மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

இளங்காளை

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

ழைக் காலத்தில் பெரும்பாலான நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகள் கால்நடைகளை மிகுதியாகத் தாக்கும். அதைப்போல, தட்டைப்புழு, நாடாப்புழு, உருளைப் புழுக்களின் தாக்கமும் கூடுதலாக இருக்கும்.

இதற்குக் காரணம், கால்நடைகள் போடும் சாணத்தில் குடற் புழுக்களின் முட்டைகள் நிறையளவில் இருப்பது தான். இந்தச் சாணத்தை எருவாக இடும் போது, மேய்ச்சல் நிலத்தில் இந்த முட்டைகள் இருக்க வாய்ப்பு உண்டு. இவை, கால்நடைகள் மேயும் புல்லின் வழியாகக் குடலுக்குள் சென்று பொரிந்து குடற் புழுக்களாக வளரத் தொடங்கும்.

இந்தக் குடற் புழுக்கள் குடற் தசையில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சும். மேலும், கால்நடைகளின் உடலிலுள்ள சத்துகளையும் உறிஞ்சும். இதனால், கால்நடைகளுக்குப் போதுமான ஊட்டம் கிடைக்காமல் போகும்.

ஆகையால், கால்நடைகள் நோயெதிர்ப்பு சக்தியை இழப்பதுடன், முழு வளர்ச்சியையும் அடைய முடிவதில்லை. எனவே, அவற்றின் இனப்பெருக்கத் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்து போகும். எனவே, மழைக் காலத்தில் கட்டாயம் குடற் புழுக்களை நீக்கினால், மற்ற நோய்களின் தாக்குதலையும் குறைக்க முடியும்.

குடற்புழு நீக்கம்

வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே இந்தக் குடற் புழுக்களை நீக்க முடியும். இதற்கு, 100 கிராம் பிரண்டை, 100 கிராம் உப்பு, 100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு, 25 கிராம் பெருங்காயம், 100 கிராம் சீரகம், 100 கிராம் மிளகு, 100 கிராம் வெங்காயம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

இவற்றை உரலில் நன்கு இடித்து முட்டை வடிவில் உருண்டைகளாகப் பிடித்து உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் மாட்டுக்கு ஒரு உருண்டை வீதம் கொடுக்க வேண்டும்.

மாடுகளைக் காலை 10 மணி வரை வெய்யிலில் கட்டி வைக்க வேண்டும். தீவனம் எதையும் கொடுக்கக் கூடாது. பத்து மணிக்கு முதலில் நீரைக் கொடுத்தால் வயிறு முட்டக் குடிக்கும். பிறகு தீவனத்தைக் கொடுக்கலாம். இப்படி, வாரம் ஒருமுறை என, நான்கு வாரம் கொடுக்க வேண்டும்.

மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து இதே முறையைப் பின்பற்றலாம். இப்படி, ஆண்டுக்கு இரண்டு தடவை, பக்கவிளைவு இல்லாத இந்த மூலிகைக் குடற்புழு நீக்க மருந்தை, ஆடுகள், மாடுகள், கன்றுகள் மற்றும் கோழிகளுக்குக் கொடுக்கலாம். இதனால், கால்நடைகளின் வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் கூடுதலாகும்.


மழை DR.G.KALAISELVI e1616350379131

முனைவர் ஜி.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை – 600 051.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!