இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 ஆம் ஆண்டைக் கடந்து செல்லப் போகிறோம். ஏதோ ஒரு நாட்டின் வரலாற்றில் அல்ல; உலக வரலாற்றில் இந்த ஆண்டுக்குத் தனியிடம் கிடைக்கும். ஒரு மனிதனை இரு மனிதனையல்ல; ஒரு நாட்டை இரு நாட்டையல்ல; ஒட்டுமொத்த உலகத்தையே கலங்கடித்த, கொரோனா நச்சுயிரித் தாக்கம் நிகழ்ந்த ஆண்டு.

எத்தனையோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், எதற்கும் கட்டுப்படாமல், ஏழை பணக்காரன் பேதமின்றி, பல இலட்சம் உயிர்களைப் பலி கொடுத்த ஆண்டு. உலகளவில், நிலவழி, நீர்வழி, வான்வழி என, போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்ட ஆண்டு. நவநாகரிகப் பழக்க வழக்கங்களில் மயங்கித் திளைத்த மக்களை, முன்னோர் வாழ்வியலை நோக்கிச் சிந்திக்கவும், செயல்படவும் வைத்த ஆண்டு. நமது இயற்கை மருத்துவத்தின் சிறப்புகளை உலகறியச் செய்த ஆண்டு.

கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம் என, அலைந்து கொண்டிருந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து, அன்பு, பாசம், குடும்ப உறவின் சிறப்புகளை, அவர்கள் உணர வைத்த ஆண்டு. ஏனைய உறவுகளை, நட்புகளைத் தேட வைத்த ஆண்டு. உறவுகளின், நட்புகளின் அந்திமச் சடங்குகளில் கூடப் பங்கேற்க விடாமல், கடமைகளைச் செய்ய விடாமல் தவிக்க வைத்த ஆண்டு.

முன் செல்லும் வீரர்கள், எதிரிகளின் மல்லுக்கும் வில்லுக்கும் இரையாகிப் போனாலும், வைத்த கால் பின்வாங்காமல் தொடர்ந்து எதிரிகளைத் தாக்க எத்தனிக்கும் போர் வீரர்களைப் போல, எண்ணற்ற உயிர்கள் மடிந்து போனாலும், மனம் தளராமல் மருந்தில்லா நோயுடன் போராடும் வல்லமை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் என்னும் நம்பிக்கையை மக்களிடம் விதைத்த ஆண்டு.

நவீன வாழ்க்கை முறைகளில் மயங்கி, என்ன செய்கிறோம், இதனால் என்ன விளையும் என்று சற்றும் சிந்திக்காத மக்களால் கெடுக்கப்பட்ட நீரும், நிலமும், காற்றும் புனிதமடைந்த ஆண்டு; மாசடைந்து, பல்வேறு நோய்கள் மற்றும் நோய்களைப் பரப்பும் உயிரிகள் உருவாகும் அளவில் கெட்டுப் போயிருந்த சுற்றுச்சூழலைக் கொஞ்சம் மூச்சாற விட்ட ஆண்டு.

இப்படி இந்த ஆண்டுக்குப் பல்வேறு அடையாளங்கள் உண்டு. ஒரு வகையில், சோதனைகளைக் கொடுத்து, மக்களைச் செம்மை வாழ்க்கையை நோக்கித் திருப்பிய ஆண்டு என்றும் சொல்லலாம். எப்படியோ, இடர்கள் நிறைந்த 2020 ஆம் ஆண்டை நிறைவு செய்யப் போகிறோம்.

எதிர் காலத்தில் இத்தகைய சிக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் வாழ்வதற்குக் கற்றுக் கொள்வோம். இதற்கு இயற்கையை நேசிப்போம்; அன்றாடம் பூசிப்போம்.


2020 டிசம்பர் மாத இதழில் இடம்பெற்ற ஆசிரியர் பக்கம்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!