டிராக்டர் ஹைடிராலிக்சை இயக்கும் முறை!

டிராக்டர் hydraulic

வனின்றி ஓரணுவும் அசையாது என்பதற்கு இணங்க, பயிர் சாகுபடியியில் உற்பத்தியைப் பெருக்க, டிராக்டர் மிக மிக அவசியமாகி விட்டது. எனவே, டிராக்டர் ஹைடிராலிக்ஸை இயக்கும் லீவர்களைப் பற்றியும்,

உழவுக் கருவியை இணைத்தல் மற்றும் கொண்டு செல்லுதல், வயல் வேலைக்கு முன்னால் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றியும் தெரிந்து செயல்பட்டால்; பராமரிப்புப் செலவு மற்றும் சிரமத்தைக் குறைத்து, அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கலாம்.

ஹைடிராலிக் அமைப்பு

தானியங்கி ஹைட்ராலிக் அமைப்பில் இரண்டு இயங்கும் லீவர்கள் ஓட்டுநர் இருக்கைக்கு வலப்புறத்தில் உள்ளன. இவற்றில் முதல் லீவர் உழவுக் கருவியை இயக்க உதவுகிறது.

இரண்டாம் லீவர், டிராக்டரை இழுவைக் கட்டுப்பாட்டில் இயக்க உதவுகிறது. ஓட்டுநர் இருக்கையில் இருந்து கொண்டு லீவரை முன்னால் தள்ளினால், உழவுக் கருவி கீழே இறங்கும். லீவரைப் பின்னால் இழுத்தால் உழவுக் கருவி மேலே உயரும்.

உழவுக்கருவி இயக்க லீவர்

உழவுக் கருவி இயக்க லீவரை, உழவுக் கருவி அல்லது வண்டியை இணைக்கும் போதும், கழற்றும் போதும் மட்டுமே இயக்க வேண்டும்.

இழுவைக் கட்டுப்பாடு லீவர்

பொதுவாக வயலில், கொத்துக் கலப்பை, வட்டக் கலப்பை, இரும்புக் கலப்பை போன்றவற்றை இயக்க, இந்த லீவர் பயன்படும். இதைச் சரியாகப் பயன் படுத்தினால் தேவையான ஆழத்தில் கலப்பை இறங்கும். என்ஜினுக்கும் அதிகச் சுமை ஆகாது.

வயலில் கலப்பை இறங்கும் ஆழத்தைச் சரி செய்யும் போது, டிராக்டரின் பின் சக்கர வழுக்கல் 15% -ஐத் தாண்டக் கூடாது. மேலும், என்ஜினுக்கும் அதிகச் சுமை ஆகக் கூடாது. தேவையான ஆழத்தில் லீவரைச் சரி செய்த பிறகு, நிறுத்தும் திருகைப் பயன்படுத்தி, அதே நிலையில் நிறுத்த வேண்டும்.

கலப்பையை இணைக்கும் போது

என்ஜினை இயக்கும் போது, முதல் லீவர் கீழேயும், இரண்டாம் லீவர் மேலேயும் இருக்க வேண்டும். கலப்பையை இணைக்க ஏதுவாக, அதனருகில் டிராக்டரை ஓட்டி வந்து நிறுத்த வேண்டும்.

முதலில், டிராக்டரில் அமர்ந்து கொண்டே முதல் லீவரை இயக்கி, இடப்புற இழுவைக் கம்பியை இணைக்க வேண்டும். பிறகு, மேலேயும் கீழேயும் தூக்கி இறக்கி, வலப்புற இழுவைக் கம்பியைக் கலப்பை பின்னுடன் இணைக்க வேண்டும். தேவைப்படின் கியர் அமைப்பைப் பயன்படுத்தலாம்.

மேல் இணைப்பானை இணைத்து இடப்புறம் இருந்து வலப்புறம் இணைக்க வேண்டும். முதல் லீவரைப் பயன்படுத்தி, கியர் அமைப்பு மற்றும் மேலிணைப்பை உயர்த்திக் கலப்பையைச் சமநிலையில் வைக்க வேண்டும்.

இருபுறமும் 5 முதல் 7.5 செ.மீ. வரை, கலப்பை தடங்கல் இல்லாமல் அசைய வேண்டும். தேவைப்பட்டால் சங்கிலி மூலம் சரி செய்யலாம்.

கலப்பையைக் கொண்டு செல்லுதல்

இணைக்கும் வகையிலான கலப்பையை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல, டிராக்டரின் மும்முனை இணைப்பில் கலப்பையை இணைக்க வேண்டும்.

இரண்டு லீவர்களையும் மேல் நோக்கி நகர்த்தி, கலப்பையை மிகவும் தூக்கிய நிலையிலேயே வைக்க வேண்டும். இரண்டு லீவர்களும் நகர்ந்து விடாமல் இருக்க, நிறுத்தும் திருகைப் பயன்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

டிராக்டரை நிறுத்தி வைக்கும் போது, கலப்பை இறங்கிய நிலையிலேயே இருக்கட்டும். இதனால், கலப்பை திடீரெனக் கீழே விழுவதைத் தவிர்க்கலாம்.

வயல் வேலைக்குத் தயாராதல்

வயலில் வேலையைத் தொடங்கு முன், வயல் சமமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மேடு பள்ளமாக இருந்தால், கலப்பை ஒரு ஓரமாகவே இழுத்துச் செல்லப்படும்.

டிராக்டர் விலகுவதைத் தவிர்க்க, கலப்பையைச் சரி செய்ய வேண்டும். கலப்பை உழுவான்கள் சமமான ஆழ அகலத்தில் உழுவதற்குக் கலப்பையைச் சமப்படுத்த வேண்டும்.

உழும் போது உழவும் மண்ணும் ஒரே சீராக இருக்க வேண்டும். தொடர்ந்து திருப்பி ஓட்டும் போது, ஒரு சால் மீது இன்னொரு சால் விழாமல் தடுக்க, கலப்பையைப் பக்கவாட்டில் சரி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை

கலப்பை பின்னால் இழுக்கப்படும் போது, வலப்புறம் திருப்பக் கூடாது. ஏனெனில், பார்கள் உருவாகி, டிராக்டருக்கு அதிகமான சுமை ஏற்படும்.

வயல் வேலைக்கு முன் செய்ய வேண்டியது

கலப்பையை இறக்கியதும் உழவு பதிவதற்காக, முதலில் வயலின் ஒவ்வொரு முனையிலும் திரும்புவதற்கு இடம் விட்டு தலைப்புச் சால் போட வேண்டும்.

கெட்டியான மற்றும் உலர்ந்த மண்ணில் உழும் போது, மேல் இணைப்பானைச் சுருக்கி, லீவரை இறக்கினால், சரியான ஆழத்தில் கலப்பை பதியும்.

மண் மிகவும் இறுகலாக இருக்கும் போது, கலப்பைச் சட்டத்தின் மீது தேவையான பளுவை வைத்தால், தேவையான ஆழத்தில் உழலாம்.

உலர்ந்த மண்ணில் கடினமான மண் கட்டிகளை உடைப்பதற்கு, முதலில் முன் உழுவான்கள் ஆழமாக உழுவதற்கு, மேல் இணைப்பானின் நீளத்தைக் குறைக்க வேண்டும்.

வயலில் டிராக்டரைத் திருப்பும் போது, பின் உழுவான்கள் வளைந்து விடாமல் தவிர்க்க, இணைத்துள்ள கலப்பையை, மண்ணுக்கு மேலே சுருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை

எல்லாக் கருவிகளிலும் பரிந்துரை செய்யப்பட்ட இணைப்பு பின்களைப் பயன்படுத்த வேண்டும். டிராக்டரை இயக்குவதற்கு முன், கலப்பை இயக்க லீவரையும், ஆழத்தைக் கட்டுப்படுத்தும் லீவரையும் இறக்கிய நிலையில் வைக்க வேண்டும். டிராக்டரைப் பின்னால் எடுத்து, கலப்பைக்கு அருகில் கொண்டுவர வேண்டும்.

தானியங்கிக் கலப்பையை இயக்க, டிராக்டரில் அமர்ந்தபடியே லீவரை இயக்கி, முதலில் இடப்பக்கக் கலப்பை பின்னுடன் இணைக்க வேண்டும். மேல் கீழ் இயங்கும் கியர் அமைப்பின் துணையுடன், மேலும் கீழுமாகத் தூக்கி, வலப்பக்கக் கலப்பை பின்னுடன் இணைக்க வேண்டும்.

மேல் இணைப்பானை இணைத்து இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் நுழைக்க வேண்டும். தானியங்கிக் கலப்பை இயக்க லீவரை இயக்கி, மேல்கீழ் இயங்கும் கியர் அமைப்பின் உதவியுடன் கலப்பையைச் சம நிலையில் வைக்க வேண்டும்.

கலப்பை இருபுறமும் 5 முதல் 7.5 செ.மீ. வரை தடையின்றி அசைய வேண்டும். தேவைப்படின், பக்கவாட்டில் உள்ள சங்கிலியைச் சரி செய்ய வேண்டும்.

கலப்பை மண்ணுக்குள் பதிவதற்கு, இழுவை லீவரை கீழ்நோக்கி நகர்த்த வேண்டும். மேலும், ஆழமாகப் பதிய வேண்டுமெனில், தானியங்கிக் கலப்பை இயக்க லீவரைக் கடை நிலையில் வைத்து ஆழமான பகுதிக்கு நகர்த்த வேண்டும்.

வயலில் வேலை முடிந்ததும் கொட்டகையில் கொண்டு வந்து டிராக்டரை நிறுத்து முன், இழுவை லீவரை அணைத்த நிலையில் வைத்து, தானியங்கிக் கலப்பை இயக்க லீவரை இயக்கினால், கலப்பை கீழே இறங்கி விடும். அப்போது கழற்றி விட வேண்டும்.

செய்யக் கூடாதவை

பரிந்துரை செய்யப்படாத இணைப்பு பின்னை, ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். மீறிச் செய்தால் இயக்கத்தில் தாமதமாகி, என்ஜினுக்கு அதிகச் சுமை ஏற்படும். எரிபொருள் செலவு கூடும்.

டயர் வழுக்குவதால் தேய்மானம் அதிகமாகும். கலப்பையை மாட்டும் போது, இழுவை லீவரை கீழே இறக்கக் கூடாது. என்ஜினை இயக்கும் போது, இழுவை லீவரை இயக்கினால் விபத்து ஏற்படலாம்.

வலப்புற இணைப்புத் தண்டை முதலில் இணைக்க வேண்டாம். இதனால், இடப்புற இணைப்புத் தண்டைச் சுழற்றும் போது சிக்கல் ஏற்படலாம். மேல் இணைப்பானை இணைத்த பிறகு, வலப்புறமிருந்து இடப்புறமாக இணைக்க வேண்டாம். இதனால், தானியங்கியில் பிரச்சனை ஏற்படலாம்.

கலப்பையைச் சமப்படுத்த, இழுவை லீவரை இயக்க வேண்டாம். இதனால் விபத்து ஏற்படலாம். கலப்பையைச் சாய்வாக வைத்து டிராக்டரை ஓட்டக் கூடாது. இதனால் டயர் சேதமாகும். சங்கிலி அல்லது பின் இணைப்புச் சேதமாகும். டிராக்டர் சமமின்றி இயங்கும். இதனால் உழவு ஒரே சீராக இராது.

வயல் வேலையில் தானியங்கிக் கலப்பையை இயக்க, லீவரை இயக்க வேண்டாம். இதனால், என்ஜினுக்கு அதிகச் சுமையாகும். எரிபொருள் செலவு கூடும். சக்கரம் வழுக்கும், டயர் தேயும். உழவின் ஆழம் சீராக இருக்காது.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், உதவிப் பேராசிரியர், முனைவர் மா.சரவணக்குமார், இணைப் பேராசிரியர், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, குமுளூர் – 621 712.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!