பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்டது; ஆண்டுதோறும் இலைகளை உதிர்க்கக் கூடியது; நடுத்தர உயரமுள்ள வில்வ மரம். இலைகள் மூன்று அல்லது ஐந்து சிற்றிலைகள் அமைப்பில் இருக்கும். பூக்கள் சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் இனிய மணத்துடன் காணப்படும். வில்வப் பழங்கள் உருண்டையாக, சாம்பல் நிறத்தில் இருக்கும். பழத்தோல் கடினமாக இருக்கும். சதைப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் மணமும் சுவையும் கொண்டிருக்கும்.
இந்தியா முழுவதும் சமவெளிப் பகுதி மற்றும் மலையடிவாரங்களில் வளரும். கோயில்களிலும் வழிபாட்டுக்கு உரிய காடுகளிலும் வில்வ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, சிவன் கோயில் தல மரமாக வில்வம் வளர்க்கப்படுகிறது. வில்வ இலை, சிவ வழிபாட்டில் பயன்படும் முக்கிய அர்ச்சனைப் பொருளாகும். கூவிளம், கூவிளை, மதுரம் என மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.
வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியன, மருத்துவப் பயனுள்ளவை. இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியன, துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவை மற்றும் குளிர்ச்சித் தன்மையில் இருக்கும். இவை, நோயை நீக்கி உடலைத் தேற்றும் வல்லமை மிக்கவை. இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கியாகச் செயல்படும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமத்தைப் பெருக்கும்.
வில்வப் பிஞ்சை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடிக்கக் கொடுத்தால் சிறுவர்களுக்குச் சீதபேதி குணமாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கைக் குணமாக்க, வில்வ இலைகளைத் துவையலைப் போல அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்துக் காலையில் சாப்பிட வேண்டும். இப்படித் தொடர்ந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம். இந்தக் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
சீதபேதி குணமாக, நன்கு கனிந்த பழத்தை நீர் விட்டுப் பிசைந்து, நீரை வடிகட்டி, பின்னர் சம அளவு சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி முப்பது மில்லி சாப்பிட வேண்டும். ஒரு கரண்டி வில்வ இலைத்தூளுடன் கரிசாலைச் சாற்றைச் சேர்த்துக் குழப்பி, காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். இப்படி, ஐந்து நாட்கள் சாப்பிடலாம். இந்தக் காலத்தில் புளி, காரம், மற்றும் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப் புண்ணும் மலச்சிக்கலும் குணமாக, அரைத்தேக்கரண்டி வில்வ இலைத்தூளை வெண்ணெய்யில் கலந்து உணவுக்குப் பின் சாப்பிட்டு வர வேண்டும். நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும் தன்மை பழச் சதைக்கு உண்டு. குடற்புண், குடற்புழு ஆகியவற்றால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வப் பழச்சாறு பானங்கள் சரி செய்யும். பாதியளவு பழுத்த பழங்கள், பசியையும் ஜீரண சக்தியையும் கூட்டும். இலை, பழம், வேர் ஆகியவற்றின் நோயெதிர்ப்பு ஆற்றல், உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதியாகி உள்ளது.
தொகுப்பு: இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலிலிருந்து.
சந்தேகமா? கேளுங்கள்!