கட்டுரை வெளியான இதழ்: மே 2021
பன்றிகளின் தீவனத்தில் தரமான புரதச்சத்தைப் போதியளவில் அளிப்பது அவசியமாகும். அவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு அமினோ அமிலம் மிகையாகவோ, குறைவாகவோ இடம் பெற்றாலும், பன்றிகள் உண்பதைக் குறைத்து அவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும்.
பன்றிகளின் உடல் வளர்ச்சி, உடல் பராமரிப்பு, இனப்பெருக்கம், பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆறு வகைச் சத்துகள் தேவை. அவையாவன: நீர், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள்.
புரதச்சத்து மூலங்கள்
இவை இரண்டு வகைப்படும்: 1. விலங்குவழிப் புரதம்: இறைச்சி, எலும்புத் தூள், மீன் தூள். 2. தாவரவழிப் புரதம்: சோயாத்தூள், தேங்காய்ப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டைப் புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு. இந்த இருவகைப் புரதங்களையும் இணைத்துக் கொடுத்தால், தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் கிடைத்து விடும்.
விலங்குவழிப் புரதம்
இறைச்சி மற்றும் எலும்புத்தூள்: இவற்றில் 50-55% புரதமும், 2.5% லைசினும் உள்ளன. மேலும், கால்சியமும் பாஸ்பரசும், எளிதில் செரிக்கும் அமினோ அமிலங்களும் உள்ளன. இவற்றைத் தீவனத்தில் சேர்க்கும் போது, தாவரவழிப் புரதம் குறைவாகவே தேவைப்படும். மேலும், இவற்றால் இளம் பன்றிகள் தீவனத்தை அதிகமாக உண்ணும்.
தாவரவழிப் புரதம்
சோயாத்தூள் முக்கியப் புரதச்சத்து மூலமாக, பெரும்பாலான தீவனங்களில் அங்கம் வகிக்கிறது. ஆனால், இதிலுள்ள எதிர்ச்சத்துக் காரணி, சத்தை முழுமையாகப் பெற விடாமல் தடுக்கிறது. இதைத் தடுக்க, சோயாத்தூளைச் சூடுபடுத்தியோ அல்லது வறுத்தோ, பன்றிகளுக்குக் கொடுக்க வேண்டும். தாவரப் புரதங்களில் சோயாத்தூள் முதன்மையான புரதமாகும். இதில் 48% புரதமும், 3% லைசினும் உள்ளன. பருத்திக் கொட்டையில் 40% புரதம், 1.5% லைசின் உள்ளன. சூரியகாந்தி தூளில் 30% புரதம் 1% லைசின் உள்ளன.
அமினோ அமிலங்கள்
புரத உணவுகள் மூலம் கிடைக்கும் அமினோ அமிலங்கள், பன்றிகளின் தசை வளர்ச்சி மற்றும் உடல் பராமரிப்பில் முக்கியப் பங்களிக்கின்றன. மேலும், சினைப் பன்றிகளின் கரு வளர்ச்சிக்கும், பிற திசு வளர்ச்சிக்கும், பால் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன.
மொத்தமுள்ள 22 அமினோ அமிலங்களில், 12 அமினோ அமிலங்கள் பன்றிகளின் உடலில் இயல்பாகவே உற்பத்தியாகி விடும். மீதமுள்ள 10 அமினோ அமிலங்கள் உணவு மூலம் தான் கிடைத்தாக வேண்டும். அவை அர்ஜினைன், ஹிஸ்டிடின், ஐசோலுயூசின், லுயூசின், லைசின், மெத்தியோனின், பினைல் அலனின், திரியோனின், டிரிப்டோபென், வேலைன். இவை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் எனப்படுகின்றன.
இளம் பன்றிகளுக்குத் தொடக்கத்தில் 1.70% லைசின் தேவைப்படும். ஆனால், மத்திய மற்றும் வயதான பன்றிகளுக்குக் குறைவாகவே தேவைப்படும். அதாவது, 1.53% மற்றும் 1.40% கொடுத்தால் போதும். பன்றிகள் வளர வளர லைசின் அளவு குறையும். வளரும் பன்றிகளுக்குத் தேவைப்படும் 1.12% லைசின், வளர்ந்த பன்றிகளுக்கு 0.71% ஆகக் குறைகிறது.
பன்றித் தீவனத்தில் உள்ள மக்காச்சோளத்தில், லைசினும் டிரிப்டோபென்னும் மிகக் குறைவாகவே உள்ளன. சோளம், பார்லி, கோதுமையிலும், லைசினும் திரியோனினும் குறைவாகவே உள்ளன. சோயாப் புண்ணாக்கில் மித்தியோனின் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைக்கிறது. இவற்றைப் பிற தானியங்களில் கலந்து கொடுத்தால், போதுமான மெத்தியோனின் கிடைக்கும். இளம் பன்றித் தீவனத்தில் சோயாப் புண்ணாக்கு அதிகம்.
பாலில் அவசிய அமினோ அமிலங்கள் போதியளவில் உள்ளன. ஆனால், பாலைப் பன்றிகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால் செலவு அதிகமாகும். தாயிடமிருந்து பிரிக்கப்படாத பன்றிகளுக்கு இளம் பன்றித் தீவனத்தைத் தர வேண்டும். அதாவது, குட்டிகளின் 7-14 நாட்கள் வயதில் தொடங்கி தாயிடமிருந்து பிரிக்கப்படும் வரையில் கொடுக்க வேண்டும். இதில், 20% புரதம் இருக்க வேண்டும். இளம் பன்றிகளில் இரத்தச் சோகையைத் தவிர்க்க, தீவனத்தில் பெஃரஸ் சல்பேட்டைச் சேர்க்க வேண்டும்.
வளரும் பன்றித் தீவனம்
எட்டு வாரங்களில் 12-15 கிலோ எடையை அடைந்த பன்றிகளைத் தாயிடம் இருந்து பிரித்து, வளரும் பன்றிகளுக்கான தீவனத்தை வழங்க வேண்டும். இதில் 15% புரதம் இருக்க வேண்டும்.
வளர்ந்த பன்றித் தீவனம்
35-50 கிலோ எடையுள்ள பன்றிகள் வளர்ந்த பன்றிகளாகும். இவற்றுக்கு வளர்ந்த பன்றிகளுக்கான தீவனத்தை அளிக்க வேண்டும். இதை அந்தப் பன்றிகள் 60-70 கிலோ எடையை அடையும் வரை அளிக்கலாம். இந்தத் தீவனத்தில் 14% புரதம் இருக்க வேண்டும். இப்படி, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது குறைந்த ஆற்றலுள்ள தீவனங்களைக் கொடுத்து வளர்த்தால், பன்றிகள் கனமாவதைத் தடுக்கலாம்.
சினைப் பன்றித் தீவனம்
சினைப் பன்றிக்குத் தினமும் 2-2.5 கிலோ உணவைத் தர வேண்டும். இந்தக் காலத்தில் தீவனத்தை அதிகமாகக் கொடுத்தால், தொடக்கக் காலச் சிசுக்கள் இறக்க நேரிடும். சினைப்பன்றி ஈனும் நாளில் 250 கிராம் கோதுமைத் தவிட்டைத் தர வேண்டும். இது, சரியான பால் உற்பத்திக்கு உதவும்.
இர.ருத்ரகுமார்,
சா.செந்தமிழன், வெ.வருதராஜன், நா.சிவப்பிரகாசம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.
சந்தேகமா? கேளுங்கள்!