கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது:
“உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சுமார் 2.10 மில்லியன் எக்டரில் தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகள், தொழில் முனைவோர், வணிகர்கள் என, சுமார் 12 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஆதாரமாகத் தென்னை சாகுபடி உள்ளது. 98% தென்னை விவசாயிகள் இரண்டு எக்டர் நிலத்துக்கும் குறைவாகவே வைத்துள்ளனர். தென்னை மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் ஆண்டு வருமானம் சுமார் 3,10,000 மில்லியன் ரூபாயாகும்.
அதனால், தென்னை சாகுபடியில் புதிய உத்திகளைப் புகுத்தி, விளைச்சலைப் பெருக்கி, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், தென்னைத் தொழிலை மேம்படுத்தவும் என, தென்னை வளர்ச்சி வாரியம் 12.01.1981 இல் தொடங்கப்பட்டது. தலைமை அலுவலகம் கொச்சியில் உள்ளது. சென்னை, பெங்களூரு, கௌகாத்தி, பாட்னா ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.
மேலும், ஒடிசாவில் பிட்டப்பள்ளி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மராட்டியத்தில் தானே, ஆந்திரத்தில் விஜயவாடா, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் போர்ட்பிளேயர் ஆகிய இடங்களில் மாநில மையங்கள் உள்ளன. தென்னைப் பொருள் வணிகம் மற்றும் தகவல் மையம் தில்லியில் உள்ளது. கேரளத்தில் ஆலுவா வாழக்குளத்தில் தென்னை வளர்ச்சி வாரியத் தொழில் நுட்ப நிறுவனம் உள்ளது. இவற்றின் மூலம் தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
கன்று உற்பத்தி மற்றும் விநியோகம்
இத்திட்டத்தில், நாடு முழுவதும் பத்து இடங்களில் மாதிரி செயல் விளக்கம் மற்றும் விதை உற்பத்திப் பண்ணைகளை அமைத்து, தரமான தென்னங் கன்று உற்பத்திக் குறித்த செயல் விளக்கம் காட்டப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்குத் தேவையான தரமான கன்றுகளை இப்பண்ணைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
மண்டல நாற்றங்கால்
இத்திட்டத்தில், மாநில அரசுப் பண்ணைகளில் செயல்படும் நாற்றங்கால் திட்டத்துக்கு, தென்னை விதைகள், கன்று உற்பத்திக்கான நிதியுதவி, தொழில் நுட்ப உதவி அளிக்கப்படுகின்றன. இதில், மாநில அரசுத் திட்டத்தில் ஒரு கன்றை உற்பத்தி செய்யும் செலவில் பாதி அல்லது ஒரு கன்றுக்கு ரூ.16 வழங்கப்படும்.
தாய் நெற்று உற்பத்தித் தோட்டம் அமைத்தல்
விவசாயிகளுக்குத் தேவைப்படும் தென்னங் கன்றுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட விவசாயிகளின் தோட்டங்களில், தாய் நெற்று உற்பத்திப் பண்ணைகளை அமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், நான்கு எக்டரில் தாய் நெற்று உற்பத்திப் பண்ணையை அமைக்க ஆகும் செலவில் 25% அல்லது ஆறு இலட்ச ரூபாய் மூன்று ஆண்டுகளில் வழங்கப்படும்.
சிறியளவில் நாற்றங்கால் அமைத்தல்
தனியார் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் அமைப்புகளில், சிறியளவில் தரமான நாற்றங்காலை உருவாக்க நிதியுதவி வழங்கப்படுகிறது, இதில், 6,250 தென்னை நாற்றுகளை உருவாக்க, 50,000 ரூபாய், 25 ஆயிரம் நாற்றுகளை உருவாக்க, 2 இலட்ச ரூபாய் வழங்கப்படும்.
சாகுபடி விரிவாக்கம்
சிறு, குறு தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்த, சாகுபடி மானியம் அளிக்கப்படுகிறது. இதில், நெட்டை இரகத்தைச் சமவெளி மற்றும் மலைப்பகுதியில் பயிரிட, எக்டருக்கு ரூ.6,500 மற்றும் ரூ.13,750 வீதம் வழங்கப்படும். கலப்பினத்தைப் பயிரிடவும் இதேயளவில் நிதியுதவி வழங்கப்படும். குட்டை இரகத்தைப் பயிரிட, ரூ.7,500 மற்றும் ரூ.15,000 வழங்கப்படும்.
மறுநடவு மற்றும் புத்துயிரூட்டல்
நோயுற்ற மரங்கள், காய்க்காத மரங்கள், வலுவிழந்த மரங்கள் ஆகியவற்றை அகற்றி விட்டு, புதிய கன்றுகளை நடுவது மற்றும் பழைய மரங்களைச் செறிவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு 2009 ஆம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. நோயுற்ற, வலுவற்ற மரங்களை அகற்றி விட்டு, புதிய கன்றுகளை நடுவதற்கு, எக்டருக்கு ரூ.32 ஆயிரம், இருக்கும் மரங்களைச் செறிவூட்ட ரூ.17,500 வழங்கப்படும். நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்புள்ள, குட்டம் மற்றும் வீரிய இரகங்களைப் பயிரிட எக்டருக்கு ரூ.4 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
பயிற்சிகள்
கேரள மாநிலம் ஆலுவா வாழக்குளத்தில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் தொழில் நுட்ப நிறுவனம், தென்னை சாகுபடி முதல் விற்பனை வரையான பல்வேறு பயிற்சிகளை, விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்க்கு வழங்கி வருகிறது.
தென்னை உணவுத் தயாரிப்பு: இது ஒருநாள் பயிற்சி. கட்டணம் ஒருவருக்கு 500 ரூபாய். இதில், கோக்கனட் சிப்ஸ், சாக்லட், குக்கீஸ், எலுமிச்சை கலந்த சாறு ஊறுகாய் குறித்த, பாடம், செய்முறை, பேக்கிங் ஆகியன இடம்பெறும். இதில், மகளிர் குழு, தனி நபர்கள், தென்னை உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் இணையம் சார்ந்தோர் பங்கு பெறலாம். இதே ஒருநாள் பயிற்சி ரூ.2 ஆயிரம் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக, சட்னி, பௌடர், பால், கேண்டி, ஜெல்லி ஆகிய பயிற்சிகள் கற்றுத் தரப்படும். இதிலும் மேலே உள்ளோர் பங்கு பெறலாம்.
வினிகர் தயாரிப்புப் பயிற்சி: தேங்காய் நீரிலிருந்து, வினிகர் மற்றும் நேட்டாடி கோகோவைத் தயாரிக்கும், இந்த ஒருநாள் பயிற்சிக் கட்டணம் ரூ.2,000. இதில் அடிப்படை அறிவியல் அறிவுள்ள மகளிர் குழு, தனி நபர்கள், உழவர் உற்பத்தியாளர், தென்னை உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் இணையம் சார்ந்தோர் பயிற்சி பெறலாம். ஒரு நிறுவனத்தின் சார்பில் இருவர் கலந்து கொள்ளலாம்.
இளநீர்ப் பதனப் பயிற்சி: இதுவும் ஒருநாள் பயிற்சி. கட்டணம் 1,000 ரூபாய். இதில், மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர், தென்னை உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் இணையம் சார்ந்தோர் பயிற்சி பெறலாம். ஒரு நிறுவனத்தின் சார்பில் இருவர் கலந்து கொள்ளலாம்.
ஆறுநாள் பயிற்சி: நீராவி மூலம் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்புப் பயிற்சிக் கட்டணம் ஒருவருக்கு 2,000 ரூபாய். இது ஆறுநாள் பயிற்சி. தென்னை உற்பத்தியாளர் சங்கம், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், இணையம் சார்ந்தோர் பயிற்சி பெறலாம்.
ஒரு மாதப் பயிற்சி: தென்னை உணவுப்பொருள் தயாரித்தல், நீராவில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்தல், தேங்காய்ப்பொடி மற்றும் பால் தயாரித்தல், உணவுப் பாதுகாப்புக் குறித்த ஒரு மாதப் பயிற்சிக் கட்டணம், ஒருவருக்கு ரூ.12,000 ஆகும். பட்டப்படிப்புப் படித்தவர்கள் இதில் சேரலாம்.
ஒருவாரப் பயிற்சி: இது, தென்னைப் பொருள்களை இரசாயனப் பகுப்பாய்வு செய்யும் ஒருவாரப் பயிற்சி. கட்டணம், ஒருவருக்கு 7,500 ரூபாய். இதில், வேதியியல், உயிர் வேதியியல், உணவு வேதியியல், உணவுத் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் சேரலாம்.
இருவாரப் பயிற்சி: இது, நுண்ணுயிரியல் பகுப்பாய்வு சார்ந்த இருவாரப் பயிற்சி. கட்டணம், ஒருவருக்கு 15,000 ரூபாய். நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம்.
சந்தை, சந்தை ஆய்வு, புள்ளி விவரம் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு
சந்தை மேம்பாடு: தென்னைப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்களின் வணிகத்தைக் கருத்தில் கொண்டு, பரப்புரை, விழிப்புணர்வு முகாம்கள், விளம்பரங்கள், விற்போர் வாங்குவோர் சந்திப்புகள், கண்காட்சிகள் போன்றவற்றை, தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும், தென்னை வளர்ச்சி வாரியம் செய்து வருகிறது.
சந்தை ஆய்வு: நாட்டின் முக்கியச் சந்தைகளில் தேங்காய் வரவு, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை விவரங்களை, தினசரி, வாரம், மாதம் இருமுறை, மாதம் மற்றும் ஆண்டு ஆகிய காலமுறையில் சேகரித்து ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும் தென்னைத் தொழில் முனைவோர்க்கும் அளிக்கிறது.
ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு: மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம், தென்னை சார்ந்த ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு, தென்னை வளர்ச்சி வாரியத்தை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவாக நியமித்துள்ளது. இதனால், கயிறு போன்ற தென்னைப் பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு, பதிவு மற்றும் உறுப்பினர் சான்றை, தென்னை வளர்ச்சி வாரியம் வழங்கி வருகிறது.
தென்னைத் தொழில் நுட்ப இயக்கம்
திட்டச் செயல்பாடு-1: பூச்சி மற்றும் நோய் தாக்கிய தோட்டங்களைச் சரி செய்யும் உத்திகளைக் கண்டறிய, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமம், வேளாண் பல்கலைக் கழகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு, மொத்தத் திட்டத் தொகை அல்லது அதிகளவாக ரூ.50 இலட்சம் வழங்கப்படும். தொழில் நுட்பச் செயல் விளக்கம் அமைக்க, மொத்தத் திட்டத் தொகை அல்லது அதிகளவாக ரூ.25 இலட்சம் வழங்கப்படும். புதிய உத்திகளைச் செயல்படுத்த ஆகும் செலவில் 25% உதவியாக வழங்கப்படும்.
அரசு சாரா அமைப்புகள் புதிய உத்திகளைக் கண்டறிய, திட்டத் தொகையில் பாதி அல்லது அதிகளவாக ரூ.25 இலட்சம் வழங்கப்படும். தொழில் நுட்பச் செயல் விளக்கம் அமைக்க, தனி நபர்கள், விவசாயிகள் குழு, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுக்கு, திட்டத் தொகையில் பாதி அல்லது அதிகளவாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும். புதிய உத்திகளைச் செயல்படுத்த, அரசு சாரா அமைப்புகள், விவசாயக் குழுக்கள் போன்றவற்றுக்கு, ஆகும் செலவில் 25% உதவியாக வழங்கப்படும்.
திட்டச் செயல்பாடு-2: பதப்படுத்துதல் மற்றும் பன்முகப் பொருள்களை உற்பத்தி செய்யும் உத்திகளைக் கண்டறிய, அரசு துறைகள் மற்றும் சங்கங்களுக்கு, மொத்தத் திட்டத்தொகை அல்லது அதிகளவாக ரூ.75 இலட்சம் உதவியாக வழங்கப்படும். தொழில் நுட்பச் செயல் விளக்கம் அமைக்க, மொத்தத் திட்டத்தொகை வழங்கப்படும். புதிய உத்திகளைச் செயல்படுத்த, மொத்தச் செலவில் 25% வழங்கப்படும்.
அரசு சாரா அமைப்புகள், தனி நபர்கள், தொழில் முனைவோர், பிற ஆராய்ச்சி அமைப்புகள், புதிய உத்திகளைக் கண்டறிய, திட்டத் தொகையில் 75% அல்லது அதிகளவாக ரூ.35 இலட்சம் உதவியாக வழங்கப்படும். தொழில் நுட்பச் செயல் விளக்கம் அமைக்க, திட்டத் தொகையில் 50% வழங்கப்படும். புதிய உத்திகளைச் செயல்படுத்த, ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிர்க்கு 33.3%, அந்தமான் நிக்கோபரில் உள்ள எச்விஏ பிரிவினர்க்கு 50% அல்லது அதிகளவாக ரூ.50 இலட்சம் உதவியாக வழங்கப்படும்.
தகவல் தொழில் நுட்ப நடவடிக்கைகள்
தென்னை சாகுபடி தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மற்றும் வெளியீடுகள் மூலம் பரப்பும் பணியைத் தென்னை வளர்ச்சி வாரியம் செய்து வருகிறது. மேலும், வேலை தேடும் இளைஞர்கள், ஊரக மகளிர்க்கு, தொழில் நுட்பத்திறன் பயிற்சி மற்றும் கண்காட்சி, பொருட்காட்சி நடத்துதல், அவற்றில் பங்கேற்றல் ஆகியன இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகின்றன.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நீரா தொழில் நுட்பவியலாளர் மற்றும் கைத்திறன் உற்பத்தியாளர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், தென்னைப் பொருள்கள் அறுவடை மற்றும் தென்னை மரங்களை நவீன உத்திகள் மூலம் பராமரிக்கும் பயிற்சிகளை அளிப்பதற்காக, தென்னை மர நண்பர்கள் குழு என்னும் அமைப்பை ஏற்படுத்தி வருகிறோம்.
தேசிய விருதுகள்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தேசிய அளவில் தென்னை சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகள், புதிய உத்திகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் புதிய தயாரிப்புகள், ஏற்கெனவே உள்ள பொருள்களில் புதிய முறைகள், தர மேம்பாடு, பன்முக உற்பத்தி, சந்தை, விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றில் சாதிக்கும் விவசாயிகளுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு
திட்டங்களைச் செயல்படுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்துதல், செலவைக் குறைத்தல், மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்துச் சந்தைப் படுத்துதல், சிறந்த துணைப் பொருள்களைத் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்த வழிகாட்டுதல் மூலம், தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையில், மூன்றடுக்கு முறையில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
மூன்றடுக்கு என்பது, தென்னை உற்பத்தியாளர் சங்கம், தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தலைமை அமைப்பான தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியனவாகும். ஒவ்வொரு தென்னை உற்பத்தியாளர் நிறுவனமும், அதனதன் செயல் எல்லையில் எட்டுக்கோடி காய்களை உற்பத்தி செய்யும் 1,000 தென்னை விவசாயிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பயிர்க் காப்பீடு
எதிர்பாராமல் மரங்கள் மடிந்து போவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இதற்கான காப்புக் கட்டணத்தில் பாதியைத் தென்னை வளர்ச்சி வாரியமும், கால்வாசியை மாநில அரசும் செலுத்தும். மீதமுள்ள கால்வாசிக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். 4-15 வயதுள்ள மரங்களுக்கு ரூ.900 வீதமும், 16-60 வயதுள்ள மரங்களுக்கு ரூ.1,400 வீதமும் காப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் காப்பீடு
தென்னை மரங்களில் ஏறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இந்த வேலைக்கு வருவோரை ஊக்கப்படுத்தும் நோக்கில், கேரா சுரக்ஷா என்னும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக் காப்புத்தொகை ரூ.94.40 ஆகும். இதில் வாரியம் சார்பாக ரூ.71.40 செலுத்தப்படும். தொழிலாளர்கள் பங்கு ரூ.23 ஆகும். இத்திட்டத்தில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை இரண்டு இலட்ச ரூபாயாகும்.
எனவே, தென்னை விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் விற்பனையாளர்கள், தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம்’’ என்றார்.
பசுமை