கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கோழித் தீவன heading pic 2 scaled

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019

போதுமான அளவில் உலர வைக்காத விளைபொருள்கள் மற்றும் தீவனப் பொருள்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகும். பூசணத் தொற்றால் தீவனப் பொருள்களில் நச்சேற்றம் (Mycotoxicosis) உண்டாகும். பூசண நச்சுகளில், குறிப்பாக, அஃப்லா பூஞ்சை நஞ்சால், பெரும்பாலான கோழிப்பண்ணைகள் மற்றும் தீவனத் தொழிற்சாலைகள் பொருளாதார இழப்புக்கு உள்ளாகும். மேலும், உணவு விலங்குகளின் இறைச்சியில் எஞ்சியுள்ள பூசண நஞ்சுகளால், மனிதர்களுக்கும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். எனவே, கோழி உற்பத்தி மற்றும் மனித நலத்தைப் பராமரிப்பதில் பூசண நஞ்சுகளைத் தடுப்பது மிகவும் அவசியமாகும்.

அஃப்லா பூசண நச்சுகள் என்பவை, ஆஸ்பர்ஜில்லஸ் ஃப்லேவஸ், ஆ. பாரசைட்டிகஸ் மற்றும் ஆ.நாமினஸ் போன்ற பூஞ்சைகள் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் கழிவுகளாக உற்பத்தி செய்யும் பொருள்களாகும். இவற்றில், ஆ. ஃப்லேவஸ் வகை அதிகப் பாதிப்பை உண்டாக்கும் நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது.

பூசண நச்சுகளின் பண்புகள்

அஃப்லா பூஞ்சை நச்சு வகைகள்: பி1, பி2, ஜி1, ஜி2 ஆகும். இவற்றில் பி1 அதிக நச்சுத் தன்மை மிக்கது. பூஞ்சைத் தொற்று, மக்காச்சோளம், கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, சோளம் போன்ற தீவனப் பொருள்களில் மிகுந்து காணப்படுகிறது. பூசண நச்சுகள் தானியங்களில் உற்பத்தியான பிறகு அவற்றை அழிப்பது கடினமாகும். ஒளிரும் விளக்கில் பூசண நச்சுகளை நீலம் அல்லது பச்சை ஒளிர்வின் மூலம் கண்டறியலாம். பூசண நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கும். குறிப்பாக, பி1 நச்சு, கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

பூசண நச்சினால் பாதிக்கப்படும் பறவைகள்

கோழிகள், வான்கோழிகள், சீமை வாத்துகள், மற்றும் வாத்துகள் இதனால் மிகுதியாகப் பாதிக்கப்படும். இவற்றில் வாத்துகள் எளிதில் பாதிக்கப்படும். இதனால், இளம் குஞ்சுகள் நிறைய இறக்கும். பூசண நச்சுகள் கோழிகளின் வளர்ச்சி, உடல் எடை, குஞ்சு பொரிக்கும் திறன் போன்ற பண்புகளைப் பாதிக்கும். கல்லீரலைப் பாதித்து, நோயெதிர்ப்புத் திறணைக் குறைப்பதால் இறப்பு ஏற்படும்.

பூசண நச்சுகளின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துதல்

பூஞ்சைகளின் வளர்ச்சியைக் குறைத்தல்: பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பல்வேறு இயற்பியல், வேதியியல், உயிரியல் முறைகள் உள்ளன. பயிர்களை அறுவடைக்குப் பிறகு உலர வைத்தல், சேமித்தல் மற்றும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும். அதிக ஈரப்பதம், 25-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூச்சிகளால் பாதித்தல் போன்ற காரணிகள், தீவனத்தில் பூஞ்சைகளின் வளர்ச்சி மற்றும் நச்சுகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும்.

இயற்பியல் முறைகள்: தானியங்கள் மற்றும் தீவனப் பொருள்களைச் சரியாக உலர்த்தி, ஈரத்தை 9-11%க்குக் கட்டுப்படுத்துதல். சேமிப்புக் கிடங்குகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துதல். சேமிப்புக் கிடங்குகளில் பூச்சிகள், எலிகள் நுழையாமல் தடுத்தல். தீவனப் பொருள்கள் நிறையவுள்ள பெரிய சேமிப்புக் கிடங்குகளில் காமா கதிர்வீச்சு மூலம் நுண்ணுயிரிகளை அழித்தல். பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட தீவனத்தை அகற்றுதல்.

வேதியியல் முறைகள்: அசிட்டிக் அமிலம், புரொப்பியானிக் அமிலம், பென்சாயிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காப்பர் சல்பேட் போன்ற பூசணக் கொல்லிகளை 0.2-0.4% அளவில் தீவனத்தில் சேர்த்தல். தீவனச் சேமிப்புக் கிடங்குகளில் 0.2-0.4% அம்மோனியா வாயு மூலம் புகையூட்டுதல். தீவனத்தில் பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள், ஓம எண்ணெய், இலவங்க எண்ணெய் போன்ற மூலிகைச் சாறுகளை 0.25-0.5% அளவில் சேர்த்தல்.

உயிரியல் முறைகள்: கைட்டினேஸ் மற்றும் பீட்டா 1, 3 குளுக்கனேஸ் போன்ற நொதிகள், பூஞ்சைகளின் செல் சுவரின் முக்கிய அமைப்புகளான கைட்டின் மற்றும் குளுக்கனை அழிப்பதால், இவற்றைத் தீவனத்தில் சேர்த்துப் பூஞ்சைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நச்சுத் தன்மையைக் குறைத்தல்

இயற்பியல் முறைகள்: பாதிக்கப்பட்ட தீவனப் பொருள்களை வெப்பப்படுத்துதல் மற்றும் வேக வைத்தல் மூலம் 70% நச்சுகளை அழிக்கலாம். வறுத்தல் மற்றும் சூரிய வெப்பத்தில் உலர்த்துதல் மூலம் 70%க்கு மேல் நச்சுகளை அழிக்கலாம். நீர்த்த சோடியம் கால்சியம் அலுமினோ சிலிகேட்டுகள், ஃபைலோ சிலிகேட், ஜியோலைட், கயோலின், செபியோலைட், சார்க்கோல் போன்ற ஒட்டும் பொருள்களைத் தீவனத்தில் சேர்த்தால், அவை, பூசண நச்சுகளுடன் கலந்து நச்சுத் தன்மையைக் குறைக்கும்.

வேதியியல் முறைகள்: அம்மோனியா, சோடியம் ஹைட்ரக்சைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன், சோடியம் ஹைப்போகுளோரைடு, பைசல்ஃபைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற இரசாயனங்கள், நச்சுகளை எளிதில் அழிக்கும். எனினும், தீவனத்தில் இவற்றின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகும்.

உயிரியல் முறைகள்: சாக்கரோமைசஸ் செர்விசியே என்னும் பாசி மற்றும் லாக்டிக் அமில பாக்டீரியாக்களைத் தீவனத்தில் சேர்த்தால், அவை, நச்சுகளுடன் கலந்து நச்சுத் தன்மையைக் குறைக்கும்.

தீவன மேலாண்மை

தீவனத்தில் மெத்தியோனின் அமினோ அமிலத்தைச் சேர்த்தால், நச்சுகளை அழிக்கும் ஆற்றல் கல்லீரலுக்குக் கிடைக்கும். புயூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸி டொலுயீன் போன்ற ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களைத் தீவனத்தில் சேர்த்தால், நச்சுகளின் பாதிப்பைக் குறைக்கலாம். வைட்டமின் இ மற்றும் செலினியம் கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தும்.

கோழித் தீவனங்களில் பூஞ்சைகளின் வளர்ச்சி மற்றும் பூசண நச்சுகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்தினால், கோழிகளின் உற்பத்தித் திறன் மற்றும் கோழி இறைச்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.


கோழித் தீவன LAVANYA C

.லாவண்யா,

ம.சிவக்குமார், சு.சரண்யா, கா.இராஜேந்திரன், த.வசந்தகுமார், 

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!