My page - topic 1, topic 2, topic 3

குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

PB_Kuthirai

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

ரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள் பெரும்பாலும் இறந்து விடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

காய்ச்சலுக்குக் காரணம்

ஜன்னிக் காய்ச்சல், மண்ணில் மற்றும் சாணத்தில் இருக்கும் கிலாஸ்ரிடியம் டெட்டானி என்னும் பாக்டீரியாவால் உண்டாகும். சுற்றுச்சுழலில் நீண்ட காலம் வாழும் இந்த பாக்டீரியாக்கள் குதிரைகளில் ஏற்படும் காயங்கள் மூலம் உடலுக்குள் செல்லும். குறிப்பாக, காயங்கள் மண்ணால் மாசடையும் போது மற்றும் பாதங்களில் ஏற்படும் காயங்களால், ஜன்னிக் காய்ச்சல் குதிரைகளைத் தாக்கும்.

சில சமயங்களில் இந்த பாக்டீரியாக்கள் நிறைந்த மண் அல்லது சாணத்தால், வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்கள் மூலம் உண்டாகும். தொப்புள் கொடியில் ஏற்படும் காயங்கள் மூலம், குதிரைக் குட்டிகளை ஜன்னிக் காய்ச்சல் தாக்கும்.

இந்த பாக்டீரியாக்கள் காயமுள்ள தசைகளில் மிக விரைவாகப் பெருகி காய்ச்சலை ஏற்படுத்தும். ஏனெனில், இந்த பாக்டீரியாக்கள் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை. இவை நரம்புகளைத் தாக்கும் டெட்டானஸ் டாக்ஸின் என்னும் நச்சை உருவாக்கி இரத்தத்தில் கலக்கச் செய்வதால், உடல் தசைகளில் இறுக்கம் உண்டாகும்.

இரண ஜன்னி அறிகுறிகள்

இரண ஜன்னியை ஏற்படுத்தும் நஞ்சானது, உடல் தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிக்கச் செய்யும். இதனால் படிப்படியாக தசையிறுக்கமும் விறைப்பும் ஏற்படும். தசையிறுக்கம் ஏற்பட்டால் குதிரைகளால் நடக்க முடியாது. தீவனம் எடுப்பதிலும் பாதிப்பு ஏற்படும். கண் தசையிலும் இறுக்கம் ஏற்படும். தசையிறுக்கம் வந்தால் சாணம் வெளிவருவதில் மற்றும் சுவாசப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.

சிகிச்சையும் தடுப்பு முறைகளும்

பாதிக்கப்பட்ட குதிரைகள் பெரும்பாலும் இறந்து விடும். முன்கூட்டியே கண்டறிந்தால் இறப்பைத் தடுக்கலாம். மருத்துவர் மூலம் நோயெதிர்ப்பு மற்றும் இரண ஜன்னிக்கு எதிரான மருந்தைக் குதிரைக்கு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குதிரைகளை அமைதியான இருட்டு அறையில் வைத்தால், பதட்டப்படுவது மற்றும் தசையிறுக்கம் அடைவதைச் சற்றுக் குறைக்கலாம்.

சற்று உயரமான இடத்தில் தீவனத்தை வைத்தால் குதிரைகள் உண்ண ஏதுவாக இருக்கும். இது எளிதில் தவிர்க்கக் கூடிய நோயாகும். குதிரைக்குக் காயம் ஏற்பட்டால் டெட்டானசுக்கு எதிரான மருந்தை அளிக்க வேண்டும். பொதுவாக, குதிரைகளுக்கு டெட்டானஸ் டாக்ஸாயிடு மருந்தை 4-6 வார இடைவெளியில் கொடுக்க வேண்டும். அடுத்து, ஓராண்டுக்குப் பிறகு மருந்தைத் தர வேண்டும். பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசியை அளித்து வந்தால் இரண ஜன்னி வருவதைத் தடுக்கலாம்.

சினைக் குதிரை ஈனுவதற்கு ஒரு மாதம் இருக்கும் போது, அதற்குத் தடுப்பு மருந்தைக் கொடுத்தால், பிறக்கும் குதிரைக் குட்டிகளை இந்நோயில் இருந்து காக்கலாம். சினையின் போது ஊசியைப் போட இயலாத நிலையில், பிறந்த குட்டிகளுக்கு 3-4 வாரத்தில் தடுப்பூசியைப் போட வேண்டும்.


PB_VENKATESAN

மரு.மா.வெங்கடேசன்,

மரு.மு.வீரசெல்வம், முனைவர் ச.செந்தில்குமார், முனைவர் நா.பிரேமலதா,

கால்நடை சிகிச்சைத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு-614625.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks