பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

பாரம்பரிய நெல் இரகம்

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன்.

ந்தியாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பொதுவாக, அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை மிக்கவை.

கருங்குருவை: தோல் நோய்களைப் போக்கும். யோக சக்தியைத் தரும்.

மாப்பிள்ளைச் சம்பா: புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தைச் சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மை கூடும்.

காட்டுயானம்: இதிலுள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் குணங்கள் இதய நோய்க்கு அரிய மருந்தாகும். டைப் 2 சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

அன்னமழகி: மிகவும் இனிப்புச் சுவையுள்ள அரிசி. சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கும். உடலுக்குச் சுகத்தைக் கொடுக்கும்.

இலுப்பைப்பூச் சம்பா: பித்தத்தால் விளையும் சிற்சில ரோகம், அதிகத் தாகம், வெப்பம் ஆகியவற்றைப் போக்கும்.

கவுனி அரிசி: புது மாப்பிள்ளை விருந்துணவு அரிசி. இதைக் கஞ்சியாகக் குடித்தால் குதிகால் வலி நீங்கும்.

சிவப்புக்கவுனி அரிசி: பலகார அரிசி. இட்லி, ஆப்பம், பணியாரம் செய்ய ஏற்றது. குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். கருவில் குழந்தை நலமாக உருவாகும்.

சேலம் சன்னா: கர்ப்பக் காலத்தில் உண்ண வேண்டிய அரிசி. குழந்தைப்பேறு நல்ல முறையில் நடக்கும். களைப்பே இல்லாமல் வேலை செய்ய உதவும். நாய்க்கடி விஷத்தை முறிக்கும்.

பூங்கார் சம்பா: மகப்பேறு காலத்தில் உண்ண வேண்டிய அரிசி, தாய்ப்பால் சுரக்கும்.

கட்டச்சம்பா அரிசி: நோயெதிர்ப்பு சக்தியைத் தரும்.

சிங்கினிகார் அரிசி: எல்லா நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி, உடல் நலம் பெற உதவும்.

பனங்காட்டுக் குடவாழை அரிசி: தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி. அந்த அளவில் நோய் எதிர்ப்பையும் உடல் வலுவையும் தரும்.

கருடன் சம்பா: நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி.

தங்கச்சம்பா: இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்புத் திறனும் கிடைக்கும்.

கல்லுண்டைச் சம்பா: இதை உண்டால், மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமை கிடைக்கும். நல்ல சொல் வளமும் உண்டாகும்.

காடைச்சம்பா: இந்த அரிசி காய்ச்சலை நீக்கும். விந்து விருத்தியும், அதிகப் பலமும் உண்டாகும்.

காளான் சம்பா: உடலுக்கு மலை போன்ற உறுதியை, சுகத்தைத் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

கிச்சிலிச் சம்பா: பலம், உற்சாகம் மற்றும் உடல் பளபளப்பை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

குறுஞ்சம்பா: பித்தம், கரப்பான் நீங்கும். விந்து விருத்தி உண்டாகும். வாதநோய் நீங்கும்.

கைவரைச் சம்பா: உடலுக்கு வலிமையும், நலமும் கிடைக்கும். வாதநோய் நீங்கும்.

சீதாபோகம்: உடல் பலம், தேகப் பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். நன்கு செரிக்கும்.

புனுகுச்சம்பா: இந்த அரிசியை உண்டால், வனப்பு, அமைதி, பலம் கிடைக்கும். தாகம் நீங்கும்.

மணக்கத்தை: தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்களைக் குறைக்கும்.

மணிச்சம்பா: அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் கழிதல் குறையும். குழந்தைகள் மற்றும் முதியோர்க்கு அதிகப் பலத்தைக் கொடுக்கும்.

மல்லிகைச் சம்பா: மிகவும் சுவையானது. உடல் நலத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், உடல் வெப்பம் ஆகியவற்றைப் போக்கும்.

மிளகுச்சம்பா: பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பலவித ரோகங்களைப் போக்கும்.

மைச்சம்பா: வாதம், பித்தத்தைக் குறைக்கும். வாத கோபம், வாந்தியைப் போக்கும்.

வளைத்தடிச்சம்பா: வாத, பித்தத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை நீக்கும்.

வாலான் அரிசி: மந்தமும், தளர்ச்சியும் குறையும். உடல் அழகும், செழுமையும் அடையும்.

மூங்கில் அரிசி: மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும். இந்தப் பூவிலிருந்து வரும் காய்கள் தான் மூங்கில் நெல். மூங்கில் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் திடமாகும். உடல் இறுகும், கொடிய நோய்கள் ஓடி விடும்.

பழைய அரிசி: பாலர், முதியோர்க்கு மிகவும் உகந்தது. பசியும், உடல் குளிர்ச்சியும் உண்டாகும். சில நோய்களும், கபமும் குறையும்.

கார் அரிசி: உடல் உறுதியடையும். தசைகள் நன்கு வளர்ச்சி பெறும். உடல் தோற்றத்தில் கவர்ச்சித் தோன்றும். சருமம் மென்மையாக, பட்டுப் போல அமையும்.

குண்டுச்சம்பா: நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால், கரப்பான் பிணியை உண்டாக்கக் கூடும்.

குன்றுமணிச் சம்பா: வாதக் குறைகளை நீக்கும். விந்தை, உடல் வன்மையைப் பெருக்கும்.

சீரகச் சம்பா: சிறு வாதநோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிடத் தூண்டும்.

கோரைச்சம்பா: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். உடற்சூடு, நமைச்சல், அதி மூத்திரம் ஆகியவற்றை நீக்கும்.

ஈர்க்குச் சம்பா: மிகவும் சுவையாக இருக்கும். கண் நலனுக்குச் சிறந்தது.

தூயமல்லி அரிசி: மேலே குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி. இந்த அரிசி தூய மல்லிகையைப் போல் பளபளவென இருக்கும். மக்கள் எதிர்பார்க்கும் எல்லாக் குணங்களும் உள்ள அரிசி. நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் அரிசி.


Pachai boomi Vimalarani

முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading