கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019
உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள், சரியான தூக்கமின்மை, வம்சாவளி போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் அதிக எடையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இந்த அளவற்ற உடல் எடையானது, மூட்டுவலி, இதயநோய், நீரிழிவு போன்றவை ஏற்படவும், இயல்பாக இயங்க முடியாமல் போகவும் காரணமாக இருக்கிறது.
உடற்பயிற்சி, தேவையான மற்றும் அளவான உணவு, நலமான வாழ்க்கையைத் தரும் நல்ல பழக்கங்கள் போன்றவற்றின் மூலம், எடையைக் கட்டுக்குள் வைக்கவும் குறைக்கவும் முடியும். இது குறித்த ஆலோசனைகள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
எட்டு மணிநேரம் தூங்கலாம். நெடுநேரம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து யோகாவில் ஈடுபட வேண்டும். காலையில் தினமும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குளிர் வசதியுள்ள வண்டிகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம். அலுவலகத்தில் மின்தூக்கியில் ஏறாமல் படிக்கட்டுகளில் நடந்து செல்லலாம்.
இளைத்தவனுக்கு எள்ளு; கொளுத்தவனுக்குக் கொள்ளு என்னும் பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது, எள் உடல் எடையைக் கூட்டும். கொள்ளு உடல் எடையைக் குறைக்கும். அதனால், ஊற வைத்த 10 கிராம் கொள்ளை, ஒரு டம்ளர் மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
காலை பதினோரு மணிக்கு ஐம்பது கிராம் சுரைக்காயைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும். பப்பாளிக் காயைச் சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறையும். இறைச்சி, பொரித்த உணவுகள், பால் பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளை நிறையச் சாப்பிடலாம்.
வெந்நீரைக் குடித்து வரலாம். எலுமிச்சம் சாற்றைக் காலையில் வெந்நீரில் கலந்தும், மதியத்தில் மோரில் கலந்தும், இரவில் நாட்டுச் சர்க்கரையில் கலந்தும், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் தேனுடனும் கலந்து சாப்பிட்டு வரலாம். உடல் எடை அதிகமாக முக்கியக் காரணம் சர்க்கரை. அதனால், பால், தேனீர், காபியுடன் சேர்க்கும் சர்க்கரையை மட்டுமின்றி, இனிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
நீச்சல் மூலம் நிறைய கலோரிகளை எரிக்கலாம். அதுவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொடர்ந்து ஒரு மணி நேரம் நீந்தினால் 720 கலோரிகளுக்கு மேல் எரித்து விடலாம். இப்படித் தினமும் 720 கலோரிகளை எரிப்பதால், 30 நாட்களில் 10 முதல் 15 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.
சாப்பிடும் போது தொலைக்காட்சியைப் பார்ப்பது, எதையாவது வாசிப்பது கூடாது. உண்ணும் போது பேசுவதால், பிற சிந்தனையில் இருப்பதால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட நேரும். இது, உடல் எடை அதிகமாகக் காரணமாகி விடும்.
மரு.சு.சத்தியவாணி எம்.ஏ.,
வளசரவாக்கம், சென்னை-87.
+91 99411 22751