1, topic 2, topic 3

முயல்களில் இனப்பெருக்க மேலாண்மை!

முயல் இனப்பெருக்க மேலாண்மை

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை.

ளர்ந்து வரும் பண்ணைப் பொருளாதாரத்தில் முயல் பண்ணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முயல்களைச் செல்லப் பிராணியாக வளர்ப்போரும், பரிசளிப்போரும், கறிக்காக வளர்ப்போரும் அதிகரித்து வருகின்றனர்.

மற்ற விலங்குகளை ஒப்பிடும் போது, முயல்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத் திறன் மிக அதிகம். பெண் முயலின் கர்ப்பக் காலம் தோராயமாக ஒரு மாதமாகும். ஒவ்வொரு முறையும் 5-10 குட்டிகளை ஈனும்.

ஈன்ற பிறகு 4-6 வாரங்களில் அடுத்த இனப்பெருக்க நிலைக்குப் பெண் முயல்கள் தயாராகி விடும். பெண் முயல்களின் வளமான இனப்பெருக்கக் காலம் 4-5 ஆண்டுகள் ஆகும். இந்தக் காலத்தில் ஒரு பெண் முயல் 34 முறை ஈனும்.

பெண் முயல்களின் பருவ வயது

ஆண் முயல்கள் 5-6 மாதங்களில் இனப்பெருக்க நிலைக்குத் தயாராகும். பெண் முயல்களில் பருவமடைதல், இனத்துக்கு இனம் சற்று மாறுபடும். சிறிய இன மற்றும் நடுத்தர இனப் பெண் முயல்கள், 4-6 மாதங்களிலும், பெரிய இன முயல்கள் 8-9 மாதங்களிலும் பருவத்தை அடையும்.

பெண் முயல்களில் இனப்பெருக்கச் சுழற்சி

பெண் முயல்களில், இனப்பெருக்கக் காலத்தின் போது அண்ட விடுப்பு அல்லது கருமுட்டை வெளியேற்றம், மற்ற விலங்குகளைப் போல் தன்னிச்சையான நிகழ்வு அல்ல. இது, முயல்களில் கலவி முடிந்து 10-12 மணி நேரத்துக்குப் பிறகு நடைபெறும். எனவே, முயல்கள் தூண்டப்பட்ட அண்டத்தை விடுவிக்கும் வகையைச் சார்ந்தவை.

இனப்பெருக்க அறிகுறிகள்

ஓய்வின்மை, பதட்டம், தலை மற்றும் முகத்தைக் கூண்டுகளின் ஓரங்களில் தேய்த்துக் கொள்ளுதல். இனப்பெருக்க உறுப்பானது வீங்கியும் ஊதா நிறத்திலும் காணப்படுதல்.

இனப்பெருக்கச் சேர்க்கை

ஒரு ஆண் முயலுக்குப் பத்து பெண் முயல்கள் வீதம் வளர்க்க வேண்டும். ஆண் முயல்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 7 முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இனப்பெருக்க நிலையில் இருக்கும் பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டில் விட வேண்டும். பெண் முயலின் கூண்டில் ஆண் முயலை இடுவது சரியான முறையல்ல.

ஏனெனில், ஆண் முயல்கள் மோப்பமிட்டுக் கொண்டே இருக்கும். சரியாகக் கலவியில் ஈடுபடாது. சில சமயங்களில் பெண் முயலுடன் சண்டையிடும். முயல்களின் இனச் சேர்க்கைக்கு அதிகாலை மற்றும் அந்திமாலை உகந்தது.

வெற்றிகரமான இனச் சேர்க்கையின் முடிவில், ஆண் முயல் வழக்கமாக அழுவது போல் ஒரு சத்தமிடும். பின்பு, பெண் முயலின் பக்கவாட்டில் ஆண் முயல் விழும்.

முயல்களில் இனப்பெருக்கக் காலம் என்று ஏதுமில்லை. தன் கூண்டில் விடப்பட்ட பெண் முயலை, ஆண் முயலானது சுற்றி வந்து அதன்மேல் தாண்டும். அல்லது இனச் சேர்க்கையில் ஈடுபடும். அப்போது ஆண் முயல் ஒருவித ஓசையை எழுப்பும். ஆண் முயலை ஏற்றுக் கொள்ளும் பெண் முயல் தன்மீது தாண்ட அனுமதிக்கும்.

கர்ப்பப் பரிசோதனை

முயல்களின் கர்ப்பக்காலம் 28-31 நாட்களாகும். முயல்களில் கர்ப்பத்தை உறுதி செய்ய இரு வழிகள் உள்ளன. வயிற்றைத் தொட்டுப் பார்த்து அல்லது ஸ்கேன் செய்து அறியலாம். பெண் முயல்களை ஆண் முயலுடன் விடலாம்.

வயிற்று வழி சோதனையின் போது, கை விரல்களால் வயிற்றை மெதுவாக அழுத்திப் பார்க்க வேண்டும். 10-14 நாட்களுக்குப் பிறகு இப்படிச் செய்யலாம். அப்போது பெண் முயல் கர்ப்பமாக இருந்தால், இரண்டு விரல்களுக்கு நடுவில் கூழாங்கல் போன்ற ஓர் உறுப்புக் கிட்டும்.

இரண்டாவது, கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டிய பெண் முயல்களை, ஆண் முயலுடன் விட வேண்டும். ஆனால், இது சரியான பரிசோதனை முறையல்ல. ஏனெனில், மற்ற விலங்குகளைப் போலில்லாமல் முயல்கள், கர்ப்பக் காலத்திலும் ஆண் முயலுடன் சேர்க்கையில் ஈடுபடும்.

சில சமயங்களில், கர்ப்பமாகாத முயல்களில் பொய்யான கர்ப்பம் என்னும் நிலை ஏற்படும். வளமற்ற அல்லது தரமற்ற ஆண் முயல்களைச் சேர்க்கையில் ஈடுபடுத்துவதால், பெண் முயல்களில் இந்த நிலை பரவலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் உள்ள பெண் முயல்களில், பால் சுரப்பிகள் மற்றும் பால் காம்புகள் வீங்கியிருக்கும்.

அதிகக் கோபத்துடனும், அடிக்கடி சிறுநீரைக் கழித்து, தனது இருப்பிடத்தைக் குறித்துக் கொண்டும், அடிவயிற்று முடிகளைப் பிடுங்கி, குட்டி போடுவதைப் போல் கூடுகளைத் தயார் செய்யும். பொய்க் கர்ப்பம் கொண்ட பெண் முயல்களின் அடிவயிற்றில் முடியற்ற தோற்றத்தைக் காணலாம். இதற்கு, சிகிச்சை எதுவும் தேவையில்லை.

ஈனுவதற்கான அறிகுறிகள்

உண்ணாமல் இருக்கும். பொதுவாக, ஈனுவதற்கு 24-48 மணி நேரத்துக்கு முன் இந்நிலை காணப்படும். அடிவயிற்றில் உள்ள முடிகளைப் பிடுங்கிக் கூடுகளைத் தயாரிக்கும். இந்நிலையில், பெண் முயலின் கூண்டில், வைக்கோல் அல்லது மரத்தூளை இடலாம். ஈனத் தொடங்கி அதிகளவு 30 நிமிடங்களில் அனைத்துக் குட்டிகளையும் போட்டு விடும்.

ஒரு பெண் முயல் ஓர் ஈற்றில், 3-12 குட்டிகள் வரை போடும். கர்ப்பத்தின் கடைசி வாரத்திலும், கர்ப்பம் தரித்த பிறகு குட்டிகளைப் பிரிக்கும் வரையிலும், பெண் முயல்களுக்கு உணவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறாக, தகுந்த முறையில் முயல்களில் இனப்பெருக்க நிர்வாகத்தைக் கடைப்பிடித்தால், மாதம் ஒருமுறை குட்டிகளைப் பெற்றுப் பயனடையலாம்.


மரு.அ.ரேஷ்மா, கால்நடை ஈனியல் மற்றும் இனவிருத்தியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஹஸ்ஸான், கர்நாடகம் – 573 202.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks