தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது. சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மணமுடன் இருக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது. அதற்கும் மேலாக கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் அதிகமாக உள்ளன. மேலும், இது பல்வேறு வகையான தாதுப்புகளையும் கொண்டுள்ளது.
கறிவேப்பிலை மிகவும் மருத்துவக் குணமுள்ள மணமூட்டும் பயிராகும். கறிவேப்பிலையைப் பொடி செய்து நெடுநாட்கள் சேமித்தும் சமையலில் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கறிவேப்பிலை தமிழகத்தில் மிகவும் குறைந்த பரப்பிலேயே சாகுபடி செய்யப்படுகிறது.
வணிக அடிப்படையில், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குத் தேவையான கறிவேப்பிலை, பிற மாநிலங்களான கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் இருந்து சந்தைக்கு வருகிறது.
குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குத் தேவையான கறிவேப்பிலை, பிற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரவழைக்கப்படுகிறது. இப்படித் தேவையுள்ள கறிவேப்பிலை, விவசாயிகளின் தினசரி வருமானத்திற்கு உகந்த பயிராகும்.
பயன்கள்
கறிவேப்பிலை தலைமுடி நன்கு வளருவதற்கான மிகச்சிறந்த சத்தாகக் கருதப்படுகிறது. எனவே, அனைத்து வகையான சிகையலங்கார எண்ணெய்த் தயாரிப்பிலும் இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும், தலையில் தோன்றும் பொடுகுக்கு இது நல்ல மருந்தாகும். தினசரி தங்களது உணவில் கறிவேப்பிலையைச் சேர்த்து வருபவர்களுக்கு முடி நன்கு வளரும். சிறுவயது நரையைத் தடுக்கவும் பயன்படுகிறது.
இதிலுள்ள உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் கண் பார்வைக்கு நல்ல மருந்தாகும். கருவிழிப் படலத்தை நல்ல முறையில் பேணிக்காத்துக் கண்பார்வை நன்றாக இருக்க உதவும். மேலும், இதிலுள்ள இரும்புச் சத்தானது இரத்தச் சோகையைப் போக்க, குறிப்பாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும். மேலும், கறிவேப்பிலையை உட்கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும். இதன் மூலம் இதயம் பாதுகாக்கப்படும். மேலும், இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடக்க உதவும்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துகள்
எரிசக்தி 108 கிலோ கலோரி, கார்போஹைட்ரேட் 18.70 கிராம், நீர்ச்சத்து 63.8 கிராம், நார்ச்சத்து 6.4 கிராம், கொழுப்புச்சத்து 1.0 கிராம், புரதச்சத்து 6.10 கிராம், தாதுப்புகள் 4.0 கிராம், கால்சியம் 830 மி.கி., பாஸ்பரஸ் 57 மி.கி., இரும்புச்சத்து 0.930 மி.கி., காப்பர் 0.100 மி.கி., மெக்னீசியம் 44 மி.கி., சிங்க் 0.200 மி.கி., குரோமியம் 0.006 மி.கி., தயமின் 0.080 மி.கி., கரோட்டீன் 7,560 மி.கி., ஹைபோஃபிளேவின் 0.201 மி.கி., நியாசின் 2.30 மி.கி., வைட்டமின் சி 4.00 மி.கி., ஃபோலிக் ஆசிட் 23.50 மி.கி.
இரகங்கள்
பொதுவாக விவசாயிகளால் விரும்பிப் பயிரிடப்படும் இரகம் உள்ளூர் இரகமாகும். அதாவது, இலைகளின் நடுநரம்பு சிவப்பு அல்லது பிங்க் நிறமாக இருக்கும். இது, பொதுவாக அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும் நன்கு வளரக் கூடியது. செங்காம்பு, தார்வாடு 1, தார்வாடு 2 ஆகிய மூன்று இரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்ற சிறந்த இரகங்களாகும். தார்வாடு 1 இரகம் 5.22 சதம் எண்ணெய்யைக் கொண்டதாகவும், தார்வாடு 2 இரகம் 4.09 சதம் எண்ணெய்யைக் கொண்டதாகவும் உள்ளன.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: சிறந்த வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது. வெப்பநிலை 26 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
பருவம் மற்றும் நடவுப் பருவம்: ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. நன்கு பழுத்த பழங்களைக் கறிவேப்பிலைச் செடியிலிருந்து பறித்து விதைகளை எடுக்க வேண்டும். விதைகளைப் பறித்த 3-4 நாட்களில் நெகிழிப் பைகளில் நடவு செய்ய வேண்டும். ஒரு வயது நாற்றுகள் நடவுக்கு உகந்தவை ஆகும். குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்தால் போதுமானது. வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ்க்குக் கீழ் குறையும் போது இதன் வளர்ச்சி பாதிக்கப்படும்.
நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு 3-4 முறை உழுது மண்ணைப் பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது மட்கிய தொழுவுரத்தை ஒரு எக்டருக்கு 20 டன் வீதம் இட வேண்டும். 1.2 முதல் 1.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ. அளவில் குழிகளை எடுத்து 2-3 மாதம் கழித்து நடவு செய்ய வேண்டும். குழியின் நடுவே ஒரு நாற்றினை நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாவது நாள் உயிர்நீரும், பிறகு வாரம் ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும்.
பின்நேர்த்தி: களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். நடவு செய்த முதலாம் ஆண்டில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். கறிவேப்பிலைச் செடிகள் ஒரு மீட்டர் வளர்ந்ததும் நுனிக் கொழுந்தைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகளின் வளர்ச்சித் தூண்டப்படும். ஒரு செடிக்கு 5-6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 10 முதல் 12 மாதங்கள் கழித்து முதல் அறுவடை செய்யலாம்.
பயிர்ப் பாதுகாப்பு: எலுமிச்சைப் பயிரைத் தாக்கும் புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மாலதியான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். செதில் பூச்சி மற்றும் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். கந்தக மருந்துகளை இப்பயிருக்குப் பயன்படுத்தக் கூடாது.
மகசூல்
10 முதல் 12 மாதம் முதல், நன்கு வளர்ந்த கறிவேப்பிலை இலைகளை அறுவடை செய்து விற்பனைக்கும் பயன்படுத்தலாம். முதலாண்டில் ஒரு எக்டரிலிருந்து 250-400 கிலோ கிடைக்கும். இரண்டாம் ஆண்டில் 4 மாதத்துக்கு ஒருமுறை 1,800 கிலோ தழை வீதம் 5,400 கிலோ கிடைக்கும். மூன்றாம் ஆண்டு 5,400 கிலோ கிடைக்கும்.
நான்காம் ஆண்டில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 2,500 கிலோ வீதம் 10,000 கிலோ கறிவேப்பிலை கிடைக்கும். ஐந்தாம் ஆண்டும் அதைத் தொடர்ந்தும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 5,000 கிலோ வீதம் 20,000 கிலோ கறிவேப்பிலை ஒரு எக்டர் நிலத்தில் இருந்து கிடைக்கும்.
காய்கறிச் சந்தையில் கறிவேப்பிலை எடைக் கணக்கில் விற்கப்படுகிறது. பொதுவாக ஒரு கிலோ கறிவேப்பிலை 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, சுருங்கச் சொன்னால் 5 சென்ட் நிலப்பரப்பில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யும் கறிவேப்பிலையை ரூ.2,000க்கு விற்பனை செய்யலாம்.
இந்த வருமானம் சராசரி விவசாயிகளுக்கு, தினசரி தேவைக்கான வருமானமாக, குடும்பத்துக்கு ஏற்றதாகவும் அமையும். எனவே, விவசாயிகள் கறிவேப்பிலை சாகுபடி மூலம் சிறந்த இலாபம் பெறலாம். பாதுகாப்பு மிகவும் குறைவான பயிராகும்.
முனைவர் க.வேல்முருகன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்.
சந்தேகமா? கேளுங்கள்!