வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீங்கள் அளித்து வரும் நல்ல ஆதரவின் காரணமாக, நமது பச்சை பூமி இதழ் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இதழை வெளியிடுவதன் மூலம், பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. இலாபம், இழப்பு என்னும் சிந்தையின்றி, விவசாயப் பெருமக்களுக்கு நம்மால் இயலும் வகையில் உதவி வருகிறோம் என்பதில் மனம் நிறைவடைகிறது. விவசாய வளர்ச்சிக்கான பச்சை பூமியின் பணி இன்னும் பல வடிவங்களில் தொடர உள்ளது.
இன்றைய ஒட்டுமொத்த உலக மனித நிலையைப் பார்க்கும் போது, மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா என்னும், கவியரசு கண்ணதாசனின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கு, கொரோனா என்னும் நச்சுயிரியால் மனித வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது.
அரசியல் கட்சியினர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய கொரோனா ஆட்சியில் அது நடந்து கொண்டிருக்கிறது. நாடெங்கும் உள்ள ஆற்றுநீர், ஊற்றுநீரைப் போலத் தெளிந்த நீராக, அள்ளிக் குடித்துத் தாகம் தீர்க்கும் நீராக ஓடிக் கொண்டிருக்கிறது. வேதிக்கழிவை வெளியேற்றும் ஆலைகள் எல்லாம் கொரோனாவால் மூடப்பட்டதால் இந்த நிலை.
சாலையெங்கும் இருபத்து நான்கு மணிநேரமும் இடைவிடாது ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் நின்று போனதால், காற்று மண்டலத் தூசு குறைந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரிப் பயன்பாடு குறைந்ததால், சூழல்மாசு மட்டுப்பட்டிருக்கிறது. அதனால், புவி வெப்பமும் குறைந்துள்ளது. எனவே, இந்தக் கடும் கோடையில் இதமான சூழலும் நிலவுவதை உணர முடிகிறது. அதனாலோ என்னவோ இவ்வாண்டில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே பெய்ய உள்ளது.
மனித நடமாட்டம் முடங்கிப் போனதால், விலங்கினங்கள் அச்சமின்றி அவற்றின் வாழ்விடங்களில் உலவ முடிகிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்க்க முடிகிறது. ஆக, இயற்கை நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது மெய்யாகி இருக்கிறது. மொத்தத்தில், எப்போதும் உயிரினங்கள் வாழத்தக்கதாக, இயற்கை தன்னைப் புதுப்பித்து வருகிறது.
கிருமிகள் இல்லாத உலகத்தில் நாம் வாழ முடியாது. கால ஓட்டத்தில் அவ்வப்போது உருவாகும் இத்தகைய கிருமிகளை எதிர்கொள்ளும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொண்டால், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஓடிக்கொண்டே இருக்கலாம். இதையும் கடந்து நாம் வாழத்தான் போகிறோம்.
மீண்டும் கவியரசு கண்ணதாசனின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல்தோறும் வேதனை இருக்கும்; வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை; எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
ஆசிரியர்