புதிய சாகுபடி முறை!

சாகுபடி

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர்.

லகளவில் நிகழ்ந்து வரும் நாகரிக மாற்றம், நிலம் மற்றும் வேலையாள் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்றவை, மண் சார்ந்த பாரம்பரிய சாகுபடியில் தலை தூக்கி உள்ளன.

இவற்றைத் தவிர, நகரமயம், தொழில் மயம் மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளால், மேலும் பல சிக்கல்களை எதிர் கொள்ளும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆக, பெருகி வரும் மக்களுக்குத் தேவையான உணவை, மண் சார்ந்த சாகுபடி மூலம், உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

மாற்றம்

இந்நிலையில், இந்தச் சிக்கல்களில் இருந்து மீளும் நவீன உத்தியாக, மண்ணற்ற வளர் ஊடக சாகுபடி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது, கனிம அல்லது கரிம மூலக்கூறுகளை, நீர்வழி உரத்தின் மூலம் எடுத்துக் கொள்கிறது.

இது, நடப்பு சாகுபடி முறையை விட, விரைவான வளர்ச்சி மற்றும் உயர் மகசூலை அளிக்கிறது. இங்கே கலப்பைக்கு வேலையில்லை.

இது, வளமற்ற மற்றும் மாசடைந்த இடங்களில் சரியான தீர்வைத் தரும். நிலவளம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும். பாரம்பரிய வேளாண்மையில் உண்டாகும் மண்சார் நோய்த் தொற்றுகள் தான், இந்த மாற்றத்துக்கான காரணம். இங்கே நீரையும் உரத்தையும் துல்லியமாகப் பயன்படுத்த முடியும்.

சிறந்த விவசாயிகள், மண்ணில்லா சாகுபடியில் கிடைக்கும் உயர்ந்த மகசூலை, பாரம்பரிய முறையிலும் எடுப்பார்கள். ஆனால், நீர் வீணாதல், ஆவியாதல் என, நீரின் தேவை மிகும்.

விளைநிலத் தட்டுப்பாடு, தொடர் சாகுபடியால் நோய்கள் பெருகுதல், பயிர் வளர்ச்சிக்கான சூழலின்மை ஆகிய சிக்கல்கள், மண்ணில்லா சாகுபடியில் இல்லை. இங்கே பயன்படுத்தும் நீரின் பயன், பாரம்பரிய முறையில் கிடைப்பதை விட அதிகம்.

மண்ணில்லா வளர் ஊடகம்

முதலில் மண்ணும் சரளையும் தான் வளர் ஊடகமாக இருந்தன. ஆனால், இந்த வளர் ஊடகத்தின் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை, காற்று வெளியேற்றம் அல்லது நுண்துளைத் தாக்கம் மற்றும் மறுசுழற்சிப் பயன் காரணமாக, தற்போது பலவகை வளர் ஊடகங்கள் பயனில் உள்ளன. இவற்றைக் கையாள்வது எளிது. இவற்றில், பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் உருவாகும்.

மரத்தூள், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், படற்பாசிக் கூளம், மரச்சில், மரப்பட்டை ஆகிய கரிமப் பொருள்கள்; பளிங்குப் பாறை, வெர்மிகுலைட், ஸியோலைட், சரளை, ராக்வூல்,

மணல், க்ளாஸ்வுள், ப்யூமிஸ், செப்பியலைட், வொல்கோனிக் டப் ஆகிய கனிமப் பொருள்கள் மற்றும் ஹைரோஜெல், போமேட்ஸ், ஒயாஸிஸ் ஆகிய செயற்கைப் பொருள்கள் வளர் ஊடகமாகப் பயன்படுகின்றன.

ஊடகத் தேர்வு

தேவையான இடத்தில், நெடுநாள் பயன்படும் வகையில், குறைந்த விலையில் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற நிலையில் உள்ள ஊடகத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதில், போரோசிட்டி மற்றும் நீரைத் தேக்கும் திறனைக் கூட்டவும், எடையைக் குறைக்கவும், வெர்மிகுலைட், பெர்லைட், மணல், நெல் உமி போன்றவற்றைச் சரியான அளவில் கலக்க வேண்டும்.

இப்படி, சிறந்த முறையில் பயிர் வளர் ஊடகத்தை அமைத்தால், இதற்காகச் செலவிடும் தொகையை, நீர்ப் பயன்பாடு மற்றும் தரமான மகசூல் மூலம் திரும்பப் பெறலாம்.

ஊடக நன்மைகள்

அதிக மகசூலைத் தரும் வீரியமான பயிர்களை, சுத்தமான சூழலில் எளிதில் பெறலாம். இம்முறையில், சத்துகளை வேர்ப் பகுதியில் கொடுப்பதால் சிறிய வேர்கள் நன்கு வளர்ந்து, பயிர்களை நன்கு வளர்க்கும்.

மேலும், மொத்த இடத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், மொத்த நீரில் இருபதில் ஒரு பங்கையும் மட்டுமே மண்ணில்லா வளர் ஊடகம் எடுத்துக் கொள்ளும்.


சாகுபடி SUJITHA E e1712649054310

இ.சுஜிதா, உதவிப் பேராசிரியர், இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர், திருச்சி – 621 206.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!