மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட்.

ணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம்.

வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும் சத்துகள் அதிகமாதல்.

இயல்நிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள்: மண்ணில் அதிகளவு அல்லது குறைந்தளவு நீர்ப்புகும் தன்மை, கடினத் தன்மை, மேற்பரப்புக் கடினமாதல், சொதசொதப்பாக உள்ள மண், மணல் கலந்த மண் மற்றும் பல.

உவர் மண்

இந்த மண்ணில் நீரில் கரையும் உப்புகள் அதிகமாக இருப்பதால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, முக்கிய மற்றும் பக்கக் கால்வாய்களை 60 செ.மீ. ஆழம், 45 செ.மீ. அகலத்தில் அமைத்து, மண்ணில் உள்ள உப்புகளை வழியச் செய்ய வேண்டும். எக்டருக்கு 5 டன் தொழுவுரம் வீதம் எடுத்து, நெற்பயிரை நடவு செய்வதற்கு 10-15 நாட்கள் முன்பும், தோட்டப் பயிர்களில் விதைப்பதற்கு முன்பும் இட வேண்டும்.

களர் மண்

களர் மண்ணில் அதிகளவு சோடியம் உப்புகளுடன், 15 சதத்துக்கு மேல் சோடியமும் 8.5 சதம் அமிலம் மற்றும் காரத்தன்மையும் இருக்கும்.

தீர்வு

தகுந்த ஈரம் மண்ணில் இருக்கும் போது உழ வேண்டும். தேவையைப் பொறுத்து நிலத்தில் ஜிப்சத்தை இட வேண்டும். நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வடிகால் வசதி இருந்தால், கரையும் உப்புகள் வழிந்தோடி விடும். எக்டருக்கு 15 டன் பசுந்தாள் உரம் வீதம் இட்டு உழுதுவிட வேண்டும்.

அமில மண்

அமில மண்ணில் அமிலக் காரத் தன்மை 6-க்குக் குறைவாக இருக்கும். ஹைட்ரஜன், அலுமினியம் அதிகளவில் இருப்பதால், மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மக்னீசியம், மாலிப்டினம் மற்றும் போரான் சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

தேவைப்படும் சுண்ணாம்பை நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். மேலும், டோலமைட், மரத்தாள், மரக்கூழ் அரவை ஆலையில் இருந்து வரும் சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இரும்பு மற்றும் அலுமினிய நச்சுத் தன்மை

அதிகச் செறிவுடன் இரும்பு மற்றும் அலுமினியம், குறிப்பாக, நீர்த் தேங்கிய மண்ணில் காணப்படும். இந்நிலை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் காணப்படும். இதைச் சரி செய்ய, தேவையான அளவு சுண்ணாம்பு மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகளைக் கலந்து மண்ணில் இட வேண்டும்.

அங்கக எருவை இடுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தேவையான சுண்ணாம்பை, தழை, மணி, சாம்பல் சத்துடன் கலந்து இடலாம். மேலும், துத்தநாக சல்பேட் 0.5 சதம், டிஏபி 1 சதம், பொட்டாஷ் 1 சதம் ஆகியவற்றைக் கலந்து, தூர் விடும் பருவம் மற்றும் கதிர் விடும் பருவத்தில் இலைகளில் தெளிக்கலாம்.

இறுக்கம் அடையாத சேற்று மண்

இந்த மண்ணில் உழுதால் மாடுகள் மற்றும் வேலையாட்கள் மண்ணில் சிக்கிக் கொள்வார்கள். நெல் நாற்றுகளுக்கு மிக மோசமான பிடிமானம் ஏற்படும். இந்த மண்ணைச் சரி செய்ய, எட்டு மடங்கு மணலை, 400 கிலோ எடையுள்ள கல் உருளை அல்லது எண்ணெய்த் தொட்டியில் நிரப்பி உருட்ட வேண்டும். இத்துடன் எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு வீதம் எடுத்து ஆண்டுக்கு மூன்று முறை இட்டு உழ வேண்டும்.

மணல் சார்ந்த மண்

இதில் அதிகளவில் மணல் இருப்பதால் நீர் அதிகளவில் வழிந்தோடும். சத்துகளும் மண்ணில் நிற்காமல் வழிந்தோடி விடும். 400 கிலோ எடையுள்ள கல் உருளை அல்லது எண்ணெய்த் தொட்டியில் 8 மடங்குக் கற்களை நிரப்பி, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, தகுந்த ஈரப்பதம் இருக்கும் நிலையில் உருட்ட வேண்டும். ஏரி வண்டலை, கடற்கரை மணல் கலந்த மண்ணில் இட்டால், உற்பத்தித் திறனைக் கூட்டலாம்.

கடினமான மேற்பரப்புள்ள மண்

கடினமான மேற்பரப்பைக் கொண்ட செம்மண்ணில் 15 செ.மீ. ஆழம் வரை இருக்கும் களிமண் மற்றும் இரும்பு ஆக்ஸைடு, மேல் தட்டில் படிந்து விடுவதால், வேர்கள் கீழ்நோக்கி வளர முடியாது.

தீர்வு

உளிக்கலப்பை மூலம் 0.5 செ.மீ. இடைவெளி விட்டு ஒரு பக்கமும், பிறகு அதற்கு எதிராகவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உழ வேண்டும். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவு வீதம் இட்டு உழ வேண்டும்.

மேற்பரப்புக் கடினமாக உள்ள மண்

மோசமான மண்ணமைப்பு உள்ள நிலத்தின் மேற்பரப்பில் மழைத்துளி படும்போது, இறுகி மேற்பரப்புக் கடினமாகி விடும். களிமண் மேற்பரப்பில் நாற்றுகள் வெளிவர முடிவதில்லை. மண்ணின் மேற்பரப்பில் உருவாகும் கடினத் தன்மையை மாற்ற, கொத்துக் கலப்பை அல்லது சிறு கலப்பை அல்லது பலுகு கொண்டு மண்ணைக் கிளறி விட வேண்டும்.

எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு அல்லது ஜிப்சம் மற்றும் 12.5 டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். அறுவடைக்குப் பிறகு, பயிர்க் குப்பையை அப்படியே மண்ணில் மட்க விட வேண்டும்.

கடினமான களிமண்

களிமண்ணில் அதிகளவு களிமண் துகள்கள் இருப்பதால், மண்ணில் நீர் உள்ளே புகாது. சத்துகள் அனைத்தும் அங்கேயே தங்கி விடும். இதைச் சரி செய்ய, எக்டருக்கு 100 டன் ஆற்று மணல் வீதம் இட வேண்டும். இறக்கை கலப்பை அல்லது வட்டக் கலப்பை மூலம் கோடையில் ஆழமாக உழ வேண்டும்.

குறைவாக நீர்ப்புகும் கறுப்பு மண்

இதைச் சரி செய்ய, எக்டருக்கு 100 வண்டி செம்மண் கலந்த இருபொறை மண்ணை இட வேண்டும். இறக்கை கலப்பை அல்லது வட்டக் கலப்பை மூலம் கோடையில் ஆழமாக உழ வேண்டும். எக்டருக்கு 25 டன் தொழுவுரம், மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக்கழிவை இட வேண்டும். இதனால், மண்ணின் இயல்புத் தன்மையும், நீர் உள்ளே வடியும் தன்மையும் மேம்படும்.

அதிகமாக நீர்ப்புகும் செம்மண்

இதைச் சரி செய்ய, எக்டருக்கு 25 டன் ஏரி வண்டல் அல்லது கறுப்பு மண்ணை இட வேண்டும். மேலும், எக்டருக்கு 25 டன் தொழுவுரம், மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக்கழிவைக் கலந்து இட வேண்டும். இறக்கைக் கலப்பை அல்லது வட்டக் கலப்பை மூலம் கோடையில் ஆழமாக உழ வேண்டும்.

உளிக்கலப்பை உழவு

மேல் மண்ணுக்குக் கீழே கடினமாதல் தன்மை பெரும்பாலான நிலங்களில் காணப்படுகிறது. இதனால், பயிர்களுக்குச் சத்துகள் கிடைக்காமல் விளைச்சல் குறையும். மேலும், நீர் மண்ணுக்குள் செல்வதும் தடைபடும். காற்று மற்றும் சத்துகள் பயிர்களுக்குக் கிடைப்பதும் தடைபடும். இத்தகைய மண் வகைகள், கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் காணப்படுகிறது.

நிலத்தை உளிக்கலப்பை மூலம், 50 செ.மீ. இடைவெளி விட்டு இரண்டு திசைகளிலும் குறுக்கு மற்றும் நீளவாக்கில் உழ வேண்டும். கடினமான இரும்பால் ஆன உளிக் கலப்பை, 45 செ.மீ. ஆழம் வரை மண்ணில் சென்று மண்ணின் கடினத்தட்டை உடைக்கும்.

மேலும், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது ஆலைக்கழிவு அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவை நிலத்தில் இட வேண்டும். நாட்டுக் கலப்பை மூலம் இரண்டு முறை உழுது உரங்களை மண்ணில் கலக்க வேண்டும்.

வறண்ட பகுதியில் உள்ள கறுப்பு மண்ணில் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க, வெட்டிவேர் அல்லது எலுமிச்சைப் புல்லை, சரிவுக்குக் குறுக்கே மற்றும் மேட்டுப் பகுதியை ஒட்டி 0.5 மீட்டர் இடைவெளி விட்டு வளர்க்க வேண்டும்.

மானாவாரிப் பருத்தி சாகுபடி

களிமண் கலந்த இருபொறை மானாவாரி மண்ணில் கடினத்தட்டு உருவாகும். இதனால், நீர்ப்புகும் திறன், நீர்பிடிப்புத் திறன், வேர் வளர்ச்சி மற்றும் சத்துகளை எடுத்துக் கொள்ளுதல் தடைபட்டு, விளைச்சல் மோசமாகப் பாதிக்கப்படும்.

இதைச் சரி செய்ய, 40-50 செ.மீ. ஆழத்தில் 50 செ.மீ இடைவெளி விட்டு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை உளிக்கலப்பை மூலம் உழுதால், வேர் வளர்ச்சி, ஈரப்பதம் 20-30 சதம் அதிகமாகும். இதனால், பருத்தியில் விளைச்சல் 25 சதம் உயரும்.


நா.மாரிக்கண்ணு, ப.கருப்பசாமி, முனைவர் ஜெ.திரவியம், வேளாண்மை அறிவியல் நிலையம், புழுதேரி, கரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!