மீன்களைத் தாக்கும் விப்ரியோசிஸ் பாக்டீரிய நோய்!

மீன் tuticorin fish harbour

விப்ரியோசிஸ் (Vibriosis) என்பது, கடல் மீன்களைத் தாக்கும் விப்ரியோ இனத்தைச் சார்ந்த பாக்டீரிய நோய்களில் ஒன்றாகும். இது, கடல் மீன்களில் கடும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தோல் புண், ஹீமோடோ பயாடிக் நெக்ராசிஸ் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்வையுடன் தொடர்புள்ள நோயாகும்.

நோய்க்காரணி

விப்ரியோ ஆங்கில்லாரம் என்னும் நோய்க்காரணி, மீன்களில் விப்ரியோசிஸ் என்னும் பாக்டீரிய நோயை ஏற்படுத்தும். விப்ரியோ ஆங்கில்லாரத்தில், 1, 2, 3 என மூன்று செரோலாஜிக்கல் வகைகள் உண்டு. இந்த பாக்டீரியா, தடி வடிவில், வளைந்தும், நேராகவும் இருக்கும். நகரும் தன்மை மிக்கது.

இந்த பாக்டீரிய நோய், நிறமியை உற்பத்தி செய்யாது. மேலும், இது, மூளை, இதயம் கொண்ட ஊடகங்களில் 25-30 டிகிரி செல்சியஸ் அளவில் வேகமாக வளரக் கூடியது. மற்றும் டிரிப்டிகேஸ் சோயா குழம்புகளில் 1.5 சதம் சோடியம் குளோரைடுடன் வளரக் கூடியது.

விப்ரியோசிஸ் பாக்டீரியா, ஐம்பது மாதங்களுக்கு மேல் கடல்நீரில் வாழும். இது, ஊடகத்தில் வட்ட மற்றும் கிரீம் நிறக் காலனியை உருவாக்கும்.

அழுத்தக் காரணிகள்

அதிக நீர் வெப்பநிலை. மீன் பண்ணைகளில் அதிகமாக மீன்களை இருப்பு வைத்தல். நீரின் கரிம மாசுபாடு. மோசமான சத்து. நீரின் மோசமான தரம். மீன்களை முறையற்றுக் கையாளுதல்.

பாதிக்கப்படும் மீன் இனங்கள்

விப்ரியோ ஆங்கில்லாரம் பாக்டீரிய நோயால், சுமார் ஐம்பது வகை மீன்கள் பாதிக்கப் படுகின்றன. பெரும்பாலும் கடல் மற்றும் முகத்துவார மீன்களை இந்நோய் தாக்கும். நன்னீர் மீன்களான, ரெயின்போ ட்ரவுட், கெண்டை, விலாங்கு, திலேப்பியா ஆகிய மீன்களையும் இந்நோய்த் தாக்கும்.

நோய் பரவும் முறை

வாய் வழியாகப் பரவக்கூடும். வெளிப்புறக் காயங்கள் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம், தோல் வழியாகப் பரவும். மீன்களின் குடல் பகுதியில் மற்றும் அழுத்தம் காரணமாகப் பரவும். நோய்க் கடத்திகள், நோயைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும். கெட்டுப் போன உணவுகளை மீன்களுக்கு இடுதல். நல்ல மீனுக்கும் நோயுற்ற மீனுக்கும் இடையே உள்ள தொடர்பு.

மருத்துவ அறிகுறிகள்

இந்த நோய், மீன்களில் எந்த அறிகுறியையும் காட்டாது. ஆனால், மீன்கள் இறந்து போகும். பசியற்ற தன்மை, தோலின் நிறமாற்றம் மற்றும் குஞ்சு மீன்களில் திடீர் மரணம். இரத்தச்சோகை, வயிற்றுப் பகுதி வீங்குதல் மற்றும் தோலில் இரத்தக் கசிவு.

பாதிக்கப்பட்ட மீன்களின் கீழ்ப்புற மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில், சிவப்புப் புள்ளிகள் இருக்கும். மீன்களின் மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியன வீங்கி இருக்கும். குடல் குழாயில் பிசுபிசுப்பான திரவம் இருக்கும். குடல் பகுதியில், இரத்த ஊட்ட மிகைப்பு காணப்படும்.

நோயுற்ற மீன்களில் விழி வெண்படலப் புண்கள், விழி வெண்படல நீர்க்கோர்வை, புண்கள், கண்ணில் வீக்கம் ஆகியன இருக்கும். நோய் முற்றிய நிலையில், துடுப்பு அழுகல் மற்றும் செவிள் நிறமாறுதல் ஏற்படும்.

தொற்றைத் தடுக்க, அனைத்து கொள்கலன்கள் மற்றும் உபகரணங்களை, கிருமி நீக்கம் செய்ய வேண்டும். புதிய மீன்களைத் தனிமைப்படுத்தி, தொற்றுப் பரவலைக் குறைக்க வேண்டும்.

கண்டறியும் முறை

நோய் விளக்கக் குறிப்பு. தனிமைப்படுத்தல் மற்றும் அடையாளம் காணுதல். உயிர் வேதியியல் சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிதல். எலைசா சோதனை மூலம், இந்நோயை விரைவாகக் கண்டறிய முடியும்.

பி.சி.ஆர். சோதனை மூலமும், விப்ரியோ பாக்டீரிய நோயால் பாதிக்கப்பட்ட மீன்களின் திசுக்களில் இருந்தும் கண்டறிய முடியும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

ஆக்ஸிடெட்ரா சைக்ளின் மருந்தை, தினமும் 3.5 கிராம்/100 எல்.பி. வீதம், பத்து நாட்கள் அளிக்க வேண்டும். மீன் உணவில், ஒரு கிலோ உணவுக்கு 100 மி.லி. புராசோலிடோன் வீதம் கலந்து, மீனுக்கு ஆறு நாட்கள் தர வேண்டும்.

அழுத்தக் காரணிகளைத் தவிர்க்க வேண்டும். மீன் பண்ணை சுத்தமாக இருக்க வேண்டும். மீன் முட்டைகளைக் கிருமி நீக்கம் செய்வதன் மூலம், தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும். நோயுற்ற பண்ணை மீன்களை, நல்ல நிலையில் இருக்கும் பண்ணைக்குக் கொண்டு போகக் கூடாது.


PETCHIMUTHU

மு.பேச்சிமுத்து, சை.ஜே.அபிஷா ஜூலியட் மேரி, ஜா.பெரோலின் ஜெசினா, ஜெ.ஜாக்குலின் பெரேரா, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!