மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

மீன் குட்டை huziconhah

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019

நீர் நிலைகளில் வாழும் தாவரங்கள் நீர்வாழ் தாவரங்களாகும். இவை நீர் நிலைகளில் அளவுக்கு மேல் வளர்ந்து விட்டால் களைகளாக மாறி விடும். இந்தியாவில் 140 வகை நீர்வாழ் தாவரக் களைகள் உள்ளன. அவற்றில் 40-70% நீர்வாழ் தாவரக் களைகள், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும், 20-25% பிற மாநிலங்களிலும் உள்ளன. மீன் வளர்ப்புக் குளங்களில் உள்ள பாசிகளும், களைகளும் அவ்வப்போது மீன் வளர்ப்பில் சிக்கலைக் கொடுக்கும்.

நீர்த் தாவர வகைகள்

மிதக்கும் வகை: இவ்வகைத் தாவரங்களின் இலைகள் வெளிப்புறமும், வேரானது நீருக்குள் மண்ணில் ஊன்றாமலும் இருக்கும். எ.கா: ஆகாயத் தாமரை, அசோலா, பிஸ்டியா, லெம்னா, உல்ஃபியா.

நீரின் மேல் வளரும் வகை: இவ்வகைத் தாவரங்களின் இலைகள் வெளிப்புறமும், வேரானது நீருக்குள் மண்ணில் ஊன்றியும் இருக்கும். எ.கா: நிம்ஃபியா, நெலும்போ, நிம்போசைட்ஸ்.

நீருக்குள் வளரும் வகை: இவ்வகைத் தாவரங்கள் இரண்டு வகைப்படும். அ) முழுமையாக நீரில் மூழ்கியிருக்கும். எ.கா: ஹைடிரில்லா, நஜாஸ், வாலிஸ்நேரியா. ஆ) நீரில் வேர் ஊன்றியபடி மிதக்கும். எ.கா: செரட்டோபைலம்.

குளக்கரையில் வளரும் வகை: இவ்வகைத் தாவரங்களின் வேர்கள் நீர்நிலைக் கரைகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் இருக்கும். எ.கா: டைஃபா, பேராமைடிஸ், சைப்பரஸ்.

நீர்ப்பாசிகள்

நார்ப்பாசிகள்: நார்ப்பாசிகள் பாயைப் போலப் படர்ந்து அழுக்கு நிலையில் நீரின் மேல் படிந்திருக்கும். எ.கா: ஸ்பைரோகைரா.

மிதக்கும் பாசிகள்: மீன்வளர்ப்புக் குளத்தில் மிதவைப் பாசிகள் நீர்நிலையின் மேல் படிந்திருக்கும். இவை மீன்களுக்குத் தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தும். எ.கா: மைக்ரோசிஸ்டிஸ், ஆசில்லட்டோரியா, அனபீனா.

நீர்த் தாவரங்களால் ஏற்படும் பாதிப்புகள்

நீர்த் தாவரங்கள் மீன் குட்டைகளில் வளர்ந்தால், மீன்களுக்கான இடம் குறையும். இந்தத் தாவரங்களுக்கு இடையே எளிதில் நீந்த முடியாமல் போவதால், உணவுக்காக மீன்கள் திண்டாடும். இத்தாவரங்கள், தேவையற்ற, வேட்டையாடும் களை மீன்களுக்கு உறைவிடமாக இருக்கும். குட்டைகளில் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கப்படும் நுண்ணுயிர்ச் சத்துகளை நீர்த் தாவரங்கள் பயன்படுத்திப் பல்கிப் பெருகும்.

மீன் அறுவடையின் போது வலைகளை வீச இடையூறாக இருக்கும். குளத்தின் நீர்ப்பகுதியைக் குறைப்பதுடன், இலைவழியே நீரை ஆவியாக்கி நீரின் அளவைக் குறைக்கும். தவளை, பாம்பு, மற்றும் தேவையற்ற பூச்சியினங்களின் புகலிடமாக இருக்கும். சிறிய மீன்களின் செதில்களில் பாசிகள் அடைத்துக் கொள்ளும். உயிர்வளி, வெப்பநிலை ஆகிய இயற்பியல் வேதியியல் காரணிகள் மீன்களுக்குச் சரிவரக் கிடைக்காமல் போகும்.

மீன் குளங்களில் சூரியவொளி ஊடுருவலை, நீர்த்தாவர இலைகள் தடுப்பதால் வேதியியல் மாற்றம் ஏற்படும். மேலும், மீன் குளங்களில் மண்ணுக்கும் நீருக்கும் உள்ள நுண்ணுயிர்ச் சத்துச் சுழற்சியில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்தும்.

மிதவைப் பாசிகள்

மீன் குட்டைகளில் சிக்கலை ஏற்படுத்தும் பலவகை மிதவைப் பாசிகள் உள்ளன. நீண்ட இழைகளைக் கொண்ட இப்பாசிகள் நீரின் மேல் பரவியிருக்கும். இவை மீன்களுக்குத் தேவையான உயிர்வளியைக் கிடைக்க விடாமல் செய்யும்.

அறிகுறிகள்

பாசிகளின் தன்மையைப் பொறுத்துப் பல அறிகுறிகள் உள்ளன. பொதுவான அறிகுறிகள்: நீரில் நல்ல பாசிகள் ஒரு சூப்பைப் போலக் கரைந்துள்ளன. பாயைப் போலப் பச்சையாகப் படர்ந்து அழுக்காக மிதக்கும். பிளாங்கட் களையானது, குளத்தில் காணப்படும் பொதுவான களையாகும். இது, அடர்ந்து வளர்ந்து குளத்தின் உள்ளே அல்லது குளத்தின் மேலே மிதக்கும்.

சிக்கல்கள்

சூரியவொளி அதிகமாகப் படுவதால், மீன் குளத்தில் இந்தப் பாசிகள் நன்றாக வளர்வதால் நிழல் உருவாகும். இதனால், குளத்து நீரில் சத்துகள் அதிகமாகப் பாசிகள் மேலும் பெருகும். குளத்தின் அடியில் சேறு உருவாகும். நீரிலுள்ள சத்துகள், மீன் மலம், உதிரும் இலைகள் மற்றும் குளத்தை ஆக்கிரமிக்கும் களைகளால் பாசிகளின் வளர்ச்சி அதிகமாகும்.

கட்டுப்படுத்துதல்

மிதக்கும் வகை: இதைக் கையால் அகற்றுவதே சிறந்தது. பெரிய குளங்களில் இப்படிச் செய்ய முடியாது. இந்த நேரத்தில் மிதக்கும் தாவரங்களை வலையால் இழுத்துப் போடலாம். இந்த நீர்த் தாவரங்கள் உயரிய எரிவாயு, இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும்.

நீர் மட்டத்தில் வளரும் வகை: மண்ணில் இருக்கும் வேர் மற்றும் கிழங்குகளை நீக்கினால் மட்டுமே இவ்வகைத் தாவரங்களைக் கட்டுப்படுத்த முடியும். இவற்றைக் கையாலும் இயந்திரம் மூலமும் அகற்றலாம். செயற்கைத் தாவரக்கொல்லிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சரியான தாவரக்கொல்லியே முழுமையான தீர்வைத் தரும்.

நீருக்குள் வளரும் வகை: இவ்வகைத் தாவரங்களை, சிலவகை மீன்களை இருப்பு வைக்கும் போது உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம். வளர்ப்பு மீன்களுடன் ஜிலேபிக் கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக் கெண்டையைக் குறைந்தளவில் இருப்பு வைத்து நீரிலுள்ள தாவரங்களைக் கட்டுப்படுத்தலாம். செயற்கைத் தாவரக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அதிகக் கவனம் தேவை.

குளக்கரையோரம் வளரும் வகை: இத்தாவரங்களைக் கையால் அகற்றுவது சிறந்தது. பொதுக் குளங்கள் பெரிதாக இருப்பதால் இப்படிச் செய்ய இயலாது. எனவே, இங்கு இயந்திரம் மூலமும், உயிரியல் முறையில் மீன்களை வளர்த்தும் இவற்றை அகற்றலாம். செயற்கைத் தாவரக் கொல்லிகளைப் பயன்படுத்தும் பொழுது, வளர்ப்பு மீன்கள் பாதித்து விடக்கூடாது.

நார்ப் பாசிகள்: குளத்தை 2.5 அடி ஆழத்தில் அமைத்தால், சூரியவொளி மூலம் நீர் வேகமாகச் சூடாவதைக் குறைக்கலாம். நீர் சூடானால் நார்ப்பாசி அதிகமாக வளரும். இந்தச் சிக்கல் அலங்கார மீன் வளர்ப்பில் அதிகமாக இருக்கும். இதைத் தடுக்க, அலங்கார மீன் தொட்டிகளில் வெய்யிலின் தாக்கத்தைக் குறைக்க, தென்னங்கீற்றால் தொட்டிகளை மறைக்கலாம். நீரில் பாக்டீரிய வளர்ச்சியைத் தூண்டினால், அது அதிகப்படியான சத்துகளைப் பயன்படுத்தி, தேவையற்ற பாசி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இப்படி வளர்க்கப்படும் பாக்டீரியாக்கள் புரோபயாட்டிக் எனப்படும்.

மிதக்கும் பாசிகள்

குளத்து நீரில் நுண்ணலைக் கற்றைகளை விட்டால் அவை, மீன் குளங்களில் இருக்கும் மிதவைப் பாசிகளின் செல்சுவரைத் தாக்கி அவற்றை 7-21 நாளில் இறக்கச் செய்யும். இந்தக் கற்றைகளின் அலைவரிசைகள், பாசி வகைகளுக்கு ஏற்ற வகையில் குளத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது நீர்த் தாவரங்களை அழிப்பதற்கான முறையல்ல. மேலும் இம்முறையைப் பெரிய மீன் குளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். கிலாமிடோமோனாஸ், யுக்லீனா போன்ற மிதக்கும் பாசிகள் நீரில் கரைந்திருக்கும். சில நேரங்களில் இவை குளத்தைச் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாற்றி விடும்.

இந்த நேரத்தில் காற்றடித்தால் இந்தப் பாசிகள் கரையோரம் ஒதுங்கி விடும். அல்லது குளம் முழுதும் படரும். இவை காற்றிலிருந்து நீரில் உயிர்வளி கறைவதைக் குறைக்கும். இதனால், மீன்கள் பாதிக்கப்படும். மீன் வளர்ப்போர் இந்தச் சிக்கலைச் சமாளிக்க, நல்ல பாக்டீரியாக்களைப் பயன்படுத்த வேண்டும்.

தாவரக்கொல்லிகள் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மிதக்கும் களைகளை புளோரிடோன் கொண்டும், ஆகாயத் தாமரை, எமர்ஜண்ட் களையை  2-4-டி கொண்டும், சப்மர்ஜிடுகளை என்டோத்தால் கொண்டும், மிதவைப் பாசிகள், நார்ப்பாசிகளை காப்பர் சல்பேட் கொண்டும், ஆல்கேயை சைமேசின் 0.5-1.0 பி.பி.எம். மூலமும் கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு: 82206 79202.


மீன் குட்டை S. AANAND

சா.ஆனந்த், செ.கார்த்திக்,

பொ.கார்த்திக் ராஜா, ஈரோடு பவானிசாகர்,

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading