இளமையைத் தரும் அத்தி!

அத்தி aththi

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள்
பூத்த ஆவாரைக் காண ஆயுள்
விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள்
ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண!

த்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார் 30 முதல் 40 அடி உயரம் வரை வளரக் கூடியது. அடிமரம் சிறுத்திருக்கும். பட்டை ஒருவிதச் சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும். இலைகளும் அப்படியே நிறம் மாறி மாறி மாற்றடுக்கில் அமைந்திருக்கும். முழு இலையை ஒடித்தால் பால் வடியும்.

அடிமரம் மற்றும் கிளைகளை ஒட்டிக் காய்கள் காய்க்கும். அத்திப்பூவைக் காண்பது அரிது. தாவரங்களிலேயே பூக்காமல் காய்ப்பது அத்தியின் தனிச் சிறப்பாகும். பூங்கொத்து, வெளியே தெரியாமல் காய்க்குள் மறைந்திருக்கும். இத்தன்மையை ஒட்டி, மிக அரிதாக நிகழும் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்குப் பிறந்தது தான், அத்திப் பூத்தது மாதிரி என்னும் சொல் வழக்கு.

அத்திக்காய் உருண்டையாக, பச்சையாக, மினுமினுப்பாக, பட்டைப் போன்ற மெல்லிய சுணையுடன் இருக்கும். காயின் அடியில் செந்நிறக் கோடு இருக்கும். காய் பழுத்ததும் அது முழுச் சிவப்பாக மாறும். பழத்துக்குள் சிறிய விதைகளும் பூச்சிகளும் இருக்கும். குறிப்பாக, இந்திய, தென்னிந்திய மக்கள், அத்திப் பிஞ்சு மற்றும் காய்களைச் சமைத்து உண்பர்.

நோய்க்கு மருந்துகளைச் சாப்பிடும் காலங்களில், அத்திப் பிஞ்சு அல்லது காயை, முக்கியப் பத்திய உணவாகச் சாப்பிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பது, இதன் மருத்துவச் சிறப்புத் தன்மை கருதியே என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியின் அடிமரத்தில் இருந்து பாலையும், வேரிலிருந்து இரசம் அல்லது பதனீரையும் சேகரிப்பது உண்டு. சித்த மருந்துகள் தயாரிப்பில் இவற்றின் பங்கு முக்கியமானது. அத்திப் பிஞ்சைக் கூட்டாகச் சமைத்து உண்ணும் வழக்கம் உள்ளது. இது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, உடல் வெப்பம், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல், அத்தியில் உள்ள துவர்ப்புச் சுவைக்கு உண்டு. மலச்சிக்கலையும் நீக்கி உடம்பை வலுவாக்கும்.

அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்ரதஷ்டம், ஆனை (யானை) ஆகியன, அத்தியின் வேறு பெயர்கள் ஆகும். இதைப் போல அத்தியில் பலவகைகள் உள்ளன. அவற்றை, அத்தி அல்லது நாட்டத்தி, செவ்வத்தி, சீமையத்தி, காட்டத்தி, பேயத்தி, கொடியத்தி, கல்லத்தி, மலையத்தி, விழலத்தி, பேரத்தி, சிற்றத்தி, குருக்கத்தி, மலந்தின்னி அத்தி, நீரத்தி என்று டி.வி.சாம்பசிவம் பிள்ளை, மருத்துவப் பேரகராதியில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் அரிதான தேனத்தி என்னும் சீமையத்தி, நீலகிரி, பெங்களூரு, காபூல், காஷ்மீர் மலைகளில் வளர்கிறது. அத்திப்பிஞ்சு, காய், பழம், பால், பட்டை, மது ஆகியன, பயன்படு பொருள்களாக உள்ளன.

அத்தியின் மருத்துவக் குணங்கள்

துவர்ப்புச் சுவையை உடைய அத்திப்பிஞ்சு, பெருங்குடல், ஆசனத்துளை ஆகியவற்றை வலுப்படுத்தும். வாயுத் தடங்கல், குருதியுடன் வெளியாகும் வயிற்றுக் கடுப்பு, குருதி மூலம் ஆகியவற்றைக் குணமாக்கும். முற்றிய அத்திக்காய், மலத்தை இளக்கி வெளியேற்றும். இடுப்புப் பிடிப்பு, வயிற்றுப் புண், வயிற்று வலியைக் குணமாக்கும்.

அத்திப் பழங்களில் உள்ள பூச்சிகளை நீக்கிச் சுத்தப்படுத்திச் சாப்பிட்டால், எளிதில் செரித்து, மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்களும் இதைச் சாப்பிட்டால், உடல் திடமாகும். அத்திப் பழத்தை அனைவரும் சாப்பிடலாம்.

மருத்துவ முறையில் அத்தி

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சம அளவில் எடுத்து நொறுக்கி, நீரை ஊற்றிக் காய்ச்சி, காலை மாலையில் குடித்து வந்தால், தீட்டின் போது பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலி என்னும் பெரும்பாடு தணியும். அத்திப்பிஞ்சு, மாங்கொட்டைப் பருப்பைச் சமமாக எடுத்துச் சிறிது நீர்விட்டு விழுதாக அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவில், காலை, மதியம், மாலையில், தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால், அனைத்து வகையான மலப்போக்கும் நிற்கும்.

அத்திப் பழங்களை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, அவ்வப்போது நீரில் கலந்து குடித்து வந்தால், இரத்த விருத்தி உண்டாகி இரத்த ஓட்டம் சீராகும். மலக்கட்டு, நீரிழிவு, நாவறட்சி, உடல் வெப்பம் நீங்கும். அத்திப் பாலுடன், வெண்ணெய், சர்க்கரையைக் கலந்து உண்டால், பித்த நோய்கள், சூலை, சிறுநீரில் இரத்தம் காணல், தாதுக்குறை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஆகியன தீரும்.

அத்திமர வேரிலிருந்து இறக்கப்படும் கள்ளுடன், சர்க்கரைப் பேயன் வாழைப் பழத்தைச் சேர்த்துத் தினமும் உண்டு வந்தால், எலும்பைப் பற்றிய பிணிகள், உட்சூடு, பித்த மயக்கம், நீர்வேட்கை ஆகியன தீரும். அத்திப் பழத்துடன் அரைக்கீரை விதைகளைச் சேர்த்து அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம். இதைக் காய கற்பமென்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது.

அத்தியைப் பற்றிய சிறப்புத் தகவல்கள்

பரிபாடல்கள் தமிழின் மேன்மைக்குச் சான்று. குறிப்பாகச் சித்தர் இலக்கியத்தில், தேரையர் சித்தர் பாடிய அரிய பாடல் நமக்குக் கிடைத்துள்ளது. மருந்துப் பொருள்கள் இதில் மறைபொருளாக உள்ளன என்பது, இதன் சிறப்பு. அத்திப்பிஞ்சு கலவைக் கற்கம் என்று இதைப் பதார்த்த குண விளக்கம் கூறும். அந்தப் பாடல்:

ஆனைக் கன்றி லொருபிடியு அசுரன் விரோதி யிளம்பிஞ்சும்
கானக் குதிரை புறந்தோலுங் காலிற் பொடியை மாற்றினதும்
தானைத் தாய்கொல் சலத்துடனே தகவா எட்டொன்றாக் கொள்நீ
மானைப் பொருவும் விழியாளே வடுகுந் தமிழும் குணமாமே!

மான்விழியை உடைய உமையே என்று ஈசன் அம்மையை முன்னிலைப்படுத்தி, மாந்தர்க்கு மருத்துவ முறையைக் கூறும் இப்பாடலின் பொருள்: ஆனைக்கன்றான அத்திப்பிஞ்சு ஒருபிடி, அசுரன் விரோதியிளம் பிஞ்சான வேலம் பிஞ்சு, கானக்குதிரை புறந்தோலான மாம்பட்டை, காலிற் பொடி என்னும் சிறுசெருப்படை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, தட்டை அம்மிக்கல்லில் வைத்து, தானைத் தாய்கொல் சலமான வாழைப்பூச் சாற்றை விட்டு நெகிழ அரைத்து வைத்துக் கொண்டு, நெல்லிக்காய் அளவில் தினமும் மூன்று வேளை உண்டு வந்தால், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, இரத்தபேதி ஆகியன குணமாகும்.

இப்பாடலைப் பதம் பிரித்துப் பொருள் தந்தவர், தமிழ்ப் புலவரும் மருத்துவப் புலவருமான சி.குமரகுரு ஆவார். அவருக்கு இந்த நேரத்தில் நமது நன்றியைக் கூறுவோம். அத்திமரம் துளிர்த்தால் வசந்த காலம் வருகிறது என அறியலாம். சென்னையில் உள்ள திருவொற்றியூர்த் திருத்தல மரம் அத்தியாகும்.

அத்திமரம், கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய சக்தி மரம். சுக்கிரக் கிரகப் பண்பினை ஒட்டிய தாவரம் அத்திமரம் என்பது, வான சாத்திர அடிப்படையில் நம் முன்னோரின் கணிப்பாகும்.


அத்தி Dr.Kumarasamy e1716430987708

மரு.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!