கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சிறு தானியம் தினையாகும். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தினை பயிரிடப்பட்டு வருகிறது. தினைப்புலம் காத்தாள் வள்ளி என்கிற தமிழ்ப்பாட்டின் மூலம், முருகக் கடவுளின் துணைவியான வள்ளி, வேட்டுவ மன்னனின் மகளாகப் பிறந்து தினை விளைந்த காட்டை, காக்கை, குருவிகளிடம் இருந்து காத்து வந்தாள் என்பது விளங்குகிறது.
தேனும் தினை மாவும் உண்டு வாழ்ந்தவர்கள் அக்கால மக்கள் என்று இலக்கியம் கூறுகிறது. மற்ற தானியங்களில் உள்ளதை விட தினையில் சத்துகள் அதிகமாக உள்ளன. தினை, மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. நூறு கிராம் தினையில் 331 கிலோ கலோரிகள் உள்ளன. 12 கிராம் புரதம், 4 கிராம் கொழுப்பு, 31 மி.கி. சுண்ணாம்புச் சத்து, 2.8 மி.கி. இரும்புச் சத்து, 32 மை.கி. கரோட்டீன், 290 கிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை அடங்கியுள்ளன. தினையிலிருந்து தயாரிக்கக் கூடிய சுவையான பொருள்களைப் பற்றிப் பார்ப்போம்.
தேனும் தினை மாவும்
தேவையான பொருள்கள்
சுத்தம் செய்த தினையரிசி-ஒரு குவளை,
தேன்-அரைக் குவளை.
செய்முறை
தினையரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டு மாவாக அரைக்க வேண்டும். இந்த மாவுடன் தேனைச் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடித்து அல்லது அப்படியே உண்ணலாம்.
தினை அதிரசம்
தேவையான பொருள்கள்
சுத்தம் செய்த தினையரிசி-ஒரு கிலோ,
வெல்லம்-அரைக் கிலோ,
சுக்கு-5 கிராம்,
ஏலக்காய்-10,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை
தினையரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, வெல்லத்துடன் 50 மில்லி நீர், ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துப் பாகு பதத்துக்குத் தயாரிக்க வேண்டும். பாகு தயாரானதும் தினை மாவு, சுக்கு, ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கெட்டியாக அதிரசப் பதத்துக்குப் பிசைந்து, சூடான எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.
தினைப் பொங்கல்
தேவையான பொருள்கள்
சுத்தம் செய்த தினையரிசி-முக்கால் குவளை,
பாசிப்பருப்பு-கால் குவளை,
நீர் மூன்று குவளை,
பச்சை மிளகாய்-மூன்று,
சீரகம்-ஒரு தேக்கரண்டி,
மிளகு-ஒரு தேக்கரண்டி,
நறுக்கிய இஞ்சி-ஒரு தேக்கரண்டி,
மஞ்சள் தூள்-சிறிதளவு,
நெய் அல்லது எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி,
முந்திரி-பத்து,
உப்பு-தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை-சிறிதளவு,
பெருங்காயம்-இரண்டு சிட்டிகை.
செய்முறை
தினையரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இத்துடன் பாசிப்பருப்பு, நீர், மஞ்சள் தூளைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். இன்னொரு அடுப்பில் எண்ணெய்யைச் சூடேற்றி அதில் நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை வதக்க வேண்டும். அதோடு முந்திரியையும் பெருங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, வேக வைத்த தினையரிசியுடன் உப்பையும் வதக்கிய பொருள்களையும் சேர்த்து நன்கு கிளறி, தேங்காய்ச் சட்னியுடன் சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தினைப் பாயசம்
தேவையான பொருள்கள்
சுத்தமான தினையரிசி-ஒரு குவளை,
தேங்காய்த் துருவல்-அரைக் குவளை,
வெல்லம்-ஒன்றரைக் குவளை,
பால்-இரண்டு குவளை,
நீர்-மூன்று குவளை,
ஏலக்காய்-நான்கு,
நறுக்கிய முந்திரி-ஒரு மேசைக் கரண்டி,
நறுக்கிய பாதாம்-ஒரு மேசைக் கரண்டி,
உலர் திராட்சை-ஒரு தேக்கரண்டி,
நெய்-ஒரு தேக்கரண்டி.
செய்முறை
தினையரிசியை மூன்று குவளை நீரில் வேக வைக்க வேண்டும். பிறகு, இத்துடன் வெல்லம், பாலைச் சேர்த்துக் கிளற வேண்டும். கடாயில் நெய்யை விட்டு, முந்திரி, பாதாம், திராட்சை, தேங்காய்த் துருவலை வதக்கி, ஏலக்காயுடன் வேக வைத்த தினையரிசியை நன்கு கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தினையிலிருந்து நமக்குப் பல சத்துகள் கிடைக்கின்றன. அதனால், தினையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வோம்.
முனைவர் மா.விமலா ராணி,
முனைவர் பா.குமாரவேல், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்-603203.