My page - topic 1, topic 2, topic 3

சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்!

ம் பாட்டியும் தாத்தாவும், வயதான காலத்திலும் நலமாக வாழ்ந்ததைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், சிறு வயதில் சாப்பிட்ட சிறுதானிய உணவுகள் தான். இவற்றில், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அந்த வகையில், சிறு தானியங்களில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம்.

தினை

இது, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச் சத்து போன்ற பல சத்துகளைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்த, கண் பார்வை சிறப்பாக இருக்கத் துணையாக இருக்கும். பாலூட்டும் பெண்களுக்குத் தினையைக் கூழாகக் காய்ச்சித் தருவார்கள். ஏனெனில், இது தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும்.

தினை, கபம் சார்ந்த நோய்களை நீக்கும். வாயுத் தொல்லையை விரட்டும். தினையில், இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் போன்ற உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு

அரிசி, கோதுமையை விட, கேழ்வரகில் சத்துகள் அதிகம், குறிப்பாக, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி ஆகியன அதிகளவில் உள்ளன. அதனால், எலும்புத் தேய்மானம், இரத்தச் சோகை, இதயநோய், மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு உள்ளோர்க்குச் சிறந்தது.

இராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால் உடல் வெப்பம் நீங்கும். உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க உதவும். செரிமானச் சிக்கல்கள் நீங்கும். குடற்புண் குணமாகும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம். கேழ்வரகில் கூழ் செய்து, பச்சிளம் குழந்தைகளுக்குத் தரலாம். இதில், இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியாப்பம், அடை மற்றும் இனிப்பு வகைகளைச் செய்யலாம்.

சாமை

இதில், அரிசியை விடப் பல மடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. மற்ற சிறுதானியங்களை விட, சாமையில் இரும்புச் சத்து அதிகம். இது, இரத்தச் சோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும், வயிறு சார்ந்த சிக்கல்களுக்கு நல்ல தீர்வைத் தரும்.

சாமையில் உள்ள தாதுப்புகள் உயிரணுக்களின் அளவைக் கூட்டும். இதில், இட்லி, வெண் பொங்கல், இடியாப்பம், காய்கறி பிரியாணி என, வகை வகையாகச் செய்ய முடியும்.

குதிரைவாலி

இதில், இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியன உள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும்.

வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில், குதிரைவாலிக் களி, குதிரைவாலிக் கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்.

வரகு

உடலுக்கு அதிக சக்தியை அளிக்கும் வரகில், அரிசி, கோதுமையில் இருப்பதை விட நார்ச்சத்து அதிகமாக உள்ளது. விரைவில் செரிக்கும். மேலும், புரதச்சத்து மற்றும் தாதுப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி ஆகியன உள்ளன.

வரகு, சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும். இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீர் செய்யவும் உதவும்.

கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு, வரகு வரமாகும். இதில், புட்டு, வெண் பொங்கல், காரப் பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என, விதவிதமாகச் செய்ய முடியும்.

கம்பு

வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்கு ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். சோர்வை நீக்கிப் புத்துணர்வைத் தரும். செரிமானச் சிக்கலைச் சரி செய்யும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு ஏற்றது.

உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும், சிறுநீரைப் பெருக்கி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சோளம்

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த சோளம், உடல் எடையைக் கூட்ட உதவும். ஆஸ்டியோ பொரோசிசால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்குச் சோளம் ஏற்றதல்ல.

நீரிழிவு உள்ளவர்கள், செரிமானச் சிக்கல் இருப்பவர்கள் மற்றும் இரத்தச்சோகை இருப்போர்க்குச் சோளம் சிறந்தது. சிறுநீரைப் பெருக்கும், உடலில் உள்ள உப்பைக் குறைக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டின், கண் குறைகளைச் சரி செய்ய உதவும். இதில், தோசை, பணியாரம் போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம்.

சிறுதானியங்களில் உள்ள சத்துகள்

சோளம்: புரதம் 10 சதம், கொழுப்பு 1.73 சதம், கார்போஹைட்ரேட் 67.7 சதம், நார்ச்சத்து 10.2 tdf, இரும்புச் சத்து 3.95 மி.கி., கால்சியம் 27.6 மி.கி., தையமின் 0.35 மி.கி., ரிபோபிளவின் 0.14 மி.கி., நியாசின் 2.10 மி.கி., போலிக் அமிலம் 39.4 ug.

கம்பு: புரதம் 11 சதம், கொழுப்பு 5.43 சதம், கார்போஹைட்ரேட் 61.18 சதம், நார்ச்சத்து 11.5 tdf, இரும்புச் சத்து 6.42 மி.கி., கால்சியம் 27.4 மி.கி., தையமின் 0.25 மி.கி., ரிபோபிளவின் 0.20 மி.கி., நியாசின் 0.90 மி.கி., போலிக் அமிலம் 36.1 ug.

இராகி: புரதம் 7.2 சதம், கொழுப்பு 1.92 சதம், கார்போஹைட்ரேட் 66.8 சதம், நார்ச்சத்து 11.2 tdf, இரும்புச் சத்து 4.62 மி.கி., கால்சியம் 36.4 மி.கி., தையமின் 0.37 மி.கி., ரிபோபிளவின் 0.17 மி.கி., நியாசின் 1.3 மி.கி., போலிக் அமிலம் 34.7 ug.

தினை: புரதம் 12.3 சதம், கொழுப்பு 4.30 சதம், கார்போஹைட்ரேட் 60.1 சதம், நார்ச்சத்து 10.7 tdf, இரும்புச் சத்து 2.8 மி.கி., கால்சியம் 31.0 மி.கி., தையமின் 0.59 மி.கி., ரிபோபிளவின் 0.11 மி.கி., நியாசின் 3.20 மி.கி., போலிக் அமிலம் 15.0 ug.

வரகு: புரதம் 8.9 சதம், கொழுப்பு 2.55 சதம், கார்போஹைட்ரேட் 66.2 சதம், நார்ச்சத்து 6.4 tdf, இரும்புச் சத்து 2.34 மி.கி., கால்சியம் 15.3 மி.கி., தையமின் 0.29 மி.கி., ரிபோபிளவின் 0.2 மி.கி., நியாசின் 1.5 மி.கி., போலிக் அமிலம் 39.5 ug.

சாமை: புரதம் 10.1 சதம், கொழுப்பு 3.89 சதம், கார்போஹைட்ரேட் 65.5 சதம், நார்ச்சத்து 7.7 tdf, இரும்புச் சத்து 1.2 மி.கி., கால்சியம் 16.1 மி.கி., தையமின் 0.26 மி.கி., ரிபோபிளவின் 0.5 மி.கி., நியாசின் 1.3 மி.கி., போலிக் அமிலம் 36.2 ug.

பனிவரகு: புரதம் 11.5 சதம், கொழுப்பு 3.5 சதம், கார்போஹைட்ரேட் 64.5 சதம், நார்ச்சத்து 9.6 tdf, இரும்புச் சத்து 2.0 மி.கி., கால்சியம் 30.0 மி.கி., தையமின் 0.41 மி.கி., ரிபோபிளவின் 0.28 மி.கி., நியாசின் 4.5 மி.கி.

குதிரைவாலி: புரதம் 6.2 சதம், கொழுப்பு 2.2 சதம், கார்போஹைட்ரேட் 65.5 சதம், நார்ச்சத்து 12.6 tdf, இரும்புச் சத்து 5.0 மி.கி., கால்சியம் 20.0 மி.கி., தையமின் 0.33 மி.கி., ரிபோபிளவின் 0.1 மி.கி., நியாசின் 4.2 மி.கி.

எனவே, அன்றாட வாழ்வில் சிறுதானிய உணவுகளைப் பயன்படுத்தி உடல் நலம் பேணிக் காத்திட வேண்டும்.

குறிப்பு: இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் பயிற்சிகளில் சிறுதானியத் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் பங்கு கொண்டு, அந்த நிறுவனம் வழங்கும் தொகுப்பு நிதியைப் பெற்றுப் பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், இராஜேந்திர நகர், ஐதராபாத் என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 040 24599382.


மா.அவின்குமார், வேளாண்மை அலுவலர், சேலம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks