சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில் சர்க்கரைக் கொல்லி என்றும் சொல்வர். இலை, விதை, வேர் என, இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயனுள்ளவை.
மண் மற்றும் காலநிலை
எல்லா மண் வகைகள் மற்றும் எல்லாப் பகுதிகளிலும் வளரும். செம்மண் அல்லது களிமண் இதற்கு உகந்தது. நீர்த் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாகுபடியைத் தவிர்ப்பது நல்லது. சிறு குறிஞ்சான் மூலிகைக்கு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலக் காலநிலை ஏற்றது. வறண்ட பகுதிகளிலும் வளரும். அதிக, மிதமான அல்லது பரவலான மழையுள்ள பகுதிகளிலும் பயிரிடலாம்.
வகைகள்
இலையின் அளவைப் பொறுத்து, சர்க்கரைக் கொல்லியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சிறிய இலை வகை: இதன் இலை, 1.0-3.5 செ.மீ. நீளம், 1.5-2.5 செ.மீ. அகலத்தில் இருக்கும். வறண்ட பகுதிகளில் வளரும். அடர்ந்த மற்றும் மெல்லிய ரோமங்களைக் கொண்ட வகை: இதன் இலை, 3-6 செ.மீ நீளம், 3.5-5 செ.மீ அகலத்தில் இருக்கும். முதல் வகை இலையை விட, இதன் இலை கரும் பச்சையாக, மெல்லிய ரோமங்களுடன் இருக்கும்.
இனப்பெருக்கம்
விதைகள் மூலம் இனப்பெருக்கம்: நவம்பர் டிசம்பரில் சிறு குறிஞ்சானில் பழங்கள் இருக்கும். இவற்றில் இருந்து விதைகளை எடுத்து இனப்பெருக்கம் செய்யலாம். புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களில் உள்ள விதைகளை, இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, மணல், மண், தொழுவுரம் சமமாகக் கலந்து வைக்கப்பட்ட நெகிழிப் பைகளில் விதைகளை நட வேண்டும். தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். 40-50 நாட்களுக்குப் பிறகு எடுத்து நிலத்தில் நடலாம். இவ்வகையில், ஓர் எக்டருக்கான நாற்றுகளைத் தயாரிக்க 2-3 கிலோ விதைகள் தேவைப்படும்.
தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம்: இது, வணிக நோக்கிலான முறையாகும். முதிர்ந்த தண்டுகளை 15 செ.மீ. நீளத் துண்டுகளாக வெட்டி, 500 பிபிஎம் இன்டோல் ப்யூரிக் அமிலத்தில் 18 மணி நேரம் நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, ஒரு சத பாவிஸ்டின் கரைசலில் நேர்த்தி செய்து, மணல், மண், தொழுவுரம் ஆகியன சமமாகக் கலந்து வைக்கப்பட்ட நெகிழிப் பைகளில் இவற்றை நட வேண்டும். தினமும் பாசனம் செய்ய வேண்டும். 90 நாட்களில் வேர்கள் உருவாகும். அப்போது எடுத்து நிலத்தில் நடலாம்.
நிலம் தயாரித்தல் மற்றும் நடவு
சிறு குறிஞ்சான் பசுமைக் கொடியினம் ஆகும். இதை, ஜூன் ஜூலையில் பயிரிடலாம். நிலத்தை உழுது சமன் செய்த பிறகு, வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர், செடிக்குச் செடி 1.75 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். நடவுக்கு 15 நாட்களுக்கு முன்பே இந்தக் குழிகளை எடுத்து, குழிக்கு 2 கிலோ தொழுவுரம் மற்றும் காயாத, பசுந்தழைகள் வீதம் இட வேண்டும். நடவுக்கு ஒரு வாரத்துக்கு முன் குழிகளில் நீரை விட வேண்டும். பிறகு, நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
பயிற்சி
சர்க்கரைக் கொல்லி ஒரு கொடியாக இருந்தாலும், இதை Y வடிவ இரும்புச் சட்டத்தில் 600 டிகிரி கோணத்தில் வளர பயிற்சியளிக்க வேண்டும். இரண்டு முக்கியத் தண்டுகளை எதிரெதிர்த் திசையில் வளரச் செய்ய வேண்டும். கொடிகள் தரையைத் தொடக் கூடாது. வேலியைப் போல வளர்க்க வேண்டும்.
உர மேலாண்மை
எக்டருக்கு 5 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை, எக்டருக்கு 95:45:35 கிலோ வீதம் இட வேண்டும். உரங்களை இட்டதும் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 5-6 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம் ஆகும். வெய்யில் காலத்தில், தட்பவெப்ப நிலையைப் பொறுத்துப் பாசனத்தை அதிகரிக்க வேண்டும். ஆட்கள் மூலம் அவ்வப்போது நிலத்திலுள்ள களைகளை அகற்ற வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலைப்பேன்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை ஈ: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் மற்றும் இலைப்புள்ளி நோய்: இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் நனையும் கந்தகம் அல்லது 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் இருந்து அறுவடை செய்யலாம். ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியதும், இலைகளையும் பூக்களையும் சேர்த்து அறுவடை செய்யலாம். பிறகு, இவற்றை நிழலில் 7-8 நாட்கள் காற்றாட உலர்த்த வேண்டும். இலைகளின் தரத்தைப் பாதுகாக்க, நேரடியாக வெய்யிலில் உலர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சராசரியாக, கொடிக்கு 5-6 கிலோ உலர் இலைகள் வீதம் கிடைக்கும். 3-4 ஆண்டுக் கொடிகள் மூலம் எக்டருக்கு 10,000-15,000 கிலோ உலர் இலைகள் கிடைக்கும். கொடிகளைச் சிறப்பாகப் பராமரித்தால், 10-15 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
வாரம் இருமுறை குறிஞ்சான் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடலில் வரும் தடிப்பு, பத்து, படையைப் போக்க, இலையை அரைத்துப் பூசி வரலாம். கடிபட்ட இடத்தில், குறிஞ்சான் இலையை வைத்துக் கட்டியும், கசாயம் செய்தும் சாப்பிட்டால், எத்தகைய விஷக்கடியும் உடனே முறிந்து விடும்.
சிறு குறிஞ்சான் பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டால், நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு குறையும்; நாளடைவில் நோய் முற்றிலும் குணமாகும். இந்தப் பொடியைத் தினமும் காலையில் கஷாயம் செய்து குடித்து வந்தால், உடலில் நோய்த் தாக்குதல் இருக்காது.
இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், நெறிக்கட்டால் ஏற்படும் வலி குறையும். சிறு குறிஞ்சான் இலையில் உள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரை மீதான ஆசையைக் கட்டுப்படுத்தும். நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுகளை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்யும். மேலும், கணையச் செல்களை உயிர்ப்பித்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். எடை குறைய உதவும். விதை, வாந்தியைத் தூண்டிச் சளியைப் போக்கும்.
சிறு குறிஞ்சான் வேர், இருமலுக்குச் சிறந்த மருந்து. வயிற்று வலியைப் போக்கி வலுவைத் தரும். உடலைக் குளிர்ச்சியாக்கும். சிறுநீர்ப் போக்கைத் தூண்டும். மாதவிடாயைத் தடுக்கும். வயிற்று வலியைப் போக்கும்.
வாயு மற்றும் செரியாமையால், வயிற்றில் வாயுச் சீற்றம் மிகுவதால், குடலின் உட்புறச் சுவர் பாதிக்கப்படும். மது மற்றும் புகையாலும் குடல் பாதிக்கப்படும். இதற்கு, குறிஞ்சான் கீரையை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் ஆறுவதுடன், வயிற்றில் இருக்கும் கிருமிகளும் மடியும்.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி,
உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.