பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி (pmkisan) என்னும் விவசாய நிதியுதவித் திட்டம் மூலம், சிறு-குறு விவாசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணையில், அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
+ நிலமும் அதற்கான பட்டாவும் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற முடியும்.
+ நிலமிருந்து பட்டா இல்லாதவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசியல் பதவிகளில் இருப்போரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இந்தத் திட்டத்தில் சேர முடியாது.
+ இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், பி.எம்.கிஸான் என்னும் செல்பேசிச் செயலி அல்லது https://pmkisan.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
+ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, இந்தத் தளத்துக்குள் சென்று விவசாயிகளுக்கான பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
+ அடுத்து, அதிலுள்ள புதிய விவசாயிகள் என்னும் பகுதியில், ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
+ அப்போது முகப்பில் தெரியும் விண்ணப்பப் படிவத்தில், கேட்கப்படும் அடிப்படை விவரங்கள், நிலத்தின் சர்வே எண், வங்கிக் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி. எண் ஆகியவற்றை நிரப்பி, சரி பார்த்துச் சேமிக்க வேண்டும்.
+ இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர் அளித்த விவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அந்தந்த மாநில அரசுக்கு, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.
+ அளித்த விவரங்கள் சரியாக இருக்கும் விண்ணப்பங்கள், மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
+ இறுதியாக, விவசாயிகளைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்கும்.
+ இந்தத் திட்டத்தில் இ-கேஒய்சி-யை அப்டேட் செய்தால் தான், தடையில்லாமல் நிதியுதவி கிடைக்கும். இதற்கு, இந்த இணையதளத்தின் முகப்பில் உள்ள இ-கேஒய்சி-யை கிளிக் செய்ய வேண்டும்.
+ அதில், ஆதார் எண் மற்றும் செல்பேசி எண்ணைக் கொடுத்து, செர்ச் பட்டனை கிளிக் செய்தால், செல்பேசிக்கு ஓடிபி வரும். அதைப் பதிவு செய்ததும் இ-கேஒய்சி அப்டேட் ஆகி விடும்.
இந்தத் திட்டம் குறித்து மேலும் விவரங்களை அறிய, 1800 1155 266 என்னும் இலவச அழைப்பு எண் மற்றும் 155261, 011-2430 0606, 011-233 81092, 23382401, 0120- 602 5109 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மு.உமாபதி