கட்டுரை வெளியான இதழ்: மே 2019
நம்மைக் காக்கத் துடியாய்த் துடிப்பது இதயம். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பிருந்தே துடிப்பது. இது, மார்பின் இடப்புறத்தில் வரித்தசையால் அமைவது. ஓய்வே இல்லாமல் சீராகச் சுருங்கி விரிந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புவது இதன் வேலை. இதன் மூலம், உடம்புக்குத் தேவையான உயிர்வளியையும் ஊட்டத்தையும் வழங்கி, வளர்சிதைக் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இது துடிப்பதை நிறுத்தி விட்டால் நமது ஆட்டமெல்லாம் அடங்கிப் போகும்.
பெண்ணுக்கு 250-300 கிராம் அளவிலும், ஆணுக்கு 300-350 கிராம் அளவிலும் அமைந்துள்ள இந்தப் பாசக்கார உறுப்பைக் காக்க வேண்டியது நமது கடமையில்லையா?
பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் தினம் ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், இதயப் படபடப்பு நீங்கும். கருந்துளசி இலையுடன் செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, 10 நாட்கள் சாப்பிட்டால், இதயக் குத்தல் வலி குணமாகும். மருதம்பட்டை, செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கஷாயமாக்கி, 48 நாட்கள் சாப்பிட்டால் இதயம் இதமாக இயங்கும்.
துளசியிலைச் சாற்றையும் தேனையும் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டால், இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும். தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டால் இதயம் பலமாகும். அத்திப்பழத்தைக் காயவைத்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி வீதம் உண்டு வந்தாலும் இதயம் பலமாகும். மாதுளம்பழச் சாறுடன் தேனைக் கலந்து குடித்து வந்தாலும் இதயம் வலுவாகும்.
வாசமுள்ள திருநீற்றுப் பச்சிலையை நுகர்ந்து வந்தால், இதய நடுக்கம் தீரும். இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும். சந்தனப் பொடியைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தாலும், நெஞ்சுவலி அகலும். இஞ்சித் துண்டுகளை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிடுவதும் நெஞ்சுவலிக்கான மருந்தாகும்.
தான்றிக்காய்ப் பொடியை 2 சிட்டிகைத் தேனில் கலந்து நாக்கில் தடவினால், மாரடைப்பு நீங்கும். துளசி விதை 100 கிராம், பன்னீர் 150 மில்லி, சர்க்கரை 25 கிராம் வீதம் எடுத்து நன்றாகக் கலந்து, ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட்டு வந்தாலும், இதயவலி அகன்று விடும்.
மன அழுத்தம், மது, புகை ஆகிய இவையெல்லாம் இதயத்தின் எதிரிகள் மட்டுமல்ல, மகிழ்ச்சி மிகுந்த குடும்பத்துக்கும் எதிரிகள். நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் என்பதை உள்வாங்கி, கிடைத்தற்கரிய இந்த மனித வாழ்வைச் சிறப்புடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி விட்டால், இந்தத் தீய பழக்கங்கள் ஒரு நொடியில் நம்மை விட்டு ஓடிப் போகும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்து, தீய பழக்கங்களைக் கைவிட்டு, மேலே கூறியுள்ள நல்ல செய்கைகளைக் கடைப்பிடித்து, இதயத்தைக் காத்து இவ்வுலகில் இனிதாக வாழ்வோம்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி.,
வளசரவாக்கம், சென்னை-600087, +91 99411 22751.
சந்தேகமா? கேளுங்கள்!