மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பொய்ப்பதும், அடங்காமல் பெய்வதும் இயற்கையின் விதியாகி விட்ட சூழலைத் தாங்கி வாழும் திறனை நாம் கைக்கொண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. கும்பகர்ணனைப் போலத் தூங்கிக் கொண்டிருந்த கார்மேகக் கூட்டங்கள், கர்ண வள்ளலாய், தாங்க முடியாத அளவுக்குப் பெருமழையைக் கொட்டித் தீர்த்துள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அத்தகைய பெருமழையை இந்த ஆண்டில் நாம் எதிர் கொண்டுள்ளோம்.

கடலோர மாவட்டங்கள், காவிரிப் பாசன மாவட்டங்கள், மலைப்பகுதி சார்ந்த மாவட்டங்களைத் தவிர பல மாவட்டங்களில் போதிய மழையில்லை. தமிழகம் முழுவதும் சீரான மழைப்பொழிவு இல்லாததால், மழைநீரைப் பெருமளவில் சேமிப்பதும், வறட்சியைத் தவிர்ப்பதும் சவால்களாக உள்ளன. அதனால், மழைக்காலம் முடிந்த சில மாதங்களில் குடிநீர், பாசன நீர், ஏனைய பயன்பாடுகளுக்குத் தேவையான நீரானது கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு தொடர்ந்து விடும்.

எனவே, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நம் எல்லோருக்கும் அவசியம். பழுதடைந்த குழாய்கள் மூலம் குடிநீர் வீணாதல், பொறுப்பின்றிக் குடிநீர்க் குழாய்களைத் திறந்து விடுதல், தேவை கடந்து செலவழித்தல் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். நீரின்றி அமையாது உலகு. பணத்தின் மதிப்பைக் காட்டிலும் நீரின் மதிப்பு மிகமிக அதிகம். ஏனெனில், பணம் நாம் தயாரிப்பது; நீர் இயற்கையால் மட்டுமே கிடைப்பது.

எனக்கு நீர் கொடு என்று நாம் இயற்கைக்கு ஆணையிட முடியாது. அது கொடுக்கும் போது பெற்றுக் கொண்டு, அடுத்துக் கொடுக்கும் வரையில் அதைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். எனவே தான், காசைப் போலக் கண்டபடி செலவழிக்காதீர்; நீரைக் கணக்காகச் செலவழிக்க மறந்து விடாதீர் என்று சொல்ல வேண்டியுள்ளது.

விவசாயத்திலும் முறையறிந்து, தேவையறிந்து நீரைப் பயன்படுத்த வேண்டும். இன்றைய அறிவியல், நீரை வீணாக்காமல் பயிருக்குக் கொடுக்கும் பல்வேறு பாசன முறைகளை, சொட்டுப் பாசனம், தெளிப்புப் பாசனம், தூவல் பாசனம், நுண்ணீர்ப் பாசனம் என, வகை வகையாக வழங்கியிருக்கிறது. மேலும், குறைந்த நீரில் நிறைந்த மகசூலைத் தரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

மானாவாரியில் விளையும் பயிர்களை அதிகளவில் பயிரிட்டு, நிறைய மகசூலை எடுப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்த வேண்டும். பாசனமே தேவைப்படாத மரங்களை வளர்த்து நாமும் பயனடைந்து, சூழல் மேம்படவும் துணை செய்ய வேண்டும். ஏனெனில், சூழல் மேம்பட்டால் பருவ நிலைகள் சீராகும். அதனால், மழைப்பொழிவும் சீராகும். இந்நிலையை மரங்களால் மட்டுமே உருவாக்க முடியும். மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!


ஆசிரியர்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!