கட்டுரை வெளியான இதழ்: மே 2021
விசைத் தெளிப்பானில், எந்திரம், தெளிப்பான் ஆகிய இரு பகுதிகளும், திரவ மருந்துக் கலன், திரவ மருந்து வெளிவரும் குழாய், காற்றுக்குழாய் ஆகிய முக்கியப் பகுதிகளும் உள்ளன. இதில் பொருத்தப்படும் எந்திரம் 1.2 முதல் 1.7 குதிரைத் திறன் வேகமிக்கது. பெட்ரோலில் இயங்கும் இந்த எந்திரச் சூட்டைக் காற்றுக் குளிர்விக்கும். இது நிமிடத்துக்கு 6,000 முறை சுற்றும். இதிலுள்ள காற்றூதி வேகமாகச் சுழல்வதால், காற்றானது விசையுடன் தள்ளப்படும்.
இந்தக் காற்றானது மருந்துக் கலனிலிருந்து சிறுகுழாய் வழியே வரும் திரவ மருந்தை, மிக நுண்ணிய திவலைகளாக வெளியேற்றும். வெளியேறும் மருந்தின் அளவைக் கட்டுப்படுத்த, சிறிய நெகிழித் திருகி, மருந்து வரும் குழாய் முனையில் பொருத்தப்பட்டு இருக்கும். இதைப் பயன்படுத்தி நிமிடத்துக்கு 0.6, 1.0, 2.0, 2.5 வீதம், மருந்துத் தெளிப்பு அளவை, பயிர்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
சிறப்புகள்
விசைத் தெளிப்பான் மூலம் குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் மருந்தைத் தெளிக்கலாம். திரவ மருந்தை நுண் திவலைகளாக மாற்றித் தரும். பயிர்களின் எல்லாப் பாகங்களிலும் நனையும் வகையில் தெளிக்கலாம்.
நெடுநாட்கள் பயன்பட
மருந்தை அடித்து முடித்ததும் மருந்துக் கலனில் உள்ள மருந்தைக் காலி செய்து விட்டுச் சுத்தம் செய்து வைக்க வேண்டும். மூடி மற்றும் நெகிழிக் குழாய்களைத் திறந்து வைத்து ஈரத்தை உலர வைக்க வேண்டும். பல நாட்கள் பயன்படாமல் இருந்தால், பெட்ரோல் முழுவதையும் வடித்துவிட வேண்டும். கார்ப்பரேட்டர் மற்றும் பெட்ரோல் குழாய்களில் பெட்ரோல் இருக்கக் கூடாது.
மருந்தடிப்பு இல்லாத நாட்களில், வாஷர்கள், பேரிங்குகள் போன்றவற்றுக்கு உய்வு எண்ணெய் இடுதல் அவசியம். நீண்ட நெகிழிக் குழாய்களை வட்டமாகச் சுற்றிப் படுக்கை வசத்தில் இருட்டில் வைக்க வேண்டும். இதனால், இந்தக் குழாய்கள் நெடுநாட்கள் உழைக்கும்.
எந்திரம் நெடுநாட்கள் உழைக்க
பெட்ரோல் கலனில் சரியான அளவில் உய்வு எண்ணெய்யைக் கலக்க வேண்டும். காற்று வடிப்பான் சுத்தமாக இருக்க வேண்டும். சிலிண்டரின் உடல் பகுதி, தலைப்பகுதியின் மேலுள்ள குளிரூட்டித் தகடுகளையும், மேக்னடோ விசிறித் தகடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
20 மணி நேரத்துக்குப் பிறகு
விசைத் தெளிப்பான் 20 மணி நேரம் ஓடிய பிறகு, எந்திரத்தில் உள்ள திருகுகள், போல்ட் நட்டுகள் ஆகியன சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்பொறிப் பொத்தான் மற்றும் தொடு துண்டிப்பு முனை இடைவெளிகளைச் சோதித்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
50 மணி நேரத்துக்குப் பிறகு
விசைத் தெளிப்பான் 50 மணி நேரம் ஓடிய பிறகு, புகைக்கூண்டு மற்றும் புகை வெளியேறும் குழாயில் உள்ள கரிப்படிவை நீக்க வேண்டும். நூறு மணி நேரம் ஓடிய பிறகு, கார்ப்பரேட்டரைக் கழற்றிச் சுத்தம் செய்து பொருத்த வேண்டும். பெட்ரோல் கலன் மற்றும் பெட்ரோல் குழாயைச் சுத்தம் செய்ய வேண்டும். பிஸ்டன், சிலிண்டரின் உடல் பாகம் ஆகியவற்றைக் கழற்றி, கரிப்படிவை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.
இயக்குவதற்கு முன்
விசைத் தெளிப்பானை இயக்குவதற்கு முன், பெட்ரோல் கலனில் பெட்ரோல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காற்று வடிப்பான் சுத்தமாக இருக்க வேண்டும். பெட்ரோல் அடைப்பானைத் திறந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும். கார்ப்பரேட்டரில் பெட்ரோல் நிறைந்ததும் பெட்ரோல் அடைப்பானை மூடிவிட வேண்டும்.
திராட்டியைப் பாதியளவில் திருப்பிவிட வேண்டும். ஒரு கையால் தெளிப்பானைப் பிடித்துக் கொண்டு, எந்திரத்தை இயக்கும் கயிற்றை, வேகமாக மற்றும் நிதானமாக இழுத்து இயக்க வேண்டும். அம்புக்குறி உள்ள திசையில் எந்திரத்தை இயக்க வேண்டும்.
நிறுத்துவதற்கு முன்
விசைத் தெளிப்பானை நிறுத்துவதற்கு முன், பெட்ரோல் கலனுக்குக் கீழுள்ள பெட்ரோல் அடைப்பானை மூட வேண்டும். கார்ப்பரேட்டர் அறையிலுள்ள பெட்ரோல் தீரும் வரையில், எந்திரம் ஓடித் தானாக நிற்க வேண்டும். எந்திரம் நின்றதும் திராட்டியைப் பழைய நிலையில் வைக்க வேண்டும்.
மருந்தடிப்பின் போது
மருந்தடிப்பின் போது வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படுவதால், அதன் பயன் பயிர்களுக்குக் கிடைப்பதில்லை. இதைத் தவிர்க்க, குறைந்த காற்று மற்றும் பயிர்களில் ஒட்டியிருந்து, பயிர்களுக்கு மருந்து சென்று சேரும் திறனைக் கூட்டும், பனி நிறைந்த அதிகாலை, மருந்தடிப்புக்கு மிகவும் ஏற்றது. பயிர்களுக்கு மிக அருகில் நாசில்களைப் பிடித்தால், மருந்துத் துளிகள் வீணாதல் குறையும்.
மருந்துத் துகள்களின் பருமனை அதிகமாக்கினால் மருந்து வீணாதல் குறையும். எந்திரத்தின் வேகத்தைச் சற்றுக் குறைத்தால் மருந்துத் துகள்களின் பருமன் அதிகமாகும். மருந்துக் குருணைகளைப் பயன்படுத்தினால் மருந்து வீணாதல் இருக்காது.
மருந்தைக் கையாளும் போது
மருந்தை வாங்கியதும் புட்டியின் மேலுள்ள எச்சரிக்கை மற்றும் பயன்படுத்தும் முறைகளைக் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், உடல் நலிந்தோர், குழந்தைகள் போன்றோர் மருந்துகளைக் கையாளக் கூடாது. மருந்து மற்றும் தெளிப்பானைப் பயன்படுத்தும் முன்பு, சுத்தமான நீர், சோப்பு, துண்டு ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இதனால், மருந்துகள் உடலில் பட்டால் உடனே சுத்தம் செய்து கொள்ள முடியும்.
ஒரு மருந்து திரவ நிலையிலும் தூள் நிலையிலும் இருந்தால், திரவ மருந்தையே பயன்படுத்தலாம். இதனால், மருந்து வீணாதல் குறையும். இயன்ற வரையில் ஒரு மருந்துப் புட்டியைத் திறந்தால் அதிலுள்ள மருந்து முழுவதையும் காலி செய்து விடுவது நல்லது. மருந்தை அதற்கான புட்டியில் தான் வைக்க வேண்டும். வேறு கலனுக்கு மாற்றக் கூடாது.
குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பூச்சி மருந்துள்ள இடத்தில் தூங்கக் கூடாது. காலியான மருந்துப் புட்டிகளை நீர்நிலை மற்றும் நிலத்தில் போடக்கூடாது. மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும்.
மருந்துத் தெளிப்பின் போது
காற்றுக்கு எதிர்த் திசையில் இருந்து மருந்தடிக்கக் கூடாது. அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள், நீர் நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் அருகில் இருந்தால், அந்த இடங்களுக்கு மருந்து செல்லாத வகையில் கவனமாக அடிக்க வேண்டும். அடைபட்ட நாசிலை எக்காரணம் கொண்டு வாயால் ஊதிச் சுத்தம் செய்யக் கூடாது. இதற்குச் சிறு குச்சியைப் பயன்படுத்தலாம்.
மருந்தை அடிப்பவர் உடலில் காயமோ புண்ணோ இருக்கக் கூடாது. மருந்தை அடிக்கும் போது, உண்ணல், குடித்தல், புகைத்தல், புகையிலையை மெல்லுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கைகள் மற்றும் முகத்தைச் சுத்தம் செய்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்.
ஒருநாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் மருந்தடிப்பில் ஈடுபடக் கூடாது. துணைக்கு ஆளில்லாமல் தனியாக மருந்தடிக்கக் கூடாது. வேலை முடிந்தால் சோப்பால் குளித்து ஆடைகளை மாற்ற வேண்டும். கழற்றிய ஆடைகளைத் துவைக்காமல் அணியக் கூடாது.
முனைவர் ப.காமராஜ்,
உதவிப் பேராசிரியர், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி,
குமுளூர், திருச்சி மாவட்டம்.