மரங்களை வளர்ப்பதற்கான சூளுரையை எடுத்துக் கொள்வோம்!

மரங்களை வளர் gettyimages 1329369484 custom 885a687ec4ed7acfd56a918dbc51f9204cebcf8b s1100 c50

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்னும் பாடலைப் போல, நமது வாழ்நாளில் ஓராண்டு கழிந்துள்ளது. ஆனால், நமது அனுபவப் படிப்பு ஓராண்டு கூடியுள்ளது. கடந்தாண்டில் நமக்குக் கிடைத்த பட்டறிவின் அடிப்படையில், இந்தாண்டில் இன்னும் நமது வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்வோம்.

அன்பு, அமைதி, இனிமை நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக, நாம் அனைவரும் அவரவர் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சிலர் இந்த ஓட்டத்தில் வெற்றியைக் கண்டிருக்கலாம். பலருக்கு அந்த நிலை இன்னும் கிட்டாமல் இருக்கலாம். அதற்காகச் சோர்ந்து துவண்டு விடத் தேவையில்லை. இன்னும் ஓடுவோம். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு எல்லையுண்டு. நாம் உள்ளிட்ட உலகிலுள்ள உயிர்களின் உடல் வளர்ச்சிக்கு எல்லையுண்டு. ஆனால், நமது உழைப்புக்கும், அதனால் கிடைக்கப் போகும் இனிமையான சூழல் சார்ந்த வளர்ச்சிக்கும் எல்லையே இல்லை. உண்மையும் உழைப்பும் நம்மிடம் இருக்கும் வரையில், நமது மனம் சார்ந்த, சுகம் சார்ந்த வளர்ச்சி பெருகிக்கொண்டே இருக்கும்.

கடந்தாண்டில் மேற்கொண்ட முயற்சிகளில் சில இலக்கை அடையாமல் இருந்திருக்கலாம். நமது உழைப்புச் சரியானது என்றால் அதற்கான பயன் நம்மிடம் வந்தே தீரும். அதனால், கவலைப்படத் தேவையில்லை. கவலை என்பது உழைப்பைத் தடுக்கும்; உடலைக் கெடுக்கும். எனவே, அதற்கு இடம் தரவே கூடாது.

இந்த நேரத்தில் இன்னொன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். மனித சமூகம் தன்னலம் மிக்கதாக அமைந்து விடக்கூடாது. எனவே, நமக்காக என்னும் நிலையைக் கடந்து, சமூக வெளியிலும் நமது உழைப்பு இருக்க வேண்டும். இங்கே முக்கியமாகக் கூற வேண்டியது, நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் சிதைந்து வருகின்றன. இதற்குக் காரணம் மனித சமூகமே என்பதை மறுக்க முடியாது.

இவற்றை மேலும் சிதையாமல் காக்கும் பொறுப்பும் நம்மையே சாரும். இவை சரியாக இருந்தால் தான் நம் உழைப்பின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். மரங்கள் இருந்தால் நீர்வளம் கூடிவிடும். மரங்கள் வளர்ந்தால் நிலவளம் பெருகிவிடும். மரங்கள் பெருகினால் காற்று மாசு அகன்று விடும். மரங்கள் ஆற்றும் இந்த மகத்தான பணியை மற்ற யாதாலும் நிகழ்த்த இயலாது. இந்த மரங்களை வளர்ப்பது என்பது, நாம் மூச்சு விடுவதைப் போன்றது.

எனவே, இந்தாண்டில் நமது நலனுக்கான உழைப்புடன், இந்த மரங்களை வளர்ப்பதற்கான சூளுரையையும் எடுத்துக் கொள்வோம். மரங்களை வளர்த்தால் மழை வரும்; மண்ணில் வளமான நிலை வரும்!


ஆசிரியர்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!