மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

கால்நடைகளுக்குச் சமச்சீர் தீவனம் அளிக்கவும், பாலுற்பத்தி மற்றும் உடல் எடை கூடவும் சரியான தீவனத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.

பசுந்தீவனம்

மழைக்காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்குக் கால்நடைகள் தயங்கும். எனவே, மழைக்கால உணவுத் தயாரிப்பு, அதை அளிக்கும் முறை போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளைக் கால்நடை வளர்ப்போர் அறிந்து கொள்ள வேண்டும்.

மழையில் நனைந்த புல்லை உண்ணும் கால்நடைகள், கழிச்சல், செரிமானச் சிக்கல், புழுக்களின் தாக்கம் ஆகியவற்றால் அவதிப்படும். எனவே, மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லைச் சற்று நேரம் உலர வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பு முறைகள்

கால்நடை வளர்ப்பில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது, கொட்டத்திலேயே தீவனத்தை அளித்து வளர்ப்பது என இரு முறைகள் உள்ளன. மேய்ச்சல் முறை கால்நடை வளர்ப்பே தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் மழைக்காலத்தில் புல்லை அதிகமாக உண்பதால், கழிச்சல் உண்டாகிறது. நீண்ட வறட்சிக்குப் பின் மழையில் முளைத்த புற்களை உண்பதால், வயிறு உப்புசம், செரிமானச் சிக்கல் உண்டாகும். எனவே, மழைக்காலத்தில் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மேய்க்கலாம்.

பசுந்தீவனத்தை அறுத்து வெய்யிலில் உலர வைத்துக் கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில் கால்நடைகளின் உடலில் வெப்பம் குறைவாக இருக்கும். ஏனென்றால், வெய்யில் காலத்தில் நடக்கும் உடலியக்கத் தன்மை, மழைக்காலத்தில் முற்றிலும் மாறுபடும். எனவே, பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப, அடர் தீவனத்தை அதிகமாக அளிக்க வேண்டும். ஒரு லிட்டர் பால் உற்பத்திற்கு 500 கிராம் அடர் தீவனமும், 50 கிராம் ஆட்டிறைச்சி உற்பத்திக்குத் தினமும் 100-150 கிராம் அடர் தீவனமும் அளிக்க வேண்டும். இதை இரண்டு வேளைகளாகப் பிரித்துப் பகலில் அளித்தால், உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் அதிகமாக விளையும் பசுந்தீவனத்தை, பதப்படுத்தி வைக்கலாம். வைக்கோல், சோளத்தட்டையை, யூரியா சத்தூட்டிய தீவனமாக மாற்றிச் சத்துகள் நிறைந்ததாகக் கொடுக்கலாம். அடர் தீவனமாக, மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை, ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவரையொட்டித் தீவன மூட்டைகளை வைக்கக் கூடாது.

தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் அடர்தீவனத் தயாரிப்பை, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் செய்தல் நல்லது. மக்காச்சோளம், கம்பு, கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காய வைத்து அரைக்க வேண்டும். தீவனத் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவன தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை உடனே அகற்ற வேண்டும்.

மழைக்காலத்தில் கொசுக்கள், உண்ணிகள், புழுக்கள் நிறையளவில் உற்பத்தியாகும். எனவே, தீவனத்தொட்டியைச் சுற்றியும், கொட்டகையைச் சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்தல் மிகவும் அவசியம். தண்ணீர்த் தொட்டியை வாரம் ஒருமுறை சுண்ணாம்பால் வெள்ளையடித்துப் பாசிப் பிடித்தலைத் தவிர்க்க வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவனங்கள்  

தீவனச்சோளம், கோ.27, கோ.10, கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கினியாப்புல், கர்னால் புல், எருமைப்புல், கொழுக்கட்டைப்புல்.  மேலும், குதிரைமசால், கொள்ளு, தட்டைப்பயறு, முயல்மசால், வேலிமாசல், கலப்பக்கோனியம் ஆகிய பயறு வகைத் தீவனங்கள். மற்றும் சூபாபுல், குடைவேல், சிரிஸ் குடைவேல், வாகை, ஆல், அகத்தி, அரசு, வேம்பு ஆகிய மரவகைத் தழைகள்.

வறட்சிக்கு ஏற்ற தீவன மரங்கள்

விவசாயத் தரிசு நிலத்தில் சூபாபுல், அகத்தி, சித்தகத்தியை வளர்க்கலாம். பாறைகளுடன் கூடிய தரிசு நிலத்தில் வாகை, ஆச்சாமரம், வேம்பை வளர்க்கலாம். காரத்தன்மையுள்ள தரிசில் கருவேலம், சித்தகத்தி ஆகிய மரங்களை வளர்க்கலாம்.     

கால்நடைகளை மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக வளர்ச்சி கிடைக்கும். கொழுக்கட்டைப் புல், ஸ்டைலோ மற்றும் கோ வகைத் தீவனப் பயிர்களை அளிக்கலாம். அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியாவை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம். ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களைக் கொண்டு 15-30 ஆடுகளை வளர்க்கலாம்.


முனைவர் ஜி.கலைச்செல்வி,

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-51.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!