உடல் நலத்துக்கு உதவும் நிலக்கடலை!

நிலக்கடலை

தென்னிந்தியர் உணவில் கலந்து விட்ட உணவுப் பொருள் வேர்க்கடலை. மாமிசம், முட்டை, காய்கறிகளை விட, புரதம் மிகுந்த நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளிலும், துணை உணவுகளிலும் பயன்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 34,620 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. விருத்தாச்சலம் 8 வீரிய இரக நிலக்கடலை மானாவாரி, இறவைக்கு ஏற்றது. 70 சதம் பருப்புத் திறன், மிதப் பருமனுள்ள விதைகள், 49 சதம் எண்ணெய்ச் சத்து, இலைப்புள்ளி மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை ஆகியன இந்த இரகத்தின் சிறப்புகள் ஆகும்.

மருத்துவக் குணங்கள்

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியைச் சீராக்கி, மார்புக்கட்டி வராமல் தடுக்கும். பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோயைத் தடுக்கலாம்.

போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியன நிலக்கடலையில் நிறைந்து உள்ளன. தினமும் 30 கிராம் நிலக்கடலையைச் சாப்பிட்டு வந்தால், பித்தப்பையில் கல் வராமல் தடுக்கலாம்.

நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது, செரட்டோனின் என்னும் உற்சாக உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்தச் செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டும். மன அழுத்தத்தைப் போக்கும்.

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது நினைவாற்றல் பெருகவும், சீரான இரத்த ஓட்டத்துக்கும் உதவும்.

கடலை மிட்டாய்

தேவையான பொருள்கள்: வறுத்துத் தோல் நீக்கிய கடலை 2 கிலோ,

சர்க்கரை 1 கிலோ ,

பொடி செய்த வெல்லம் 1 கிலோ.

செய்முறை: போதிய அளவில் நீரை விட்டு, சர்க்கரை மற்றும் வெல்லத்தைக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கெட்டியான பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பிறகு, வறுத்த கடலையை அதிலிட்டு நன்றாகக் கலந்து, பாத்திரத்தின் ஓரத்தில் பாகு ஒட்டாத வரையில் வேக வைக்க வேண்டும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, எண்ணெய் தடவிய தட்டிலிட்டு ஆற வைத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தால், சுவையான கடலை மிட்டாய் தயார்.

நிலக்கடலை

நிலக்கடலை முறுக்கு

தேவையான பொருள்கள்: அரிசி மாவு 1 கிலோ,

கடலைப்பொடி 250 கிராம்,

மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி,

உப்பு தேவையான அளவு,

எள் 1 தேக்கரண்டி,

வனஸ்பதி 100 கிராம்.

செய்முறை: அரிசிமாவு, கடலைப்பொடி, மிளகாய்த் தூள், உப்பு, எள் ஆகியவற்றை, உருக்கிய வனஸ்பதியில் சேர்த்துக் கலக்க வேண்டும். சிறிதளவு நீர் விட்டு, ரொட்டி மாவைப் போலப் பிசைய வேண்டும்.

பிறகு, மாவை முறுக்குப் பிடியிலிட்டு பிளாஸ்டிக் காகிதத்தில் பிழிந்து, வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் இட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.

நிலக்கடலை அல்வா

தேவையான பொருள்கள்: வறுத்துத் தோல் நீக்கிய கடலை 100 கிராம்,

பால் ஒரு லிட்டர்,

தேங்காய் 1,

சர்க்கரை 300 கிராம்.

செய்முறை: தேங்காயைத் துருவி, பால் மற்றும் சர்க்கரையைக் கலந்து அடுப்பில் வைத்து, கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும். இத்துடன் கடலைப் பொடியைக் கலந்து, பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும் வரையில் வேக வைக்க வேண்டும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, சூடு தணிந்த பின் குளிர் சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைத்துப் பரிமாறலாம்.

நிலக்கடலைப் பொடி

தேவையான பொருள்கள்: நிலக்கடலை 200 கிராம்,

காய்ந்த மிளகாய் 50 கிராம்,

பூண்டு 25 கிராம்,

கறிவேப்பிலை சிறிதளவு,

உப்பு தேவையான அளவு,

பெருங்காயப் பொடி கால் தேக்கரண்டி.

செய்முறை: நிலக்கடலையைத் தோல் நீக்கி வறுக்க வேண்டும். மற்ற பொருள்களையும் தனித்தனியே வறுக்க வேண்டும். இந்தப் பொருள்கள் ஆறிய பின் ஒன்றாகக் கலந்து மின்னம்மியில் இட்டுப் பொடியாக அரைத்தால் நிலக்கடலைப் பொடி தயார். இதைக் காற்றுப் புகாத புட்டிகளில் வைத்துப் பயன்படுத்தலாம்.

நிலக்கடலை பக்கோடா

தேவையான பொருள்கள்: நிலக்கடலை 1 கிலோ,

கடலைமாவு அரைக்கிலோ,

அரிசிமாவு கால் கிலோ,

மிளகாய்த் தூள் 12 தேக்கரண்டி,

உப்பு தேவையான அளவு,

சமையல் சோடா 2 சிட்டிகை,

எண்ணெய் பொரிப்பதற்கு.

செய்முறை: நிலக்கடலையைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து தனியே வைக்க வேண்டும். அரிசிமாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சமையல் சோடா, 2 தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைய வேண்டும்.

நிலக்கடலையை இந்தக் கலவையுடன் சேர்த்து, வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் இட்டுப் பொரித்தால், நிலக்கடலை பக்கோடா தயார்.

நிலக்கடலைப் பால்

தேவையான பொருள்கள்: நிலக்கடலை 200 கிராம்,

கடலை மாவு 150 கிராம்,

அரிசிமாவு 1.5 லிட்டர்,

மிளகாய்த்தூள் 2 சிட்டிகை.

செய்முறை: நிலக்கடலையில் சிறிதளவு நீரை விட்டு வெண்ணையைப் போல் அரைக்க வேண்டும். இத்துடன் 1.5 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பிறகு, வடிகட்டி, சர்க்கரை, ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கொதிக்க வைத்தால், சுவையான நிலக்கடலைப் பால் தயார். இதைச் சூடாகவோ, குளிர வைத்தோ அருந்தலாம்.

நிலக்கடலை சூப்

தேவையான பொருள்கள்: நிலக்கடலை 50 கிராம்,

தனியா 2 மேசைக் கரண்டி,

சீரகம் 1 மேசைக் கரண்டி,

நான்கு பூண்டுப் பற்களின் நறுக்கல்,

நான்கு பச்சை மிளகாயின் நறுக்கல்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கிண்ணம்,

எலுமிச்சம் பழம் தேவைக்கு,

உப்பு ஒரு மேசைக் கரண்டி,

கொத்தமல்லித் தழை சிறிதளவு.

செய்முறை: நிலக்கடலை, தனியா, சீரகம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்க வேண்டும். அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகிவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.

இத்துடன் ஒரு லிட்டர் நீரைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பொடி மற்றும் உப்பைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைப் பழச்சாறு, மல்லித் தழையைச் சேர்த்தால், நிலக்கடலை சூப் தயார்.

நல்ல சத்துகள் நிறைந்த நிலக்கடலையைத் தினமும் உணவில் சேர்த்து நலமுடன் வாழ்வோம்; நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.


முனைவர் சு.கண்ணன், முனைவர் ம.பாலரூபினி, வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம், கடலூர் 606 001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!