நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

Pachai Boomi - Ginger Foods

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

மது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர் இஞ்சி, இஞ்சிப்பொடி, இனிப்பு இஞ்சி, இஞ்சி எண்ணெய், இஞ்சித் தொக்கு, இஞ்சி ஊறுகாய், இஞ்சி மிட்டாய், தேன் இஞ்சி போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

சத்துகள்

நூறு கிராம் இஞ்சியில் நீர் 80.9 கி., புரதம் 2.8கி., நார் 2.4 கி., கலோரி 67 கிலோ கலோரி, மாவு 12.3 கி., கொழுப்பு 0.9 கி., தாதுப்புகள் 1.2 கி., இரும்பு 3.5 கி., சுண்ணாம்பு 30 மி.கி., பாஸ்பரஸ் 60 மி.கி., எண்ணெய் 1-2-7%, அசிட்டோபான் 3.9-9.3%, ஆல்கஹால் 3.55-9.28% உள்ளன.

மருத்துவக் குணங்கள்

இஞ்சித் தோலில் நச்சுத் தன்மை உள்ளதால் இதை நீக்கிவிட வேண்டும். ஒரு தேக்கரண்டி இஞ்சித் துண்டுகளில் இந்துப்பு அல்லது சாதா உப்பைக் கலந்து உணவுக்கு ஐந்து நிமிடங்கள் முன்னால் சாப்பிட்டால் நன்கு பசிக்கும்.

சளி, இருமல், ஒவ்வாமை, மூக்கடைப்பு அகல, 2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றில் வெந்நீர், தேனைக் கலந்து பருக வேண்டும். உடல்வலி, மூட்டுவலி, வாதவலிக்கு இஞ்சிச்சாறு சிறந்தது. இஞ்சியிலுள்ள 6 ஜிஞ்சிரால் என்னும் வேதிப்பொருள், பெருங்குடலில், கருப்பையில் உருவாகும் புற்றுநோய்ச் செல்களை அழிக்கும்.

இஞ்சித் தொக்கு

தேவையானவை: இஞ்சி அரைக்கிலோ, உப்பு தேவைக்கு, நல்லெண்ணெய் 300 மில்லி, புளி 100 கிராம், வெல்லம் 100 கிராம், பெருங்காயத்தூள் அரைத் தேக்கரண்டி, கடுகுத்தூள், வெந்தயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் தலா ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, சிட்ரிக் அமிலம் ஒரு தேக்கரண்டி, சோடியம் பென்சோயேட் கால் தேக்கரண்டி.

செய்முறை: இஞ்சியைச் சுத்தம் செய்து நீரின்றி அரைக்க வேண்டும். கொஞ்சம் நீரில் புளியைக் கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை நீரிலிட்டுக் கொதிக்க விட்டு வடித்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடானதும் இஞ்சியை இட்டு வதக்க வேண்டும். இத்துடன், புளி, வெல்லக் கரைசல், உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்துக் கிளற வேண்டும். அடுத்து, பெருங்காயத் தூள், சீரகத் தூள், வெந்தயத் தூள், கடுகுத்தூளைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வதக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்துக் கிளறி விட்டால் இஞ்சித்தொக்குத் தயார்.

இஞ்சிப் பொடி

உலர் இஞ்சித் தயாரிப்பு, சுக்குத் தயாரிப்பில் இருந்து மாறுபட்டதாகும். நன்கு முற்றிய இஞ்சியைச் சுத்தம் செய்து 3 மி.மீ. துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு வெய்யிலில் காயவைக்க வேண்டும்.

பிறகு உலர்த்தி மூலம் 6-8% ஈரம் வரும் வரையில் உலர்த்திப் பொடியாக அரைத்தால் இஞ்சிப்பொடி தயார். இதைத் தரமான நெகிழிப் பையில் அடைத்து விற்கலாம். இஞ்சியின் பயனைக் கருத்தில் கொண்டு இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 99942 83960.


இஞ்சி VIMALA RANI

முனைவர் மா.விமலாராணி,

உதவிப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம்-603 203, காஞ்சிபுரம் மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!