கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே தமிழ்நாட்டுக் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில், அதிக மகசூலைக் கொடுத்து, கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்குப் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்தது.

புதிய கரும்பு இரகங்கள் உற்பத்திப் பணி, கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் 1912 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதன் விளைவாக, 1930 இல் இருந்து சிறந்த இரகங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்து வருகின்றன. கரும்பு இரகங்கள் உற்பத்தியை, தொடக்கத்தில் தமிழக அரசு மேற்கொண்டது. பிறகு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், கடலூர், கோயம்புத்தூர், சிறுகமணி ஆகிய கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

நடவுப் பட்டங்கள்

பருவத்தே பயிர் செய் என்னும் கூற்றுக்கு ஏற்ப, சரியான பட்டங்களில் கரும்பைப் பயிரிட்டால், நல்ல விளைச்சலும், அதிகச் சர்க்கரைக் கட்டுமானமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் கரும்பு நடவுப் பட்டங்களை, முக்கியப் பட்டம், சிறப்புப் பட்டம் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

முக்கியப் பட்டம்: மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையில், அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. எனவே, இதுவே முக்கியப் பட்டமாகும். இந்தக் காலத்தில் தட்ப வெப்பநிலை மாற்றங்கள் அதிகமாக இருப்பதால், முன்பட்டம் (மார்கழி, தை-டிசம்பர், ஜனவரி), நடுப்பட்டம் (மாசி, பங்குனி- பிப்ரவரி, மார்ச்), பின்பட்டம் (சித்திரை, வைகாசி- ஏப்ரல், மே) எனப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்களுக்கு ஏற்பவே, புதிய கரும்பு இரகங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், சர்க்கரை ஆலைகள் நெடுநாட்களுக்குச் சிறப்பாக இயங்க, இத்தகைய பரவலான நடவுப் பட்டங்கள் அவசியமாகும்.

முன்பட்டம்: குறைந்த வயதில் அறுவடைக்கு வரும் இரகங்கள் இந்தப் பட்டத்தில் நடப்படும். பத்து மாதங்களில் 16% சுக்ரோஸ், 85% தூய்மையான சாற்றைத் தரும் இரகங்களை இந்தப் பட்டத்தில் நடலாம். பத்து மாதங்களில் அறுவடைக்கு வருவதால், கரும்பின் தரம் சிறப்பாக இருப்பினும், மகசூல் சற்றுக் குறைவாகவே இருக்கும்.

முன்பட்டக் கரும்புகள் ஆலை அரைவையில் முதலிடம் பிடிப்பதால், வெட்டு உத்தரவு உரிய நேரத்தில் கிடைக்கும். மேலும், ஏப்ரல், மே வறட்சிக் காலத்தில் நான்கு மாதப் பயிராக இருப்பதால், வறட்சியைத் தாங்கியும், பூச்சி, நோய்த் தாக்குதல் இன்றியும் வளரும். எனவே, இந்த முன்பட்டம் பொன்பட்டமாகக் கருதப்படுகிறது.

முன்பட்ட நடவு இரகங்கள்

கோ.11015 (அதுல்யா): இது, கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் 2019 இல் வெளியிடப்பட்டது. கோ.க.671, கோ.86011 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மிதமான தடிமன், அதிகத் தூர்க்கட்டுடன் உயரமாக வளரும். வறட்சியையும் கரிப்பூட்டை நோயையும் தாங்கி வளரும்.

எட்டு மாதங்களில் அதிகச் சர்க்கரைச் சத்துடன் இருப்பதால் எட்டாவது மாதத்திலேயே வெட்டலாம். இரண்டாண்டில் மூன்று முறை பயிரிடலாம். எக்டருக்கு 142.7 டன் கரும்பும், அதன் மூலம் 20.2 டன் சர்க்கரையும் கிடைக்கும். இதன் வெல்லம் ஏ1 தரத்தில் பொன் மஞ்சளாக இருக்கும்.

கோ.கு.6: இது, கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் 2019 இல் வெளியிடப்பட்டது. எச்.ஆர்.83-144, கோ.எச்.119 ஆகிய கரும்பு இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுக் கரும்பில் எக்டருக்கு 140.6 டன் கரும்பும், அதன் மூலம் 18.4 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பில் 136.2 டன் கரும்பும், அதன் மூலம் 17.7 டன் சர்க்கரையும் கிடைக்கும்.

இந்த இரகம், வேலூர் மாவட்டத்தில் தோல் ஆலைகள் வெளியேற்றும் கழிவுநீரிலுள்ள உப்பின் தாக்கம் உள்ள இடங்களில் நல்ல மகசூலைத் தரும். அதாவது, நடவுப் பயிரில் எக்டருக்கு 131.7 டன் கரும்பும், மறுதாம்பு வளர்ப்பில் 120.2 டன் கரும்பும் கிடைக்கும். செவ்வழுகல் நோயை மிதமாகத் தாங்கியும், இளங் குருத்துப்புழு, இடைக்கணுப்புழுத் தாக்குதலை முற்றிலும் தாங்கியும் வளரும். ஏ1 தரத்தில் வெல்லம் தயாரிக்க ஏற்ற இந்த இரகம் பூப்பதில்லை.

கோ.க.25: இது, கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2017 இல் வெளியிடப்பட்டது. கோ.85002, எச்.ஆர்.83-144 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுப் பயிரில் எக்டருக்கு 145.7 டன் கரும்பும், அதன் மூலம் 18.6 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூலைத் தரும் இந்த இரகம், செவ்வழுகலை மிதமாகத் தாங்கி வளரும். விரைவாக வளரும். கரும்பு பருமனாக இருக்கும். சுணையற்ற தோகைகளை எளிதாக உரிக்கலாம்.

கோ.க.(க)24: இது, கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. கோ.8371, எம்.எஸ்.6847 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. 300-330 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 133 டன் கரும்பும், அதன் மூலம் 17 டன் சர்க்கரையும் கிடைக்கும். தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்துப் பகுதிகளிலும் நடலாம். சாயாமல் நேராக வளரும். எந்திர அறுவடைக்கு மிகவும் ஏற்றது.

தோகையை எளிதாக உரிக்கலாம். வறட்சியையும் உவரையும் தாங்கி வளரும். மறுதாம்பாகவும் வளர்க்கலாம். தண்டுத் துளைப்பானைத் தாங்கி வளரும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சர்க்கரை ஆலைகளில் மின்னுற்பத்திக்கு மிகவும் ஏற்றது. தோகையில் சுணை இருக்காது.

கோ.சி.7: இது, சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2010 இல் வெளியிடப்பட்டது. கோ.99043, கோ.கு.93076 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுப் பயிர் மூலம் எக்டருக்கு 154 டன் கரும்பும், அதன் மூலம் 20.5 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் அதிக மகசூலைத் தரும்.

செவ்வழுகல் மற்றும் கரிப்பூட்டை நோயை மிதமாகத் தாங்கி வளரும். முன்பட்ட வறட்சி மற்றும் பின்பட்ட நீர்த்தேங்கலைத் தாங்கி வளரும். உவர் நிலத்திலும் நன்கு வளரும். சுணையற்ற தோகையை எளிதாக உரிக்கலாம். சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க ஏற்றது. சிறப்புப் பட்டத்திலும் நடலாம்.

கோ.சி.(க)6: இது, சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2005 இல் வெளியிடப்பட்டது. கோ.8213, கோ.அ.7602 ஆகிய கரும்பு இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுப் பயிரில் எக்டருக்கு 148 டன் கரும்பும், அதன் மூலம் 18.1 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூலைத் தரும்.

முன்பருவ வறட்சி, பின்பருவ நீர்த்தேங்கலைத் தாங்கி வளரும். உப்பு மண் நிலத்திலும் நன்கு வளரும். சுணையற்ற தோகையை எளிதாக உரிக்கலாம். விரைவாகவும், தடித்தும், நேராகவும் வளரும்.

கோ.06022: இது, கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. ஜி.யு.92275, கோ.86249 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுப் பயிரில் எக்டருக்கு 135.8 டன் கரும்பும், அதன் மூலம் 17.7 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூலைத் தரும். கரிப்பூட்டை நோயை மிதமாகவும், வறட்சியை நன்கும் தாங்கி வளரும். ஏ1 தரத்தில் வெல்லம் தயாரிக்கலாம். அதிகத் தூர்க்கட்டுடன் உயரமாகவும் தடித்தும் வளரும்.

கோ.94008(ஸ்யாமா): இது, கோ.7201, கோ.775 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. முன்பட்ட வறட்சி மற்றும் பின்பட்டத்தில் குறுகிய காலம் வரை நீர்த்தேங்கல் உள்ள பகுதியில் பயிரிட ஏற்றது. செவ்வழுகல் நோயைத் தாங்கி வளரும். எக்டருக்கு 126 டன் கரும்பும், அதன் மூலம் 15.2 டன் சர்க்கரையும் கிடைக்கும். நல்ல பழுப்பு நிறத்தில் இருக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூலைத் தரும்.

கோ.உய்.94101: இது, ஆந்திர மாநிலம் உய்யூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. கோ.7704, கோ.775 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 120 டன் கரும்பும், அதன் மூலம் 13.1% சர்க்கரையும் கிடைக்கும். செவ்வழுகல் மற்றும் கரிப்பூட்டை நோயைத் தாங்கி வளரும்.

கோ.94012 (பூலோக சாவித்திரி): இது திசு வளர்ப்பு முறையில் கோ.க.671 இல் இருந்து உருவாக்கப்பட்ட சோமகுளோன் ஆகும். எக்டருக்கு 113.3 டன் கரும்பும், அதன் மூலம் 18.7 டன் சர்க்கரையும் கிடைக்கும். பூக்கும் இந்த இரகத்தில் சுணை அதிகமாக இருக்கும். வெல்லம் தயாரிக்க ஏற்றது. செவ்வழுகல் நோயைத் தாங்கி வளரும்.

கோ.உய்.09356 (பரணி): இது ஆந்திர மாநிலம், உய்யூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. கோ.அ.92082, கோ.உய்.92102 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. செவ்வழுகல் நோயைத் தாங்கி, அதிகத் தூர்க்கட்டுடன், நேராக, உயரமாக வளரும்.

நடுப்பட்டம்

இந்தப் பட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு இரகங்கள் 12 மாதங்களில் முதிரும். மாசி, பங்குனி, அதாவது, பிப்ரவரி, மார்ச் மாத நடவுக் கரும்பில் சுக்ரோஸ் 18%, சாறின் தூய்மை 85% இருக்கும். இந்தப் பட்டத்தில் பூச்சித் தாக்குதல் ஓரளவு இருக்கும். இது, அதிகப் பரப்பில் கரும்பு விளையும் பருவமாகும்.

பின்பட்டம்

இந்தப் பட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு இரகங்கள் 12 மாதங்களில் முதிரும். சித்திரை, வைகாசி, அதாவது, ஏப்ரல், மே மாத நடவுக் கரும்பில் சுக்ரோஸ் 16%, சாறின் தூய்மை 85% இருக்கும். இப்பட்டம் கோடைக்காலமாக இருப்பதால், இளங் குருத்துப்பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும். பாசனம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு நன்றாக இருந்தால் சிறந்த மகசூல் கிடைக்கும்.

நடுப்பட்ட, பின்பட்ட நடவு இரகங்கள்

கோ.86032: கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் வெளியிட்ட இரகம். 15 ஆண்டுகளுக்கு மேல் பரவலாக சாகுபடியில் உள்ளது. கோ.62198, கோ.க.671 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 102 டன் மகசூல் கிடைக்கும். இந்தக் கரும்பில் 20% சுக்ரோஸ் உள்ளது. நீர்த் தேங்கும் பகுதிக்கு ஏற்றதல்ல. செவ்வழுகல் மற்றும் கரிப்பூட்டை நோயைத் தாங்கி வளரும் இந்த இரகம், வாடல் நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

கோ.க.13339: இது கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2020 இல் வெளியிடப்பட்டது. கோ.86032 இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுக் கரும்பில் எக்டருக்கு 141.8 டன் கரும்பும், அதன் மூலம் 18.3 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பில் 138.5 டன் கரும்பும், அதன் மூலம் 17.8 டன் சர்க்கரையும் கிடைக்கும்.

செவ்வழுகல், கரிப்பூட்டை மற்றும் மஞ்சள் இலை நோயை மிதமாகத் தாங்கி வளரும். இளங் குருத்துப்புழு, இடைக்கணுப் புழுக்கள் தாக்குதலைத் தாங்கி, தடித்து நேராக வளரும். சுணையற்ற தோகைகளை எளிதாக உரிக்கலாம்.

கோ.சி.8: இந்த இரகம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2012 இல் வெளியிடப்பட்டது. கோ.க.90063, கோ.8213 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. நடவுக் கரும்பில் எக்டருக்கு 146 டன் கரும்பும், அதன் மூலம் 18 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூல் கிடைக்கும்.

செவ்வழுகல் நோயை மிதமாகத் தாங்கும் இந்த இரகம், வறட்சி மற்றும் நீர்த் தேங்கும் பகுதியில் நன்கு வளரும். சுணையற்ற தோகைகளை எளிதாக உரிக்கலாம். சாயாமல் நேராக இருப்பதால் எந்திர அறுவடைக்கு ஏற்றது. அதிக முளைப்புத் திறன், இளம் பருவத்தில் அதிவேக வளர்ச்சி, அடர் பச்சைத் தோகைகளை உடையது. உவர் நிலத்திலும் பயிரிடலாம். இதில் 14% வரையில் நார்ச்சத்து இருப்பதால், அதிகச் சக்கை கிடைக்கும். அதனால், அதிக மின்சாரமும் கிடைக்கும்.

கோ.2001-13 (சுவாப்): இது, கோ.7806 இரகத்தின் மூலம் 2009 இல் உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 140 டன் கரும்பும், அதன் மூலம் 18.5% சர்க்கரையும் கிடைக்கும். இளம் பருவத்தில் அதிவேகமாக வளரும். அதிகத் தூர்க்கட்டுடன் உயரமாக வளரும். தோகையில் சுணை இருக்காது. செவ்வழுகல், கரிப்பூட்டை நோய், இடைக்கணுப் புழுவின் தாக்கம், வறட்சி மற்றும் உவரைத் தாங்கி வளரும்.

கோ.2001-15 (மங்கள்): இது, கோ.88002, கோ.775 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஓராண்டில் அறுவடைக்கு வரும். எக்டருக்கு 126 டன் கரும்பும், அதன் மூலம் 19.4% சர்க்கரையும் கிடைக்கும். செவ்வழுகல், கரிப்பூட்டை நோய் மற்றும் இடைக்கணுப் புழுவின் தாக்குதலைத் தாங்கி வளரும்.

இளம் பருவத்தில் மிக வேகமாக வளரும். கணுக்கள் நீண்ட இடைவெளியில் இருக்கும். அதிகத் தூர்க்கட்டு இருக்கும். சாயாமல் உயரமாக வளரும். மிதமாகப் பூக்கும். வறட்சியிலும் உவர் நிலத்திலும் பயிரிடலாம். நார்ச்சத்து 14% இருக்கும். ஏ1 தரத்தில் வெல்லம் தயாரிக்கலாம்.

கோ.0212: இது, கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம் 2016 இல் வெளியிடப்பட்டது. கோ.7201, ஐ.எஸ்.எச்.106 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 150.6 டன் கரும்பும், அதன் மூலம் 19.3 டன் சர்க்கரையும் கிடைக்கும். மறுதாம்பு வளர்ப்பிலும் நல்ல மகசூல் கிடைக்கும்.

தூர்க்கட்டு அதிகமாக இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். செவ்வழுகல், கரிப்பூட்டையை மிதமாகத் தாங்கி வளரும். கரும்பு நடுத்தரக் கனத்தில் இருக்கும். வெடிப்பு ஏற்படாது. தோகையில் சுணை இருக்காது. ஏ1 தரத்தில் வெல்லம் தயாரிக்கலாம்.

கோ.06030: இது, கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம், கடலோரப் பகுதிகளில் பயிரிட ஏதுவாக 2013 இல் வெளியிடப்பட்டது. கோ.க.671, ஐ.ஜி.11-1100 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 103 டன் கரும்பும், அதன் மூலம் 11.2 டன் சர்க்கரையும் கிடைக்கும். கரும்பு சிவப்பாக, தடித்து, நேராக இருக்கும். செவ்வழுகலை மிதமாகத் தாங்கி வளரும்.

கோ.உய்.92102 (கனகதுர்கா): இது, ஆந்திர மாநிலம், உய்யூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. கோ.க.671, கோ.6896 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 120-125 டன் கரும்பு கிடைக்கும். 13% சர்க்கரை இருக்கும்.

கோ.99004 (தபோதர்): இது, கோ.62175, கோ.86250 இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இளம் பருவத்தில் அதிக வேகமாக வளரும். எக்டருக்கு 164 டன் கரும்பும், அதன் மூலம் 22.6 டன் சர்க்கரையும் கிடைக்கும். செவ்வழுகல், கரிப்பூட்டை மற்றும் வாடல் நோயைத் தாங்கி வளரும். பூக்காத இரகம். சுணை இருக்காது. சாயாமல் இருக்கும். எடை அதிகமாக இருக்கும். வறட்சி மற்றும் உவரைத் தாங்கி வளரும். வெல்லமும் தயாரிக்கலாம். 14.26% நார்ச்சத்து இருப்பதால், அதிகச் சக்கையும் அதிக மின்சாரமும் கிடைக்கும்.

கோ.0218 (ஷரேயாஸ்): இது 2010 இல் வெளியிடப்பட்டது. கோ.8353, கோ.86011 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 100 டன் கரும்பு கிடைக்கும். சர்க்கரை 21.30% இருக்கும். செவ்வழுகல், கரிப்பூட்டையைத் தாங்கி வளரும். வறட்சியிலும் உவர் நிலத்திலும் நன்கு வளரும்.

நல்ல முளைப்பு, வேகமாக வளர்தல், நல்ல பருமன், நீண்ட கணு இடைவெளி, பச்சை மற்றும் அகலமான தோகைகள், அதிகத் தூர்க்கட்டு, சாயாமல் பூக்காமல் இருத்தல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் சக்தி, அதிகச் சர்க்கரைக் கட்டுமானம், உயர் விளைச்சல், வறட்சி, அதிக நீர், உப்பு, களரைத் தாங்கி வளர்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட கரும்பு இரகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இவற்றை, மண்வாகு மற்றும் பருவத்துக்கு ஏற்ப சாகுபடி செய்தால், அதிக மகசூலையும் அதன் மூலம் நல்ல வருவாயையும் பெறலாம்.


முனைவர் மு.சண்முகநாதன்,

முனைவர் வே.இரவிச்சந்திரன், முனைவர் ச.பாபு, 

கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!