My page - topic 1, topic 2, topic 3

நல்ல வருவாய் தரும் வரி விரால் வளர்ப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021

மீன் வளர்ப்பு மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மீன் வளர்ப்பு உத்திகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், தரப்படுத்தப்பட்ட செயற்கை இனப்பெருக்க முறைகளும் தான் இதற்குக் காரணமாகும். இப்படி மீன் உற்பத்தி பெருகிக் கொண்டு வரும் நிலையில், குறைந்த உற்பத்திச் செலவில் அதிக இலாபம் தரும் மீனினங்களைக் கண்டறிந்து வளர்ப்பது முக்கியமாகும்.

அத்தகையது தான் ஸ்ட்ரையேட்டஸ் என்னும் வரி விரால் மீனினம். நன்னீர் மீன்களில் கெண்டை மீனினங்களைத் தவிர, குளத்தில் இருப்பு வைத்து, கூட்டு முறையிலோ கலப்பின முறையிலோ வளர்ப்பதற்கு விரால் மீன்கள் ஏற்றவை.

வரி விரால் மீனின் உயிரியல் பண்புகள்

விரால் மீன் உருண்டு திரண்டு பாம்பைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதனால், இதைப் பாம்புத் தலை மீன் எனவும் அழைப்பர். இதன் உடலில் மங்கிய வரிகள் காணப்படும். இது கலங்கிய நீரிலும், சேறு நிறைந்த குளம், குட்டைகளிலும் இருக்கும். விரால் மீனின் முதுகு இருண்ட நிறத்தையும், வால் வட்டமான துடுப்பையும் கொண்டிருக்கும். காற்றிலுள்ள உயிர்வளியை நீரின் மேற்பரப்பில் வந்து சுவாசித்து விட்டுச் சில நிமிடங்கள் வரை நீருக்குள்ளேயே இருக்கும் ஆற்றல் மிக்கது. மேலும், இதன் சுவை, கடல் மீனான சீலா மீனுக்கு இணையாக இருக்கும்.

வளர்ப்புக் குளம்

பொதுவாக 800 முதல் 1,600 ச.மீ. பரப்புள்ள குளங்கள், விரால்களின் வளர்ப்புக்குப் பயன்படுத்தப் படுகின்றன. குளத்தின் ஆழம் 1.5-2 மீட்டர், நீரின் ஆழம் 50-70 செ.மீ. இருக்க வேண்டும். இம்மீன்கள் ஓரிடத்தில் இருந்து ஊர்ந்து தப்பிச் செல்லும் குணமுடையவை என்பதால், நீர் மட்டத்துக்கு மேல், வரப்பின் உயரம் குறைந்தது 60 செ.மீ. இருக்க வேண்டும். வடிகால்களின் வாய்ப்பகுதி வலையால் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.

குளத் தயாரிப்பு

ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு, குளத்தைப் பழுது பார்த்து அடுத்த வளர்ப்புக்குத் தயாரிக்க 2-3 மாதங்கள் ஆகிவிடும். அறுவடை முடிந்ததும் குளத்து நீர் முழுவதையும் வடிகட்டி, வண்டலை நன்றாக உழுது, குளத்தின் தரையில் மணலைப் பரப்ப வேண்டும். பிறகு, 15 நாட்கள் குளம் நன்றாகக் காய வேண்டும். பிறகு, குளத்தில் நீரைப் பெருக்கி மூன்று நாட்கள் கழித்து அதை வடிகட்ட வேண்டும். அதன் பிறகு நீரை நிரப்பி மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க வேண்டும்.

விரால் குஞ்சுகள் மற்றும் சினை மீன்கள்

இயற்கை நீர் நிலைகளில் இருந்து விரால் குஞ்சுகளைச் சேகரிக்கலாம். ஆண்டு முழுவதும் இந்தக் குஞ்சுகள் கிடைத்தாலும், மழைக் காலத்தில் அதிகமாகக் கிடைக்கும். இவற்றைப் பிடித்து விற்பவர்களும் உள்ளனர். மழைக் காலத்தில் இம்மீன்கள் குளத்திலேயே இனப்பெருக்கம் செய்யும்.

வரி விரால் மீன்களைச் செயற்கையாக இனப்பெருக்கம் செய்வதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதில், குளத்தின் தரையில் களிமண்ணைப் பரப்பி, 30-100 செ.மீ. ஆழத்துக்கு நீரை நிரப்பி, அமலைச் செடிகள் உள்ள இயற்கைச் சூழலில், சினை மீன்கள் 1-2 மாதங்களில் முட்டைகளை இடும் எனத் தெரிய வந்துள்ளது.

குஞ்சுகளை இருப்பு வைத்தல்

பத்து நாள் வயதில் 1-2 செ.மீ. நீளமுள்ள குஞ்சுகளைக் குளங்களில் இருப்பு வைக்கின்றனர். விரலளவு நீளமுள்ள விரால்களையும் இருப்பு வைக்கலாம். விரால் குஞ்சுகளைக் காலை அல்லது மாலையில் குளத்தில் விட வேண்டும். 1-2 செ.மீ. குஞ்சுகளை, நாற்றங்கால் குளத்தில் விடாமல், வளர்ப்புக் குளத்தில் இருப்பு வைத்தால், அவற்றின் பிழைப்புத் திறன் குறையும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் 200-250 குஞ்சுகள் வீதம் தொட்டிகளில் இருப்பு வைக்கலாம்.

உணவு

களை மீன்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி உணவாக இடுகின்றனர். இவற்றைத் தவிர உயிர் உணவுகளாக, கொசுமீன், திலேப்பியா, சிறு கெண்டை, மின்னோ, மண்புழு, இரத்தப்புழு, கோழிக்கழிவு மாமிசம், குடல் போன்றவற்றையும் அளிக்கலாம். சிறிய குஞ்சுகளுக்குத் தினமும் மூன்று முறையும், விரலளவு வளர்ந்த மீன்களுக்கு இருமுறையும், நன்கு வளர்ந்த மீன்களுக்கு ஒருமுறையும் உணவிட வேண்டும்.

தேவையான அளவில் உணவை இட வேண்டும். இந்த அளவை, மீன்களின் பழக்க வழக்கத்தை வைத்து முடிவு செய்யலாம். ஒரு சிலர் பண்ணைகளில் தயாரித்த உணவையும் இடுகின்றனர். களை மீன்களையும், அரிசித் தவிட்டையும் 8:1 – 13:1 வீதம் கலந்து, நூலாகப் பிழிந்து உணவுக் கூடைகளில் வைத்துத் தரலாம்.

சில விவசாயிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்கள் கலவையையும் சேர்த்துத் தருகின்றனர். இந்த மீன்கள் மாமிச உண்ணியாக இருப்பதால், உணவை மாமிசமாக்கும் திறன் 6.5:1 ஆக அமைகிறது. எனினும், வரி விரால் மீன்களுக்கான செயற்கை உணவுகள் இன்னும் தர நிர்ணயம் செய்யப்படவில்லை.

நீரின் தரம்

இரு வாரங்களுக்கு ஒருமுறை குளத்திலுள்ள பழைய நீரில் பத்து சதவீத நீரை வெளியேற்றி விட்டுப் புதுநீரைப் பாய்ச்சி, நீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மற்ற நீர்த்தரக் காரணிகளையும் தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.

உற்பத்தி

விரால் வளர்ப்பு முறை, இருப்படர்த்தி மற்றும் தரப்படும் உணவைப் பொறுத்து, இதன் வளர்ப்புக் காலம் 7-10 மாதங்களாக அமையும். அறுவடையின் போது மீனின் எடை 700-1,000 கிராம் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் 75-460 குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், 9-15.6 கிலோ மீன்கள் கிடைக்கும். இந்தியப் பெருங்கெண்டை வளர்ப்புக் குளத்தில், அம்மீன்கள் 250-300 கிராம் வளர்ந்த நிலையில், விரலளவு வளர்ந்த விரால்களை இருப்பு வைத்து வளர்த்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

நோய் நிர்வாகம்

விரால் மீன்களைத் தாக்கும் நோய்களைத் தக்க சமயத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இதற்குப் பொதுவாகப் பயன்படுத்தும் உயிர்க் கொல்லிகளை, ஆயிரம் கிலோ களைமீன்-அரிசித் தவிடு கலந்த கலவையில் 2 கிலோ உயிர்க் கொல்லிகள் வீதம் கலந்து அளிக்கலாம்.

விற்பனை

ஒரு கிலோ விரால் மீன்களின் விலை 300-500 ரூபாயாகும். இந்த மீன்களை உயிருடன் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். சரியான உத்திகள் மூலம் வரி விரால்களை வளர்த்தால் நல்ல வருவாய் கிடைக்கும்.


மு.முத்து அபிஷேக்,

டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி,

தலைஞாயிறு, நாகை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks