My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளில் சினைப் பருவமும் அறிகுறிகளும்!

கறவை மாடு

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

கால்நடை வளர்ப்பு இன்று தனித் தொழிலாக மாறி வருகிறது. பருவமழை பொய்த்து வேலை வாய்ப்பு குறையும் போது, கை கொடுத்து உதவுவது கால்நடை வளர்ப்பு. நம் நாட்டில் கறவை மாடுகள் நிறைய இருப்பினும், பால் உற்பத்தித் திறன் குறைவே.

இந்தக் குறைந்த உற்பத்தித் திறனுக்குக் காரணம், சினைப் பருவத்தை உரிய காலத்தில் கண்டறிந்து கருத்தரிப்புச் செய்யத் தவறுவது தான்.

சினைப்பருவச் சுழற்சி என்பது, பருவமடைந்த மாடுகளின் பாலின நடத்தையில் ஏற்படும் மாற்றமாகும். இது, ஒரு தொடர் உடற் செயலியல் நிகழ்வாகும். பருவமடைந்த பசுக்கள் சராசரியாக 18 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை சினை அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

ஒரு சினைப் பருவத்துக்கும், அடுத்த சினைப் பருவத்துக்கும் இடைப்பட்ட நிகழ்வையே, சினைப்பருவச் சுழற்சி என்கிறோம். இந்தச் சுழற்சியின் அளவு, பருவக் காலம், தீவனம், வயது மற்றும் உடலமைப்பைப் பொறுத்து மாறுபடும். சினைப்பருவச் சுழற்சி நிகழ்வை, மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

மோனா ஈஸ்ட்ரஸ்: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சினைப்பருவச் சுழற்சியை வெளிப்படுத்தும் பிராணிகள். எ.கா: நாய், வன விலங்குகள்.

பாலி ஈஸ்ட்ரஸ்: ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட கால அளவில் சினைப்பருவச் சுழற்சியை வெளிப்படுத்தும் பிராணிகள். எ.கா: பசு, எருமை, பன்றிகள்.

காலநிலைக்கு ஏற்ற பாலி ஈஸ்ட்ரஸ்: ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவக் காலத்தில் மட்டும் சீரான கால இடைவெளியில் சினைப்பருவச் சுழற்சியை வெளிப்படுத்தும் பிராணிகள். எ.கா: செம்மறியாடு, குதிரை இனங்கள்.

சினைப்பருவச் சுழற்சியை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். அதாவது, சினைப் பருவத்துக்கு முந்தைய நிலை, சினைப்பருவம், சினைப் பருவத்துக்குப் பிந்தைய நிலை, டை ஈஸ்ட்ரம்.

மாடுகளில் சினைப்பருவச் சுழற்சி, நுண்குமிழ் நிலை மற்றும் கார்ப்பஸ் லூட்டிய நிலை என, இரு நிலைகளைக் கொண்டுள்ளது.

நுண்குமிழ் அல்லது ஈஸ்ட்ரோஜன் நிலை: இது, சினைப் பருவத்துக்கு முந்தைய நிலை மற்றும் சினைப் பருவம் ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த நிலையானது, ஈஸ்ட்ரோஜன் என்னும் கணநீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருக்கும்.

கார்ப்பஸ் லூட்டியம் அல்லது புரோஜஸ் ட்டிரானிக் நிலை: இது, சினைப் பருவத்துக்குப் பிந்தைய நிலை மற்றும் டை ஈஸ்ட்ரம் ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த நிலை, புரோஜஸ்டிரான் என்னும் கணநீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருக்கும்.

சினைப் பருவத்துக்கு முந்தைய நிலை: இந்த நிலை, மூன்று நாட்களில் முடிந்து விடும். இந்நிலையில் சூலகத்தில் நுண்குமிழ் வளர்ச்சியைத் தூண்டும் கணநீரின் செயலால், நுண் குமிழ்கள் விரைவாக வளர்ச்சியடையும்.

இதனால், ஈஸ்ட்ரோஜன் கணநீரை அதிகமாகச் சுரக்கும் கிராஃபியன் நுண்குமிழ் உருவாகும். இனப்பெருக்கக் குழாய்க்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, கருப்பையின் உட்புறச் சுரப்பிகள் தூண்டப்பட்டுச் சுரப்புத் தன்மை மிகும்.

கருப்பை வாய் மற்றும் யோனியின் முன் பகுதியில், திரவச் சுரப்பிகள் தூண்டப்பட்டு, கோழை என்னும் திரவம் சுரக்கத் தொடங்கும். இந்த நிலையில் உள்ள பசு, மற்ற மாட்டின் மீது தாவுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டும். ஆனால், தன்மீது மற்ற பசுக்களைத் தாவ அனுமதிக்காது. இந்த நிலையை, இனச் சேர்க்கைக்குத் தயார் செய்யும் நிலை என்று கூறலாம்.

கறவை மாடு – சினைப்பருவம்

பசுவில் சினைப்பருவம் 18 முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். இந்தப் பருவத்தில் பசுவானது காளை மாட்டைத் தன்மீது தாவ அனுமதிக்கும். இந்த நிலை, காளை மற்றும் மற்ற மாட்டை முதலாவதாக அனுமதிப்பதற்கும் கடைசியாக அனுமதிப்பதற்கும், இடைப்பட்ட காலமாகும்.

சினைப் பருவத்தை முன் சினைப் பருவம், மைய அல்லது இடை சினைப் பருவம், பின் சினைப் பருவம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு நிலையும் 8 மணி நேரத்தைக் கொண்டது. சினைப்பருவம் தொடங்கி 8 முதல் 12 மணி நேரம் ஆன பிறகு, பசுவுக்குக் கருவூட்ட வேண்டும்.

அதாவது, மைய சினைப்பருவம் முதல் பின் சினைப்பருவம் வரையான காலமே சினையூட்ட ஏற்றது. இந்தச் சமயத்தில் கருப்பை மற்றும் கருக்குழாயின் சுருங்கி விரியும் தன்மையும், திரவச் சுரப்புத் தன்மையும் கூடுதலாக இருக்கும்.

கமலம் என்னும் கருப்பை வாய் திறந்திருக்கும். யோனி என்னும் புணர்ச்சி உறுப்பின் பின்புறம் தடித்திருக்கும். பிறப்புறுப்பின் உதடானது பெரிதாகவும் உட்புறம் சிவந்து தடிமனாகவும் இருக்கும்.

பொதுவாக அனைத்துப் பிராணிகளிலும் சினை முட்டை வெளியாதல், சினைப் பருவத்துக்கு உட்பட்ட காலத்தில் நிகழும். ஆனால், பசு மற்றும் எருமையில் சினைப் பருவம் முடிந்து 12 முதல் 16 மணி நேரத்துக்குப் பிறகே சினை முட்டை வெளியாகும். சினைப் பருவத்தின் முடிவில், கிராஃபியன் நுண்குமிழ் முதிர்ந்து, ஈஸ்ட்ரோஜன் கணநீரை மிகுதியாகச் சுரக்கும்.

சினைப்பருவ அறிகுறிகள்: அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் கணநீரும், குறைந்தளவில் புரோஜெஸ்டிரான் கணநீரும் மூளையின் மீது செயல்பட்டு, இந்தச் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சினைப்பருவக் காலத்தில் மாடுகள் அமைதியாக இருக்காது. அடிக்கடி கத்தும். அருகிலுள்ள மாடுகள் மீது தாவும். மற்ற மாடுகளைத் தன் மீது தாவ விடும். தீவனத்தில் நாட்டம் இருக்காது. அடிக்கடி சிறுநீர்க் கழிக்கும். பால் உற்பத்திக் குறையும்.

பிறப்புறுப்பு உதடுகள் தடித்தும் சிவந்தும் இருக்கும். மற்ற மாடுகளின் பிறப்பு உறுப்பை நுகர்ந்து பார்க்கும். உடல் வெப்பநிலை கூடுதலாக இருக்கும். பிறப்பு உறுப்பிலிருந்து நிறமற்ற, கண்ணாடி போன்ற வழவழப்பான திரவம் ஒழுகும்.

எருமையில் அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், பால் உற்பத்திக் குறைதல், காம்புகள் சுரந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்தச் சினைப்பருவ அறிகுறிகள் அனைத்தும் எல்லா மாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சினைப் பருவத்துக்குப் பிந்தைய நிலை: இது, 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த நிலையில் லூட்டினைசிங் கணநீர் அதிகமாக வெளிப்படும். இதனால், சூலகத்திலுள்ள கிராஃபியன் நுண்குமிழில் இருந்து, பெண் சினை முட்டை வெளிப்படும். ஈஸ்ட்ரோஜன் கணநீர் குறைவதுடன், சினைப்பருவ அறிகுறிகள் அனைத்தும் மறைந்து விடும்.

ஒருசில கலப்பின மற்றும் வெளிநாட்டு மாடுகளின் அறையிலிருந்து இரத்தம் கலந்த வழவழப்பான திரவம் வெளிப்படும். இது, திடீரென ஈஸ்ட்ரோஜன் கணநீர் குறைவதால் நிகழ்வதாகும். இந்தப் பின் சினைப்பருவ நிலையில், இரத்தம் கலந்த திரவம் வருவதற்கும், மாடுகள் சினைப் பிடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

டை ஈஸ்ட்ரம்: இந்த நிலை, 10 முதல் 13 நாட்கள் வரை இருக்கும். இந்நிலையில், இனப்பெருக்கக் குழாய்க்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறையும். எனவே, கருப்பை தளர்ந்து இருக்கும். கருப்பை வாய் மூடியிருக்கும். இனப்பெருக்கக் குழாயில் திரவச் சுரப்பு இருக்காது. புணர்ச்சி வாய்த் தடிப்பும் முற்றிலும் குறைந்து விடும்.

இந்நிலையில், சூலகத்தில் சினை முட்டை வெளிப்பட்ட இடத்தில், கார்பஸ் லூட்டியம் வளர்ந்து, புரோஜஸ்டிரான் கணநீரைச் சுரந்து, கருவுற்ற மாடுகளில் சினைப்பருவச் சுழற்சி ஏற்படாமல் செய்யும்.

ஆனால், கருவுறாத மாடுகளில், இந்த கார்ப்பஸ் லூட்டியம் என்னும் மஞ்சள் திசு சிதைந்து, மறுபடியும் சினைப்பருவச் சுழற்சி நடைபெறும்.


மரு.சு.பிரகாஷ், ம.செல்வராஜு, கா.இரவிக்குமார், கி.செந்தில்குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks