பாக்டீரிய உயிரி மென்படலத் தடுப்பூசி!

தடுப்பூசி

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர்.

லகளவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மீன் வளர்ப்பும் ஒன்று. பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையைச் சமாளிக்கும் வகையில், எண்ணற்ற மீனினங்களும், உத்திகளும் இத்துறையில் வந்து கொண்டே உள்ளன.

குளத்தில் மிகவும் நெருக்கமாக விடப்படும் மீன்கள் நோய்களுக்கு உள்ளாகின்றன. கூண்டுகளில் திறந்த நீர்ச்சூழலில் வளரும் மீன்களை, நோய்க் கிருமிகள் எளிதாகத் தாக்குகின்றன.

இந்த நோய்களைத் தடுக்க அல்லது குறைக்க, தொற்று நீக்கம் செய்தல், சத்தான உணவிடுதல் மற்றும் தரமான மீன் குஞ்சுகளை இருப்பு வைத்தல் போன்ற உத்திகள் உள்ளன.

ஆனாலும், இந்த நோய்களால் வளர்ப்பு மீன்களில் பெரியளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நோய்களில் 54.9 சதம் பாக்டீரியாவாலும், 22.6 சதம் வைரசாலும், 3.1 சதம் பூஞ்சையாலும், 19.4 சதம் ஒட்டுண்ணியாலும் ஏற்படுகின்றன.

முன்பு, பாக்டீரிய நோய்கள் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்த, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்பட்டன. இவற்றால் நன்மைகள் சில இருப்பினும், பல்வேறு தீமைகளும் உள்ளன.

அதாவது, இந்த மருந்துகளை எதிர்த்து வளரும் ஆற்றல் பாக்டீரியாக்களுக்கு வந்து விடுகிறது. எனவே, இவற்றால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் வரவில்லை.

தற்போது, மீன் வளர்ப்பில் தடுப்பூசிகளின் பயன் மிகுந்து வருகிறது. இதனால், குறைந்த செலவில் சிறந்த முறையில் மீன்களைப் பராமரிக்க முடிகிறது.

தடுப்பூசியின் தொடக்கம்

தடுப்பூசி என்பது, உயிரியல் முறையில் தயாரிக்கப்படுவது. ஓர் உயிரிக்குச் செலுத்தப்படும் இந்த மருந்து, குறிப்பிட்ட நோயை எதிர்க்கும் திறனைத் தூண்டுகிறது.

முதன் முதலில் 1798 ஆம் ஆண்டு எட்வர்டு ஜென்னர் என்பவர், சின்னம்மை நோய்க்கு மருந்தாக, தடுப்பூசியைப் பயன்படுத்தினார். ஸ்னெஸ்கோ என்பவர், 1938 ஆம் ஆண்டு, கெண்டை மீன்களில் முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தினார்.

இந்தியாவில் முதல் மீன் தடுப்பூசி 1991-இல் கருணாசாகர் மற்றும் அவரது குழுவினரால் பயன்படுத்தப்பட்டது. சால்மன் மீன்களைத் தாக்கும் சிவப்புவாய் நோய்க்கான தடுப்பூசிக்கு, 1976 இல் அமெரிக்காவில் உரிமம் தரப்பட்டது.

மீன்களைத் தாக்கும் வைரஸ் நோய்த் தடுப்பூசியை, செக்கோஸ்லோவிய நிறுவனம் தயாரித்தது. மீன் வளர்ப்பில் பலவகைத் தடுப்பூசிகள் பயனில் உள்ளன. அவற்றில் உயிரி மென்படலத் தடுப்பூசி இப்போது வந்துள்ளது.

தடுப்பூசியைப் போடுதல்

மீனின் வயது மற்றும் அளவைப் பொறுத்து, உணவு அல்லது தடுப்பூசிக் கரைசலில் மூழ்க வைத்து அல்லது ஊசி மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. ஊசி முறையில் சிறந்த நோயெதிர்ப்புத் திறனும், நீண்டகாலப் பாதுகாப்பும் கிடைத்தாலும், திசு வீக்கம், நேக்ரோசிஸ் உள்ளிட்ட சில தீமைகளும் ஏற்படுகின்றன.

தடுப்பூசி கலந்த நீரில் மீன்களை நீந்தச் செய்வது அதிகச் செலவைத் தரும். எனவே, இம்மருந்து மீன் உணவில் கலக்கப்பட்டு வாய் மூலம் தரப்படுகிறது. இது நேரடியாகக் குடலிலுள்ள நோயெதிர்ப்புச் செல்களை அடைகிறது. மேலும், மீன்களைக் கையாளுவதால் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன.

இவ்வகைத் தடுப்பூசி முறை, நடைமுறைக்கு உகந்ததாக, குறுகிய நேரத்தில் பெரும்பாலான மீன்களுக்குத் தடுப்பு மருந்தை வழங்க ஏதுவாக உள்ளது. எனவே, இந்த முறையைப் பண்ணையாளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால், இதிலும் சில குறைகள் உண்டு. இம்முறையில் தரப்படும் மருந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை அடையுமுன், செரிமான நொதிகளால், முன் குடலில் செரிக்கப்படுகிறது.

உயிரி மென்படலத் தடுப்பூசி

பலவகைத் தடுப்பூசிகள் இருப்பினும், உயிரி மென்படலத் தடுப்பூசி, வாய்வழித் தடுப்பூசி முறைக்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில், பெரும்பாலான பாக்டீரியாக்கள், உயிரி மென்படலத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.

உயிரி மென்படலம், நன்கு கட்டமைக்கப்பட்ட செல்களைக் கொண்டது. மேலும், மேற்பரப்பில் ஒட்டி வாழும் தன்மை உள்ளது. பாக்டீரியா மூலம் உற்பத்தியாகும் உயிரி மென்படலம், ஒட்டும் தன்மையுள்ள மேற்புறப் புரதங்களால் ஆனது.

இது, கிளைக்கோ காலைக்ஸ் எனப்படுகிறது. இவ்வகை பாக்டீரியாவின் அமைப்பு, மீன்களைத் தாக்கும் பாக்டீரிய நோய்களுக்குத் தடுப்பூசியாகப் பயன்படுகிறது.

தடுப்பூசியின் அவசியம்

மீன் வளர்ப்பில் பாக்டீரிய உயிரி மென்படலத் தடுப்பூசி, 1990-களில் இருந்தே பயனில் உள்ளது. பாக்டீரியாவால் உருவாகும் உயிரி மென்படலம், நேரடியாக மீன்களில் பயன்படுகிறது.

பெரும்பாலான மென்படலங்கள் ஆய்வுக் கூடங்களில் உற்பத்தி ஆகின்றன. இந்த மென்படலம், செரிமான மண்டல நொதிகளால் சிதையாமல் நிலைத்து நின்று, நோய்க் காரணிகளின் தாக்கத்தில் இருந்து மீன்களைக் காக்கிறது.

மேலும், உயிரி மென்படல நிலையில் பலவகைப் புரதங்களை உற்பத்தி செய்வதால் நோயெதிர்ப்புத் திறன் கூடுகிறது. செரிமானம் மூலம் தடுப்பு மருந்துகள்

சிதைவதைத் தடுக்கப் பல்வேறு உத்திகள் உள்ளன. அவை, உறையில் இடப்பட்ட தடுப்பூசிகள், பூசப்பட்ட தடுப்பூசிகள், உயிரி உணவில் சேர்க்கப்பட்ட தடுப்பூசிகள்.

ஆனால், இவை சிக்கலானவை, விலை உயர்ந்தவை மற்றும் நடைமுறைக்கு இயலாதவை. எனவே, உயிரி மென்படலத் தடுப்பூசி, வாய்வழித் தடுப்பூசிக்கு ஏற்ற சிறந்த வழியாகும்.

தடுப்பூசி வடிவமைப்பு

ஆய்வகத்தில், குறைந்தளவு வளர்ப்பு ஊடகத்தில், கடுமையான சூழலில் வளர்க்கப்படும் பாக்டீரியாக்கள், உயிரி மென்படலத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மென்படலம், கைட்டின் செதில்களின் மேல் உருவாகிறது.

பிறகு, இதை மேற்பரப்பு நீரிலிருந்து பிரித்து, சுத்தமான PBS-இல் மூன்று முறை நன்கு கழுவி, செல்கள் பிரிக்கப்படுகின்றன. இந்தச் செல்களை மீன் உணவில் சேர்ப்பதற்கு முன், 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 50 நிமிடங்கள் சூடுபடுத்தி இவற்றின் இயக்கம் தடுக்கப்படுகிறது. அதன் பிறகு இவற்றை உணவில் கலந்து மீன்களுக்குத் தருகின்றனர்.

நோய்களைத் தடுக்கும் மென்படலம்

கடந்த இருபது ஆண்டுகளில், தடுப்பூசிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வினால், சாதாரணத் தடுப்பூசியில் இருந்து மிகவும் பாதுகாப்பான, சிறந்த திறனுள்ள உயிரி மென்படலத் தடுப்பூசியைக் கண்டறியும் அளவில் தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது.

ஏரோமோனாஸ் ஹைட்ரோபிலா மற்றும் விப்ரியோ அல்ஜினோ லைடிகசின் உயிரி மென்படலத் தயாரிப்புக்கான ஆய்வு, மங்களூரு மீன்வளக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சங்கர் தலைமையில் நடந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட உயிரி மென்படலம், கட்லா, ரோகு, சாதாக் கெண்டை, மகூர் மற்றும் பினேயஸ் மோனோடன் ஆகியவற்றில் சோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், உயிரி மென்படலம், ஏரோமோனாஸ் ஹைட்ரோபிலா மற்றும் விப்ரியோ அல்ஜினோ லைடிகசை எதிர்க்கும் திறனைத் தந்துள்ளது. உயிரி மென்படலம் மூலம் தடுப்பூசி போடப்பட்ட மீன்களை விட, அதிகளவில் உயிர் எதிர்ப் பொருளை உற்பத்தி செய்து குறிப்பிட்ட நோயிலிருந்து காக்கிறது.

விப்ரியோ அல்ஜினோ லைடிகசின் உயிரி மென்படலம், சாதாரணத் தடுப்பூசிகளை விடச் சிறந்ததாக உள்ளது. இறால்களுக்கு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நினைவாற்றல் இல்லாததால், அவற்றுக்கு நோயெதிர்ப்புத் தூண்டுதலைத் தொடர்ந்து தர வேண்டியுள்ளது.

இவ்வகையில், பாக்டீரிய மென்படலம், சிறந்த நோயெதிர்ப்புத் மண்டலத்தைத் தூண்டும் பொருளாகும். ஏனெனில், பல்வேறு புரதங்களைக் கொண்டுள்ள இது, செரிமான நொதிகளால் சிதையாமலும் உள்ளது.

வாய் மூலம் தரப்படும் உயிரி மென்படலத் தடுப்பு மருந்து, துடுப்பு மற்றும் ஓடுள்ள மீன்களை நோயிலிருந்து காக்கிறது. இது, எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கும் வாய்வழித் தடுப்பூசி. பாக்டீரிய உயிரி மென்படலத்தை மீன் உணவில் சேர்த்துக் கொடுப்பது, மீன் வளர்ப்பில் புதிய உத்தியாகும்.

இந்தத் தடுப்பூசியை உறையில் அடைத்து வைக்காமல் நேரடியாகப் பயன்படுத்தலாம். இது, எவ்விதத் துணையும் இல்லாமல், நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இந்தத் தடுப்பூசி 2020 ஆம் ஆண்டிலிருந்து கடைகளில் கிடைக்கும்.


ந.ஹேமமாலினி, மா.இராஜகுமார், பா.சுந்தரமூர்த்தி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, செ.எழில்மதி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!