நியான் டெட்ரா (Paracheir odoninnesi) மீன், தென் அமெரிக்காவைச் சார்ந்த சிறிய நன்னீர் மீனாகும்.
ஒளிரும் நிறங்கள், அமைதியான குணம், எளிதான கவனிப்பு, எளிய உணவு ஆகியன இம்மீனின் சிறப்புகள் ஆகும்.
இதனால், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் இம்மீனை மிகவும் விரும்புகின்றனர்.
சாரிக்டே (Characidae) குடும்பத்தைச் சார்ந்த நியான் டெட்ரா மீன், முதன் முதலாக 1934 இல், அமேசான் காடுகளில் கண்டறியப்பட்டது.
இது நியான் மீன் எனவும் அழைக்கப்படும். தொட்டியின் நடுப்பரப்பில் அமைதியாக, கூட்டமாக வாழும்.
அமெரிக்காவில் இருந்து மாதந்தோறும் இருபது இலட்சம் மீன்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன.
வாழ்நாட்கள்
நியான் டெட்ரா மீன்கள், இயற்கையில் சுமார் 8 ஆண்டுகள் வரை வாழும்.
ஆனால், அலங்கார மீனாகத் தொட்டிகளில் வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன.
உடல் அமைப்பு
நியான் டெட்ரா மீன்களின் உடலில் நீலநிறக் கோடு ஒன்று, கண்களில் இருந்து வால் வரையில் நீண்டிருக்கும்.
மேலும், சிவப்பு நிறத்தில் கிடைமட்டக் கோடு ஒன்று, உடலின் மையத்தில் இருந்து வால் துடுப்பு வரையில் நீண்டிருக்கும்.
உடல் பூரிக்கட்டையைப் போல, வட்டமான முன்பகுதி மற்றும் பெரிய கண்களுடன் இருக்கும். ஒரு மீன், 1.5 முதல் 2.5 அங்குல நீளம் வரை வளரும்.
இதன் ஒளிமயமான நிறம் மீன் வளர்ப்போரின் ஆர்வத்தைத் தூண்டும். இது, இருட்டில் இருந்தாலும் எளிதாக அடையாளம் காணலாம்.
பெரிய மீன்கள் மூலம் ஆபத்து வரும் போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிறத்தை மறைத்துக் கொள்ளும்.
மேலும், தூங்கும் போது அல்லது உடல் நிலை பாதிப்பின் போது, இதன் நிறம் மங்கியிருக்கும்.
இணக்கமான மீனினங்கள்
நியான் டெட்ரா மீன்கள் அமைதியாக, கூட்டமாக வாழும். இவற்றுடன், தொட்டியின் அடிப்பரப்பில் வாழும் மீன்களை வளர்ப்பது, தொட்டிக்குக் கூடுதல் அழகைச் சேர்ப்பதாக இருக்கும்.
நியான் டெட்ரா மீன் வளரும் தொட்டியில், கௌராமி, பார்ப், சிறிய கெளுத்தி மீன் வகைகள், சிறிய சிச்சிலிட்ஸ் போன்ற மீன்களை விடலாம்.
ஆனால், பெட்டாஸ், தேவதை மீன், பெரிய சிச்சிலிட்ஸ் போன்றவற்றை விடக் கூடாது.
மேலும், நியான் டெட்ரா மீன்களைக் காட்டிலும் பெரிய மீன்களைத் தொட்டியில் வளர்க்கக் கூடாது.
தொட்டி அமைத்தல்
தென் அமெரிக்காவைச் சேர்ந்த நியான் டெட்ரா மீன், பிரேசில், கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. அமேசான் ஆற்றுப் படுகையில், இம்மீன்கள் அதிகமாக உள்ளன.
அடர்ந்த காடுகளின் நிழலுக்குள் பாய்ந்து செல்லும் அமேசான் நதியின் மேற்பரப்பை, இலைகள், தாவரங்கள் போன்றவை மூடியிருப்பதால்,
சூரியவொளி நீரின் அடி வரையில் செல்வதில்லை. எனவே, இருட்டாக உள்ள நீரில், மீன்கள் மிகவும் ஒளிமயமாகத் தெரியும்.
ஆகவே, இந்த மீன்கள் வாழும் தொட்டியை, இயற்கையாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
தொட்டியில் நிழல் அதிகமாக இருப்பதற்கு. நீர்த் தாவரங்கள், நீரில் ஊறிய கட்டைகள் மற்றும் கற்களை இடலாம்.
மேலும், சிறிய பாறைகள், கூழாங்கற்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள் மூலம், ஆற்றுப் படுகையைப் போல அமைக்கலாம்.
நீர் நிர்வாகம்
நீர் நிர்வாகத்தில் சிறிதளவு மாற்றம் இருந்தாலும், நியான் டெட்ரா மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில நேரங்களில் இறந்து விடவும் கூடும்.
புதிதாக அமைத்த தொட்டிகளில் இவற்றை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நன்கு பழக்கப்பட்ட தொட்டியில் நீர்த் தாவரங்களை வளர்த்து இம்மீன்களை விடுவது நல்லது.
வெப்பநிலை 21-26 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். கார அமிலத் தன்மை 6.0-7.0 இருக்கலாம்.
மென்னீரைப் (<dGH) பயன்படுத்த வேண்டும். குறைந்த ஒளியைத் தரும் ஃப்ளோரசன்ட் விளக்கை, அதாவது, நான்கு லிட்டர் நீருள்ள தொட்டிக்கு 2 வாட் விளக்கைப் பொருத்தலாம்.
இந்த மீன்களின் கழிவு குறைவாகவே இருக்கும். எனவே, தேவைப்படின், பஞ்சு வடிகட்டி மூலம் நீரைச் சுத்தம் செய்யலாம்.
ஒவ்வொரு வாரமும் 25 சதம் நீரை மாற்ற வேண்டும். நீரை அதிகளவில் மாற்றினால் மீன்கள் பாதிக்கும்.
நூறு லிட்டர் நீருள்ள தொட்டியில், 20 நியான் டெட்ரா மீன்களை வளர்க்கலாம்.
உணவு
நியான் டெட்ரா மீனினம் அனைத்து உண்ணி ஆகும். காடுகளில் சிதைவுற்ற தாவரங்கள், பாசிகள், பூச்சிகள், முட்டைப் புழுக்கள், சிறு இறைச்சித் துண்டுகள் போன்றவற்றை உண்ணும்.
இவற்றைத் தொட்டியில் வளர்க்கும் போது, துகள் உணவு, உறைந்த உணவு, உயிரி உணவு, காய்கறிகள், இரத்தப் புழுக்கள்,
ஆர்டீமியா, டாப்னீயா, டியுபிபெக்ஸ் போன்றவற்றை உணவாகக் கொடுக்கலாம்.
நியான் டெட்ரா மீன்களின் வாய் சிறிதாக இருப்பதால், சிறிய துண்டுகளாக உள்ள உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.
அதையும் மூன்று நிமிடங்களில் உண்ணும் அளவில் இட வேண்டும். அதற்கு மேல் உணவு மீதமிருந்தால் அது, நைட்ரஜன் சுழற்சியைப் பாதிக்கும்.
உணவை, ஒரு நாளைக்கு 2-3 பகுதியாகப் பிரித்து இடலாம். நன்கு வளர்ந்த மீன்களுக்கு ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே உணவைத் தர வேண்டும்.
நோய்
நியான் டெட்ரா மீன்களை, நியான் டெட்ரா என்னும் நோய் தாக்கும். இதைக் குணப்படுத்த இயலாது; உயிரிழப்பு ஏற்படும்.
இந்நோய் தாக்கினால், திடீர் நிறமிழப்பு, சீரற்று நீந்துதல், தொட்டியின் அடிப்பகுதிக்குச் செல்லுதல், வயிற்றில் கட்டிகள் வளர்தல். வயிறு சுருங்கி எடை குறைதல் போன்றவை நிகழும்.
இந்நோய் வராமல் இருக்க, நீரைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். தக்க சமயத்தில், பகுதி நீரை மாற்றுதல்,
அதிக நிழல் தரும் விதத்தில், நீர்த் தாவரங்கள் மற்றும் சிறிய பாறைகளை அமைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
இனப்பெருக்கம்
நியான் டெட்ரா மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு, நீரில் வெளிச்சம் குறைவாக இருக்க வேண்டும்.
நீரின் கார அமிலத் தன்மை 5.5க்கு மேல் இருக்க வேண்டும், வெப்பநிலை 75 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்க வேண்டும்.
இந்த மீன்கள் 12 வாரங்களில் நன்கு வளர்ந்து இனப்பெருக்கம் செய்யத் தயாராகி விடும்.
இவற்றைத் தொட்டியில் இனப்பெருக்கம் செய்ய வைப்பது சற்றுக் கடினம்.
வீட்டை அழகு செய்ய, மன அமைதிக்காக, அழகான நியான் டெட்ரா மீன்களைத் தொட்டிகளில் வளர்ப்போம்; மன அமைதி பெறுவோம்.
பொ.கார்த்திக் ராஜா, சா.ஆனந்த், ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி, ஈரோடு பவானி சாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானி சாகர் – 638 451. ஈரோடு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!