My page - topic 1, topic 2, topic 3

பறவைக் காய்ச்சல் நோய்!

பறவைக் காய்ச்சல்

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல்.

கால்நடைகள் மூலம் மக்களுக்குப் பரவும் வெறிநோய், காசநோய், அடைப்பான் நோயைப் போல, இப்போது கோழிகள் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் நோயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மராட்டிய மாநிலம் நந்துபார் மாவட்டம், நாவப்பூர் கோழிப் பண்ணைகளில், பறவைக் காய்ச்சல் உண்டாகி, பல இலட்சம் கோழிகள் இறந்ததே, இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

ஏவியன் இன்புளூயன்சா (AVIAN INFLUENZA) அல்லது பேர்டு புளூ (BIRD FLU) அல்லது ஏவியன் புளூ (AVIAN FLU) அல்லது பறவைக் காய்ச்சல் நோய் என்பது, H5N1 என்னும் வைரஸ் கிருமியால், கோழிகளுக்கு ஏற்படும் தொற்று நோயாகும்.

இந்தக் கிருமிகள், கோழி, வாத்து, வான்கோழி, பன்றி மற்றும் மனிதர்களைத் தாக்கும் பண்புள்ளவை. 1900 ஆம் ஆண்டில், இத்தாலியில் இந்த நோய் காணப்பட்டது. H5N1 என்னும் வைரஸ் முதன் முதலில் 1961 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க பறவைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது.

இந்த H5N1 வைரஸ் கிருமிகள், பறவைகளில் இறப்பை உண்டாக்கக் கூடிய ஆபத்து மிக்கவை. INFLUENZA-A வைரஸ் கிருமிகளில் பல வகைகள் உள்ளன.

ஆசிய கண்டத்தில் கம்போடியா, சைனா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில், 2003 ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியது. ஆயினும், 2004 மார்ச் மாதத்தில் இந்நோய் கட்டுக்குள் வந்தது.

இது, மீண்டும் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதக் கடைசியில், கம்போடியா, திபெத், கஜகஸ்தான், மலேசியா, மங்கோலியா, இரஷ்யாவின் பிடியில் உள்ள கிவெரியா ஆகிய நாடுகளில் பரவியதில் பல இலட்சம் கோழிகள் இறந்தன. பல இலட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

பறவைக் காய்ச்சல் கிருமிகள், வீரியம் குறைந்த நோயை ஏற்படுத்தும் ஏவியன் இன்புளூயன்சா, வீரியம் மிகுந்த நோயை ஏற்படுத்தும் ஏவியன் இன்புளூயன்சா என, இரண்டு வகைகளில் அடங்கும்.

பறவைக் காய்ச்சல் பரவும் முறை

காட்டுப் பறவைகளின் குடல்களில் இந்த வைரஸ் கிருமிகள் பரவியுள்ளன. ஆனாலும், இந்தக் கிருமிகளால் அந்தப் பறவைகள் பாதிக்கப் படுவதில்லை. எனவே, இந்தப் பறவைகள் இந்த வைரஸ் கிருமிகளைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் சுமைத் தூக்கிகளாகச் செயல்படுகின்றன.

நம்மால் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள், வான்கோழிகளை, பறவைக் காய்ச்சல் கிருமிகள் தாக்குவதால், இது, ஆபத்தான தொற்று நோயாகும்.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர், மூக்கில் ஒழுகும் சளி மற்றும் எச்சத்தின் மூலம் இந்நோய் பரவும். வைரஸ் கிருமிகளால் மாசடைந்துள்ள பொருள்களுடன் தொடர்பு ஏற்படும் போது, அந்தப் பறவைகளுக்கும் இந்த நோய் பரவும்.

பறவைகளுடன் நெருங்கிய, பறவைக் கழிவுகளுடன் நெருங்கிய தொடர்புள்ள மனிதர்களை மட்டுமே இந்நோய் தாக்கும். ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு நேரடியாக இந்நோய் பரவுவதில்லை.

1997 ஆம் ஆண்டு, ஹாங்காங்கில் முதன் முதலில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 18 பேரில் 6 பேர் இறந்து விட்டனர். இவர்களின் உடல்களை ஆய்வு செய்த போது, இவர்கள் கோழிப் பண்ணைகளில் வேலை செய்தவர்கள் என்பதும், கோழிகளிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

பண்ணையாளர்கள் செய்ய வேண்டியவை

கோழிகளைத் தாக்கும் H5N1 வைரஸ் கிருமிகள் தமிழகத்தில் இல்லை. எனவே, கோழிகளுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்பதை இவர்கள் உணர்வதுடன், இதைப்பற்றி மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

கோழிப் பண்ணைகளில் இந்நோய் பரவாமல் இருக்க, உயிரியல் பாதுகாப்புச் செயல்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கோழிகளின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட, தரமான தடுப்பூசிகளைச் சரியான காலத்தில் போட வேண்டும்.

தீவனம் தரமாக, நோயெதிர்ப்பைத் தரவல்ல வைட்டமின் ஏ நிறைந்ததாக இருக்க வேண்டும். காட்டுப் பறவைகள், நாடு விட்டு நாடு செல்லும் பறவைகள் மூலம் இந்நோய் பரவுவதால், பண்ணைகளில் நாட்டுக்கோழி, வாத்து, காகம் போன்றவை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பண்ணைக்குள் செல்லுமுன், வண்டிகள், தீவனப் பொருள்கள் மற்றும் தளவாடப் பொருள்களைக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பண்ணை வேலையாட்களும் தங்களை முறைப்படி சுத்தப்படுத்திக் கொண்டே பண்ணைக்குள் செல்ல வேண்டும். மேலும், இவர்கள், மேலங்கி, முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்தே வேலை செய்ய வேண்டும்.

பறவைக் காய்ச்சலைப் பற்றிக் கோழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கும் செய்திகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பண்ணைகளில் கோழிகள் மிகுதியாக இறந்தால் இரத்த மாதிரியை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிச் சோதிக்க வேண்டும்.

கோழி இறைச்சியை 70-100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வேக வைத்துச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்தச் சூட்டில் அனைத்து வைரஸ் கிருமிகளும் அழிந்து விடும். பச்சை முட்டைகளை, பாதி வெந்த முட்டைகளை உண்ணக் கூடாது.


டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் – 636 008.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks