நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

நெல் vidaipu karuvi

நெல் சாகுபடியை, நாற்று நடவு அல்லது முளைவிட்ட விதைகளை நேரடியாக விதைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நேரடி விதைப்பு முறையில் களைக் கட்டுப்பாடும், பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பும் முக்கியப் பிரச்சினைகளாகும்.

ஆனால், முளைத்த நெல் விதைகளை நேரடி விதைப்புக் கருவி மூலம் விதைத்தால், திருந்திய நெல் சாகுபடியில் கிடைக்கக் கூடிய பயனையும், ஆட்கள் மூலம் விதைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

ஆட்கள் தேவை மற்றும் சாகுபடிச் செலவைக் குறைக்க, சேற்று வயலில் நேரடி நெல் விதைப்புச் சிறந்த தொழில் நுட்பமாகும். நேரடி நெல் விதைப்பு இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது.

முளைக்கட்டிய நெல் விதைகளை சேற்று வயலில், கையால் அல்லது கருவியால் விதைப்பது, சேற்றில் நேரடி நெல் விதைப்பு எனப்படும். உலர் விதைகளை நேர்த்தி செய்து புழுதியில் விதைத்து, 45 நாட்கள் கழித்து, நீரைப் பாய்ச்சி, சேற்றில் பயிராக வளர்ப்பது, புழுதிக்கால் நெல் விதைப்பு எனப்படும்.

விதைப்புக் கருவியின் பயன்கள்

குறைந்தளவு விதையே போதும். வேலையாட்களும் குறைவாகவே தேவைப்படும். பெண்களும் கூட எளிதாக இயக்கி விதைக்க முடியும். ஒரு நாளில் 2.12 ஏக்கர் பரப்பில் விதைக்கலாம். பயிர் எண்ணிக்கையைச் சரியாகவும் எளிதாகவும் பராமரிக்கலாம். கோனோவீடர் மூலம் களைகளை நீக்கலாம். 7 முதல் 10 நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்து விடும். சாகுபடிச் செலவு 20-30 விழுக்காடு குறையும். மகசூல், 20-25 விழுக்காடு கூடும்.

நன்செய் நிலங்களில் நேரடி நெல் விதைப்புக் கருவி

நெல் சாகுபடியில், நேரடியாக நன்செய் நிலத்தில் விதைப்பதும், நாற்று விட்டு நடவு செய்வதும் நடைமுறையில் இருந்து வரும் வழக்கங்கள் ஆகும். வேலையாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், பருவத்தில் பயிர் செய்யவும் நேரடி விதைப்பு அவசியம்.

இதனால், நாற்றங்கால் பராமரிப்புச் செலவு குறைவதோடு 7-10 நாட்களுக்கு முன்பே பயிர் அறுவடைக்கு வந்து விடும். நெல் நாற்று நடுகைக்கான செலவும் தவிர்க்கப்படும்.

முளைக்கட்டிய நெல் விதைகளைச் சேற்று வயல்களில் நேரடியாக விதைக்க, விதைப்புக் கருவி பயன்படுகிறது. இந்தக் கருவியில் நான்கு உருளை வடிவ விதைப் பெட்டிகள் இருக்கும். இக்கருவியை இழுத்துச் செல்லக் கைப்பிடி இருக்கும்.

சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கு இரண்டு வழுக்குத் தகடுகள் இருக்கும். இந்தக் கருவி மூலம் ஒரு நாளில் ஒரு எக்டர் பரப்பில் நெல் விதைகளை விதைக்கலாம். எக்டருக்கு 20 கிலோ விதைகள் மட்டுமே தேவைப்படும். வரிசையாக விதைப்பதால் இயந்திரம் மூலம் களையெடுப்பது எளிது.

நேரடி நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைப்புக் கருவி

இக்கருவி மூலம் ஒரே நேரத்தில் நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைகளை விதைக்கலாம். இக்கருவியில் நான்கு உருளை வடிவ விதைப் பெட்டிகள் இருக்கும். இந்தப் பெட்டிகளில் 150 மி.மீ. இடைவெளியில் இரண்டு வரிசைகளில் துளைகள் இருக்கும்.

கருவியின் நடுவில் 600 மி.மீ. விட்டமுள்ள சக்கரம் இருக்கும். இக்கருவியை இழுத்துச் செல்லக் கைப்பிடியும் இருக்கும். சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கேற்ப இரண்டு வழுக்குத் தகடுகள் இருக்கும்.

நெல் வரிசைகளுக்கு இடையே பசுந்தாள் உரப்பயிர்கள் வளர்வதால், களைகள் வளருவது கட்டுப்படும். இம்முறையில் நெல் நாற்று நடவும், தனியே பசுந்தாள் பயிரிடுவதும் தவிர்க்கப்படும்.

விதைகளை வரிசையாக விதைப்பதால், கருவி மூலம் களையெடுப்பது எளிது. நடுகைப் பயிர்களை விட, பத்து நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்து விடும். இக்கருவியின் மூலம் ஒருநாளில் 0.8 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்.

விதை மற்றும் உரமிடும் கருவி

இக்கருவி, விதை மற்றும் உரத்தைச் சீராக விதைப்பதற்குப் பயன்படுகிறது. இந்தக் கருவியில் நெகிழிக் கலன் ஒன்று இருக்கும். அதன் அடிப்பாகத்தில் இரு திறப்புகள் இருக்கும். திறப்புகளின் கீழே, சுழலும் அலுமினிய வட்டத்தட்டு இருக்கும். இக்கருவியின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடியை ஒருமுறை சுற்றினால் வட்டத்தட்டு 11 முறை சுற்றும் வகையில் பற்சக்கரம் இருக்கும்.

இந்த வட்டத்தட்டுச் சுழலும் போது, கலனில் இருக்கும் இடுபொருள், திறப்புகள் வழியே வட்டத்தட்டின் மேல் விழுந்து பரவலாகச் சிதறி நிலத்தில் விழும். கலனின் அடிப்புறத்தில் உள்ள திறப்புகளைக் கூட்டி அல்லது குறைத்து வைத்து, நிலத்தின் பரப்புக்கு ஏற்ப, இடுபொருளின் அளவை மாற்றி வைத்துக் கொள்ளலாம். இக்கருவியை இயக்க ஒருவரே போதும்.

இதன் எடை 3.5 கிலோ. குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் விதை, உரம் போன்ற இடுபொருள்களை இட உதவுவதால், ஆட்செலவு மிகவும் குறையும். ஒரே சீராக இடுபொருள்களை இடலாம். ஒருநாளில் நான்கு எக்டரில் பரப்பலாம்.

டிராக்டரால் இயங்கும் நெல் விதைப்பான்

எந்திரக் கலப்பையுடன் இணைக்கப்பட்ட இந்த நெல் விதைப்புக் கருவி மானாவாரியில் நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது. இதன் மூலம் வேலையாள் செலவைக் குறைக்கலாம். மேலும், விதைகள் சரியான ஆழத்தில் விழுந்து அனைத்து விதைகளும் முளைத்து அதிக விளைச்சலைத் தரும்.

இந்தக் கருவியில், விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் சாலில் போடும் சாதனம், விதைகள் சாலில் விழுந்ததும் மண்ணால் மூடும் அமைப்பு, இரு வரிசைக்கான இடைவெளியை மாற்றிக் கொள்ளும் வசதி, விதை விழுவதை நிறுத்தும் கிளட்ச் அமைப்பு ஆகியன உண்டு. இந்தக் கருவி மூலம் ஒருநாளில் பத்து ஏக்கர் வரை விதைக்கலாம்.

டிராக்டரால் இயங்கும் நெல் விதைப்பு மற்றும் உரமிடும் கருவி

இதன் மூலம், ஒரே நேரத்தில் நெல் விதைகளை விதைத்துக் கொண்டே உரத்தையும் இடலாம். இக்கருவி, மானாவாரி நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது. விதை மற்றும் உரத்தின் அளவை மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற அமைப்பு இதில் உண்டு.

இது, 35 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயங்கவல்லது. தேவையான உரத்தை, பயிரின் வேர்ப்பகுதியில் இடுவதால், அதிக மகசூல் கிடைக்க ஏதுவாகும். ஒரு எக்டரில் இக்கருவியைப் பயன்படுத்த ரூ.800 செலவாகும். இதன் மூலம் ஒருநாளில் மூன்று எக்டர் நிலத்தில் விதை மற்றும் உரத்தை இட முடியும்.

நேரடி நடவு முறை

நாற்று நடுகைக்கான ஆட்கள் பற்றாக்குறை, நேரடி நெல் விதைப்பில் சரியான பயிர் எண்ணிக்கை மற்றும் களை மேலாண்மையில் உள்ள சிரமம் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில், நேரடியாக விதைத்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கும் முறையே, நேரடி நடவு முறை.

இதில், சேற்று வயல் தயாரிப்பு, விதை நேர்த்தி மற்றும் கோனோவீடர் மூலம் களையெடுத்துச் சதுர அமைப்பில் பயிர்கள் பராமரிக்கப்படும். குறைவான வேலையாட்கள் போதும். பயிர்கள் விரைவில் விளையும். செலவு குறையும். நிகர இலாபம் கூடும்.

நடவு முறை

தானியங்கி இயந்திரம் அல்லது ஆட்களால் இயங்கக்கூடிய, நான்கு வரிசை, ஆறு வரிசை மற்றும் எட்டு வரிசை நடவு இயந்திரம் மூலம் சரியான இடைவெளியில் நட வேண்டும்.

சாகுபடிச் செலவினங்களில் உரம், மருந்து மற்றும் வேலையாள் செலவு அதிகமாகும். நெல் சாகுபடியில் வேலையாட்களின் தேவை அதிகம். அதிலும் நடவு மற்றும் களையெடுக்க, குறைந்தது ஏக்கருக்கு எட்டு ஆட்கள் தேவை.

காவிரிப் பாசனப் பகுதியில் நெல் சாகுபடி ஒரே நேரத்தில் நடைபெறுவதால் போதுமான ஆட்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால், வயதான நாற்றுகளை நட்டு, குறைவான மகசூலை எடுக்க நேர்கிறது.

எனவே, இந்தச் சிக்கல்களைக் களைவதற்குத் தேவையான தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டியுள்ளது. அவ்வகையில், திருந்திய நெல் சாகுபடி, சேற்று வயலில் நேரடி நெல் விதைப்பு, இறவையில் புழுதிக்கால் நெல் விதைப்பு மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

நெல் தட்டு நாற்றங்கால் தயாரிப்பு இயந்திரம்

இந்த இயந்திரத்தில் நான்கு பெட்டிகள் இருக்கும். முதல் மற்றும் நான்காம் பெட்டியில் தயார் செய்யப்பட்ட மண்ணும், இரண்டாம் பெட்டியில் நீரும், மூன்றாம் பெட்டியில் முளைக்கட்டிய நெல்லும் வைக்கப்பட்டிருக்கும். இதனை இயக்குவதற்கு இரண்டு மின் மோட்டார்களும் இருக்கும்.

இந்தத் தானியங்கி இயந்திரத்தின் ஒரு பகுதியில் காலி நெகிழித் தட்டுகளைச் செலுத்தினால், அவற்றில் மண்ணை நிரப்பிச் சமப்படுத்தி, தேவையான நீரைத் தெளித்து, அதன் மேல் முளைக்கட்டிய நெல் விதைகளைச் சீராகப் பரப்பி, அவற்றை மண்ணால் மூடி விடும். இவ்வகையில், ஒரு மணி நேரத்தில் 400-600 நெல் நாற்றுத் தட்டுகளைத் தயாரிக்கலாம்.

நெல் நாற்று நடவு இயந்திரங்கள்

நடந்து இயக்கும் இயந்திரம்: இந்த இயந்திரத்தை இயக்குபவர், அதன் பின்னால் நடந்து செல்லும் வகையில் இந்த இயந்திரம் இருக்கும். இது, பெட்ரோலில் இயங்கக் கூடியது. இதன் மூலம், பாய் நாற்றுகள் அல்லது நெகிழித் தட்டில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை மட்டுமே நட முடியும்.

இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் நான்கு வரிசைகளில் நடுவதற்கு ஏற்ப, நாற்று ஏந்திகள் மற்றும் நாற்று நடும் விரல் வடிவ அமைப்புகள் இருக்கும். வரிசை இடைவெளி 30 செ.மீ. ஆனால், இந்த இடைவெளியை, 120 மி.மீ. முதல் 150 மி.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம். இந்த இயந்திரம் மூலம் ஒருநாளில் ஒரு எக்டர் வரை நடவு செய்யலாம்.

ஓட்டிச் செல்லும் இயந்திரம்-1: ஒரு சக்கரத்தில் இயங்கும் இந்த நடவு இயந்திரம், பாய் நாற்றங்கால் நாற்றுகளை நடவு செய்யும். இது, 3 கிலோவாட் டீசல் இயந்திரம் மூலம் இயங்கும். இந்த இயந்திரத்தைக் கொண்டு ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடவு செய்யலாம்.

சதுர மீட்டருக்கு எத்தனை குத்துகள், ஒவ்வொரு குத்திலும் எத்தனை நாற்றுகள் தேவையோ அந்தளவில் துல்லியமாக நட முடியும். மேலும், நடுகை ஆழத்தைத் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த இயந்திரம் மூலம் ஒருநாளில் இரண்டு எக்டர் வரை நடவு செய்யலாம்.

ஓட்டிச் செல்லும் இயந்திரம்-2: இந்த இயந்திரம் ஆறு வரிசை மற்றும் எட்டு வரிசை என இரண்டு வகைகளில் கிடைக்கும். ஆறு வரிசை நடவு இயந்திரம் பெட்ரோலில் இயங்கக் கூடியது. எட்டு வரிசை இயந்திரம் டீசலில் இயங்கக் கூடியது.

இந்த இயந்திரத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு இரண்டு கியரும், பின்னோக்கிச் செல்ல ஒரு கியரும் இருக்கும். மேலும், சேற்று வயலில் எளிதாக இயக்குவதற்கு ஏற்ப, முன்னால் இரு ரப்பர் சக்கரங்கள், பின்னால் இரு ரப்பர் சக்கரங்கள் இருக்கும்.

மேலும், வளைவுகளில் எளிதாகத் திருப்ப ஸ்டியரிங்கும் உண்டு. இக்கருவி மூலம் இரு வரிசைகளுக்கான இடைவெளியை 300 மி.மீ. ஆகவும், நாற்றுக்கு நாற்று இடைவெளியை 130 முதல் 280 மி.மீ. வரையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

மண்ணின் தன்மைக்கு ஏற்ப நாற்றுகளை 8 முதல் 40 மி.மீ. ஆழம் வரை நடலாம். மேலும், நாற்று நடும் ஆழத்தை எல்லா வரிசையிலும் சீராகப் பராமரிக்க, ஆழத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி அமைப்பும் இருக்கும்.

மேலும், முதலில் நட்ட நாற்று வரிசைக்கு இணையாக நடுவதற்கான கோடு வரைவானும் உண்டு. இது இடும் கோட்டுக்கு நடுவில் இயந்திரத்தை இயக்க வேண்டும். இந்த நடவு இயந்திரத்தில், நெகிழித் தட்டுகளில் வளர்க்கப்பட்ட நாற்றுகளைத் தான் பயன்படுத்த வேண்டும். எட்டு வரிசை நடவு இயந்திரம் மூலம் ஒருநாளில் பத்து ஏக்கர் வரை நடவு செய்யலாம்.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், இணைப் பேராசிரியர், பண்ணை இயந்திரவியல், முனைவர் தி.அனிதா, உதவிப் பேராசிரியர், உயிர் வேதியியல், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!