நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

நாட்டுக் கோழி rural poultry farming1 769cba76ba1d397a7f4e62c32caebd2b

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

ந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும், கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இதில், நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்குக் கை கொடுப்பது நாட்டுக்கோழி வளர்ப்பு. இதற்கு நிறைய முதலீடு தேவையில்லை.

நாட்டுக் கோழிகள் புறக்கடைக் கழிவுகளையும், இயற்கை உயிரிகளையும் உண்டு, குறைந்த காலத்தில் வருமானத்தைத் தந்து விடும். இயற்கைச் சூழலில் வளரும் இந்தக் கோழிகளை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இப்படி, பல நன்மைகளைக் கொண்ட நாட்டுக்கோழி வளர்ப்பை 80 சத கிராம மக்கள் வேளாண்மையுடன் கூடிய துணைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். எதிர்பாரா நிலையில் நாட்டுக் கோழிகளைப் பல்வேறு தொற்று நோய்கள் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, பண்ணைக் கோழிகளுக்கு வரும் அனைத்து நோய்களும் நாட்டுக் கோழிகளையும் தாக்கும். ஆனால், நம் நாட்டுக் கோழிகளில் நோயெதிர்ப்புத் திறன் இருப்பதால், அவை எல்லா நோய்களாலும் பாதிக்கப்படுவது இல்லை. இருந்த போதிலும் சில நச்சுயிரித் தொற்று நோய்கள், குறிப்பாக வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய் ஆகியன தாக்கினால், முழுமையான இறப்பை ஏற்படுத்தும்.

இவற்றைத் தவிர, உருண்டை மற்றும் நாடாப் புழுக்களின் பாதிப்பும், பேன் மற்றும் தெள்ளுப் பூச்சிகளின் தொல்லையும், கோழிகளின் உற்பத்தித் திறனைப் பெரிதும் குறைக்கும். எனவே, இந்த நோய்களைப் பற்றி, தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளைக் கழிச்சல் நோய்

இராணிக்கெட் என்னும் வெள்ளைக் கழிச்சல் நோயானது, வைரஸ் என்னும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய், வெய்யில் நிறைந்த சித்திரை, வைகாசியில் கூடுதலாக ஏற்பட்டாலும், ஆண்டு முழுவதும் நாட்டுக் கோழிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

பாதிக்கப்பட்ட கோழிகள் வெள்ளையாகக் கழிவது, கொக்கைப் போல் குறுகிக் கொண்டு இரையோ நீரோ எடுக்காமல் இருப்பது ஆகியன இந்நோயின் அறிகுறிகள் ஆகும். மேலும், குஞ்சுகளின் கண்களில் நீர்க் கோர்த்திருக்கும்.

நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்துக் கொண்டும், கழுத்தைத் திருகிக் கொண்டும், உண்ணாமலும் இருந்து, 2-3 நாட்களில் இறந்து விடும். ஏதோவொரு கோழிக்கு வரும் இந்த நோயானது ஊரெல்லாம் பரவி, எல்லாக் கோழிகளையும் இறக்கச் செய்து விடும்.

வருமுன் காத்தல்

நோய் வந்தபின் மருத்துவம் செய்வதில் எந்தப் பயனுமில்லை, வருமுன் காக்கும் விதமாக, தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே வழி. நோயைத் தடுக்க, குஞ்சு பொரித்த 7 ஆம் நாள் எஃப் 1 வகை மற்றும் 28 ஆம் நாள் லசோட்டா வகைத் தடுப்பூசி மருந்தை, கண்ணில் சொட்டு மருந்தாக விட வேண்டும்.

அடுத்து, குஞ்சுகள் 8 வார வயதை அடைந்ததும் ஆர்.டி.வி.கே என்னும் ஊசி மருந்தை, கால்நடை மருத்துவ மனைகளில் இலவசமாக, இறக்கையில் போட்டு இந்த நோயிலிருந்து காப்பாற்ற முடியும்.

கோழியம்மை

பாதிக்கப்பட்ட கோழிகளின் தலை, கண் மற்றும் கொண்டையில் கொப்புளங்கள் தோன்றும். வைரஸ் கிருமிகளால் பரவும் இந்நோய் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் தொற்று நோய்களில் முக்கியமானது.

பாதிக்கப்பட்ட கோழிகளின் கண் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படும் போது, பார்வை மறைந்து தீனி எடுக்க முடியாது. நோயானது, வளர்ந்த பெட்டை மற்றும் சேவல் கோழிகளில் அதிக இறப்பை ஏற்படுத்தா விட்டாலும், குஞ்சுகளில் இறப்பை ஏற்படுத்தும்.

இதைக் கட்டுப்படுத்த, வேப்பிலையை அரைத்து மஞ்சளுடன் கலந்து கொப்புளங்கள் மீது தடவலாம். எனினும், நோயைத் தடுக்க, குஞ்சுகளுக்கு 3-6 வார வயதில் தடுப்பூசியைப் போட வேண்டும்.

குடற் புழுக்கள்

அஸ்காரிடியா என்னும் உருண்டைப் புழுக்களும், ரைலட்டினா என்னும் நாடாப் புழுக்களும், நாட்டுக் கோழிகளை மிகுதியாகத் தாக்கும். இவ்வகைப் புழுக்கள், கோழிகளின் குடலைத் தாக்கிக் கழிச்சலை உண்டாக்கும். இதனால், கோழிகள் மெலிந்து வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

இந்தப் புழுக்களின் முட்டைகள் மற்றும் முதிர்ந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட கோழிகளில் இருந்து வெளியேறி, இடைநிலை இளம் புழுக்களாக மாறி, மற்ற கோழிகளுக்கும் பரவும். இதைக் கட்டுப்படுத்த, புழு வகைக்கு ஏற்ற மருந்தை, கால்நடை மருத்துவரின் உதவியுடன் கொடுக்க வேண்டும்.

பேன்கள்

நாட்டுக் கோழிகளைப் பலவகையான வெளிப்புற ஒட்டுண்ணிகள் தாக்கினாலும், பேன்களும், தெள்ளுப் பூச்சிகளும், இளம் குஞ்சுகளில் நிறையளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கோழிகளில் தோல் அரிப்பு, இறகு உதிர்தல், இரத்தச்சோகை மற்றும் முட்டை உற்பத்திக் குறையவும் வாய்ப்புண்டு.

சில சமயங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஒட்டுண்ணிகள் தொல்லையாக அமையும். பேன்களின் தாக்கம் அடைக்கோழிகளில் அதிகமாகக் காணப்படும். இவற்றை ஒழிக்க, வசம்பு அல்லது பியூடாக்ஸ் போன்ற மருந்தைத் தெளிக்க வேண்டும்.

இரத்தக் கழிச்சல் நோய்

எய்மீரியா என்னும் ஓரணு ஒட்டுண்ணிகள், குடலின் பல்வேறு பகுதிகளைத் தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. இதன் பாதிப்பு, நான்கு முதல் எட்டு வார வயதுள்ள குஞ்சுகளில் பெரும்பாலும் காணப்படும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இரத்தமாகக் கழியும். சரியான நேரத்தில் கால்நடை மருத்துவரின் உதவியுடன், குடிநீரில் மருந்தைக் கலந்து கொடுக்க வேண்டும்.

இப்படி, நோய்களைத் தடுப்பதுடன், கோழிக் கூண்டுகளைக் கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், கோழிகளை அடைக்கும் இடங்களில் எச்சத்தைத் தினமும் நீக்குதல், நோயுற்ற கோழிகளைப் பிரித்து மற்ற கோழிகளுக்கு நோய்ப் பரவலைத் தடுத்தல் மற்றும் நோயற்ற கோழிகளைச் சந்தையில் புதியதாக வாங்கி வருதல், பொரித்த குஞ்சுகளுக்கு முறையான தடுப்பூசி மற்றும் குடற்புழு மருந்துகளை அளித்தல் ஆகிய வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.


முனைவர் வி.செ.வடிவு, முனைவர் அரங்க.மதிவாணன், மருத்துவர் உ.இலட்சுமிகாந்தன், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர் – 641 604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading