சொட்டுநீர்ப் பாசனக் கருவியைப் பராமரிப்பது எப்படி?

சொட்டுநீர்ப் பாசன vinayaga traders drip irrigation systems karamadai coimbatore drip irrigation system dealers nagarjuna gcnqsbiwjc Copy

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக வேர்ப் பகுதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கான உரத்தையும் நீருடன் சேர்ந்து அளிக்கலாம். பயிரின் பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உரத்தைப் பிரித்துக் கொடுக்கலாம். இதனால், ஆட்செலவைக் குறைக்கலாம். பயிரின் உரப் பயன்பாட்டுத் திறனைக் கூட்டலாம். இம்முறையில் நீர் வீணாவதில்லை. 

முதன்மைக் குழாய், துணை முதன்மைக் குழாய், வடிகட்டிகள், வென்சுரி அமைப்பு மற்றும் நீர்ச்சொட்டியுடன் கூடிய பக்கவாட்டுக் குழாய்கள் போன்றவை, சொட்டுநீர்ப் பாசன அமைப்பிலுள்ள முக்கியப் பொருள்களாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இயங்காமல் போனாலும், சொட்டுநீர்ப் பாசன அமைப்பு இயங்காது.

சுத்தப்படுத்துதல்

சொட்டுநீர்ப் பாசன அமைப்பை, ஹைட்ரோ குளோரிக் அமிலம் (32% செறிவு), கந்தக அமிலம் (93% செறிவு), பாஸ்பாரிக் அமிலம் (85% செறிவு) ஆகியவற்றைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். கந்தக அமிலத்தில் நச்சுத்தன்மை மிகுந்திருப்பதால் அதைப் பயன்படுத்துவதில்லை. கால்சியத்தின் அளவு 50 மி.கி.க்கு அதிகமாக இருக்கும் போது பாஸ்பாரிக் அமிலத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், கால்சிய பாஸ்பேட்டால் வீழ்படிவு உண்டாகும்.

கார்பனேட் படிவங்களைத் தடுத்தல்

பாசனம் செய்யும் போதெல்லாம் நீரில் அமிலத்தைச் செலுத்தி, கார்பனேட் படிவங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்தப் படிவங்களால் அடைப்பு ஏற்பட்ட பிறகு அதை அகற்றுவது கடினம். ஏனெனில், அமிலம் கலந்த நீரைப் பாசனக் குழாய்களில் செலுத்தும்போது, நீர்ச் சொட்டிகளின் வழியாகச் சென்று கொண்டே இருக்கும். அதனால் படிவங்களை அகற்றுவதற்கு அதிக நேரம் அமில நீரைச் செலுத்த வேண்டும். எனவே, கார்பனேட் அளவு நீரில் அதிகமாக இருந்தால், பாசனம் செய்யும் போதெல்லாம் அமிலத்தைச் செலுத்துவது நல்லது. 

ஒவ்வொரு பாசனத்தின் போதும் எவ்வளவு அமிலத்தைச் செலுத்துவது என்பதை, 100 மி.லி. நீருக்கு பி.எச்-7 என்னுமளவில் கொண்டு வரத் தேவைப்படும் அமிலத்தை வைத்து அறியலாம். இந்தச் செயல் முறைக்கு பி.எச். தாளைப் பயன்படுத்தலாம். நீரின் தரம் அடிக்கடி மாறும் என்பதால், இத்தகைய செயல் முறையை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும்.

அடைப்புகளை அகற்றுதல்

சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளில் முழுமையாகவோ அல்லது ஓரளவுக்கோ அடைப்பு இருந்தால் பாசனம் தடைபடும். இந்த அடைப்பை நீக்க, ஹைட்ரோ குளோரிக் அமிலம் பயன்படுகிறது. எவ்வளவு நீரில், எந்த அளவில், எந்த அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் கார அமில நிலை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக நீரில் கார அமில நிலை 4 என இருந்தால் தான் அமிலத்தின் செயல் திறன் மேம்படும். எனவே, நீரின் கார அமில அளவு 4 என வரும் வரையில் அமிலத்தைச் சேர்க்க வேண்டும்.

இந்தச் செயலைத் தொடங்குவதற்கு முன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது,  பாசன அமைப்பை இயக்கிய பிறகு தான் அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும். சிறிய குழாய்கள் அல்லது மற்ற பாகங்களில் அமிலம் படக்கூடாது. பாசன அமைப்பின் மூலம் அமிலச் செயல்பாடு தொடங்கிய பின், அருகிலுள்ள கிளைக் குழாயில் நீரோட்டம் நன்றாக உள்ளதா இல்லையா என்று கவனிக்க வேண்டும்.

அமிலம் கலந்த நீரின் கார அமில அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதேயளவில் கார அமில நிலை இருக்கிறதா இல்லையா என்று 3-4 இடங்களில் வெவ்வேறு கிளைக் குழாய்களில் சோதிக்க வேண்டும். இந்த அமில இயக்கம் 30-40 நிமிடங்கள் இருக்க வேண்டும். பிறகு நிறுத்தி விட வேண்டும். அதன்பிறகு, அமைப்பை 24 மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும்.   அடுத்து, கிளைக் குழாய்கள் மற்றும் துணை முதன்மைக் குழாய்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த அமில நடவடிக்கைக்கு ஒவ்வொரு 50 லிட்டர் நீரிலும் எவ்வளவு அமிலத்தைக் கரைக்க வேண்டும் என்பதைச் சூத்திரத்தின் மூலம் அறியலாம்.

ஒரு தொட்டியில் 50 லிட்டர் நீரை விட்டு பி.எச். அளவு நான்காக வரும் வரையில் நீரில் அமிலத்தைக் கலக்க வேண்டும். இரும்பாலான உரத்தொட்டி மூலம் அமிலநீரைச் செலுத்தினால், அது அந்த உரத்தொட்டியை அரிக்கும். மேலும், நீரின் அமில கார நிலை குறிப்பிட்ட அளவில் தொடர்ச்சியாக இருக்காது. ஏனெனில், அமிலத்தை உரத்தொட்டியில் ஊற்றி விட்டால், தொடக்கத்தில் அமிலநீர் அதிக அடர்த்தியிலும், நேரம் ஆக ஆக, அடர்த்திக் குறைந்தும் குழாய்களுக்குள் செல்லும். உரத்தொட்டிக்குள் நீர் செல்வதற்கும், வெளியே செல்வதற்குமான அழுத்த வேறுபாடு 0.75 மீ. உயரம் இருந்தால், அரை மணி நேரத்தில் அமிலநீர் முழுதும் தொட்டியில் இருந்து வெளியேறும்.

எச்சரிக்கை

எப்போதுமே நீரில் தான் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். ஒருபோதும் அமிலத்தில் நீரைச் சேர்க்கக் கூடாது. அமிலத்தைக் கையாள்வோர் தக்க கவசத்தை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும்.

பிவிசி குழாய்களைச் சுத்தம் செய்தல்

மணல் வடிகட்டி மற்றும் திரை வடிகட்டிகள் இருந்தாலும் மிகச்சிறிய மணல் மற்றும் இதர பொருள்கள், பிவிசி கிளைக் குழாய்கள் வரை வந்து பக்கக் குழாய்களில் செல்லும். இதைத் தடுக்கவே, பிவிசி கிளைக் குழாய்களில் கிண்ணம் போன்ற அடைப்பான் உள்ளது. 8-15 நாட்களுக்கு ஒருமுறை இதைத் திறந்தால், முழு அழுத்தத்தில் வெளியேறும் நீரில் மணல் உள்ளிட்ட சிறிய பொருள்கள் வெளியே வந்து விடும்.

கிளைக் குழாய்களைச் சுத்தம் செய்தல்

கிளைக் குழாய்களைச் சுத்தம் செய்யா விட்டால், அவற்றில் குவியும் பாசியும் மிகச்சிறிய மண் குருணைகளும் சொட்டியின் துளைகளை அடைத்துக் கொள்ளும். இந்தக் குழாய்களைச் சுத்தம் செய்யவே அவற்றின் கடைசியில் அடைப்பான் உள்ளது. 7-15 நாட்களுக்கு ஒருமுறை இதைத் திறந்து முழு அழுத்தத்தில் நீரைப் பாய்ச்சினால், இந்தக் குழாய்களில் படிந்துள்ள அசுத்தம் வெளியேறி விடும்.

இதற்குப் பிறகும் சொட்டிகளில் நீர் வராவிட்டால், கிளைக்குழாயில் பழுது இருக்கலாம். கிளைக்குழாய் அல்லது அதன் இணைப்பு உடைந்திருக்கலாம். இதைத் தவிர, நீண்ட காலம் வரை சொட்டுநீர்ப் பாசன அமைப்பை இயக்காமல் இருந்தால், குழாய்களில் சிலந்திகள் அல்லது இதர பூச்சிகள் கூடுகளைக் கட்டியிருக்கும். இந்த நிலையில், முழு அழுத்தத்தில் குழாயில் நீரை விட வேண்டும்.

மணல் வடிகட்டியைச் சுத்தம் செய்தல்

மணல் வடிகட்டியில் தனிப்பட்ட மணல் நிரப்பப்பட்டுள்ளது. இது நீருடன் சேர்ந்து வரும் தூசுகளைத் தடுத்து நிறுத்தி விட்டு, சுத்தமான நீரை மட்டும் வெளியேற்றுகிறது. இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்யா விட்டால், மணல் வடிகட்டியின் மூலம் செல்லும் நீரின் அழுத்தம் குறைந்து விடும். எனவே,  ஒவ்வொரு வாரமும் மணல் வடிகட்டியைக் கையால் சுத்தம் செய்ய வேண்டும். இதற்குப் பல வழிகள் உள்ளன.

பின்னால் இருந்து சுத்தப்படுத்தல் (Back Wash Method)

இம்முறையில் அடைப்பானைத் திறந்து விட்டு, வடிகட்டியின் உயர் அழுத்தத்தில் நீர் திரும்பிப் பாயும் போது மணலோடு சேர்ந்திருக்கும் குப்பை கூளங்கள் மேலே வந்து விடுவதால், மணல் வடிகட்டிச் சுத்தமாகி விடுகிறது.  உடனே பின் அடைப்பானை மூடிவிட வேண்டும். இல்லையெனில், கிளைக் குழாயில் அசுத்த நீர் பாய்ந்து, சொட்டிகளின் துளைகளை அடைத்து விடும்.

இரசாயன முறை

இம்முறையில் மணல் வடிகட்டியைச் சுத்தம் செய்ய, குளோரின் அமிலம் அல்லது பொடி போன்ற இரசாயனப் பொருள்கள் பயன்படுகின்றன. இந்தச் செயலில், ஹைட்ரோ குளோரிக் அமிலம் அல்லது குளோரின் வென்ச்சுரி மூலம் வடிகட்டியில் நுழைந்து, நீருடன் கலந்து கார்பனேட் இரும்புப் பொருள்கள் மற்றும் இதர காரப் பொருள்களை அழிக்க உதவுகின்றன.  இதற்கான இரசாயனப் பொருள்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது நீரின் தன்மையைப் பொறுத்தது.

ஹட்ரோ சைக்லோன் வடிகட்டி

இந்த வடிகட்டி மணல் அதிகமுள்ள இடங்களில் அமைக்கப்படுகிறது. இதன் கீழேயுள்ள உருளையைத் திறந்து அதில் படிந்துள்ள மணல் துகள்களை, குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நீக்க வேண்டும்.

சல்லடை வடிகட்டி

ஒவ்வொரு நாளும் சொட்டுநீர்ப் பாசனத்தை இயக்குவதற்கு முன் வடிகட்டியின் அடியிலுள்ள கழிவு அடைப்பானைத் திறந்து வடிகட்டியில் தேங்கியுள்ள அழுக்கு நீரை வெளியேற்ற வேண்டும். பின்னர் வடிகட்டியின் மூடியைத் திறந்து அதிலுள்ள வடிகட்டியை வெளியே எடுத்து அதில் படிந்துள்ள அசுத்தங்களை நன்கு கழுவி நீக்க வேண்டும்.

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு வேலை செய்யும் பொழுது அழுத்தமானிகளில் காணப்படும் வித்தியாசம் 0.5 கேஜி./சிஎம்.க்கு மேல் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் வடிகட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

டிஸ்க் வடிகட்டி

சல்லடை வடிகட்டியைப் போலவே தினமும் டிஸ்க் வடிகட்டியையும் பராமரிக்க வேண்டும். வடிகட்டியில் உள்ள டிஸ்க் தேய்ந்து விட்டால் அதை மாற்ற வேண்டும். 


சொட்டுநீர்ப் பாசன VEERAMANI P DR

முனைவர் பெ.வீரமணி,

வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் – 632 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!