நமது விவசாயிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. நிலம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிட்டு விட்டு, அந்தப் பயிர் மூலம் வருமானம் கிடைக்கும் வரையில், அந்தப் பயிருக்கான உரம், மருந்து போன்ற இடுபொருள்களுக்கும் சரி, குடும்பத் தேவைகளைச் சரி செய்யவும் சரி, கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அந்தப் பயிர் மூலம் வருமானம் வந்ததும், அதை வைத்து வாங்கிய கடனை அடைத்து விடுவார்கள். பிறகு, அடுத்த பயிர் செய்யவும், குடும்பச் செலவுகளுக்கும் மீண்டும் கடன் வாங்குவார்கள். பொதுவாக இது தான் நமது விவசாயிகளின் நிலை.
இதிலிருந்து மீள வேண்டுமானால், விவசாயிகள் பலதரப்பட்ட பயிர்களை சாகுபடி செய்து, ஒரு பயிரின் சாகுபடிக்குத் தேவையான பணத்தை, தமது நிலத்திலுள்ள இன்னொரு பயிரின் வருமானம் மூலமே அடைய வேண்டும். இதையே வேளாண் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடியைச் சேர்ந்த விவசாயி பழனி, இந்தப் பல பயிர்கள் சாகுபடியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். இவர் சாகுபடி செய்யும் முக்கியப் பயிர் நெல்லாகும். மூன்று போகமும் இவரது நிலத்தில் நெற்பயிர் இருக்கும்.
ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தைப் பல பயிர்கள் சாகுபடிக்காக ஒதுக்கி வைத்து விடுவார். இதில், இருபது நாளில் வருமானத்தைத் தரும் கீரை, நாற்பது நாளில் வருமானத்தைத் தரும் வெண்டை, தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள், எழுபது நாளில் வருமானத்தைத் தரும் எள், உளுந்து மற்றும் கேழ்வரகு போன்றவற்றைத் தொடர்ந்து பயிரிடுவார்.
இந்தப் பயிர்கள் தரும் வருமானம் தான், முக்கியப் பயிரான நெல் சாகுபடிக்கான அனைத்துச் செலவுகளுக்கும் மற்றும் குடும்பச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுகிறது என்று கூறும் பழனி, ஐந்தாறு கறவை மாடுகளையும் வளர்த்து வருவதால், எந்தச் சூழ்நிலையிலும், எதற்காகவும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதில்லை என்கிறார்.
இப்படி, ஒவ்வொரு விவசாயியும் பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்னும் விழிப்புணர்வை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கோவிந்தவாடி கிராமத்தைத் தத்தெடுத்து, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும் சகாயத்தோட்டம் தென்போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, பலதரப்பட்ட பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயியாக, பழனியைத் தேர்ந்தெடுத்து, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மூலம் விருது வழங்கிச் சிறப்பித்தது.
பசுமை