தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்கள் இருப்பது நாம் பெருமைப்படும் செய்தியாகும். அதிலும், உலகளவில் புகழ் பெற்ற இராஜபாளையம் நாய், நமது மாநிலத்தின் அடையாளமாக உள்ளது.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆர்வமாக உள்ளனர்.
இந்த நாய்களுக்குத் தகுந்த இருப்பிட வசதியை அமைத்துக் கொடுப்பது நாய் வளர்ப்போரின் கடமையாகும்.
இருப்பிடச் சூழல்: நாட்டு நாய்கள் வீட்டுக்கு உள்ளேயே வைத்து வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் அல்ல. அவை, பல தலைமுறைகளாக வேட்டைக்கும், வேட்டையில் வீழ்த்தப்பட்ட பறவைகள், முயல்கள் போன்ற உயிரினங்களைத் தேடிக் கவ்வி எடுத்து வரவும் பழக்கமானவை.
வேட்டையாடுவது சட்டப்படி தடை செய்யப் பட்டாலும், விரைந்து ஓடுதல், தாவிப் பிடித்தல், உயரம் தாண்டிக் குதித்தல் போன்ற, நாட்டு நாய்களின் குணங்கள் மாறவில்லை.
நாட்டு நாய்களின் நாலுகால் பாய்ச்சல், விரைந்து ஓடுதல், பின்னங் கால்களைக் கொண்டு எம்பிக் குதித்தல் போன்ற பண்புகள் வெளிப்பட, அவற்றை வெளிப்படுத்த, போதிய இடவசதி வேண்டும்.
நாய்க்குடில்: நாய்க்குடிலை குறைந்த விலையுள்ள கட்டுமானப் பொருள்கள் மூலம் அமைக்கலாம்.
பக்கச் சுவரை, செங்கல், ஆலோபிளாக் மற்றும் துத்தநாகக் கம்பிவலை மூலம் அமைக்கலாம்.
ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கான்கிரீட் மூலம் கூரையை அமைக்கலாம்.
ஆஸ்பெஸ்டாஸ் கூரையெனில், வெய்யில் காலத்தில், குடிலில் வெப்பத் தாக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே, கோடையில் கூரைமீது பனையோலை அல்லது தென்னங் கீற்றை வேய்தல் வேண்டும்.
குடில் தரை சிமென்ட்டால் அமைவது நன்று. இது, மூத்திரம் மற்றும் நீர் தேங்காமல் வழிந்தோட ஏதுவாக இருக்கும்.
சில நாட்டு நாய்கள் முன்னங் கால்களால் தரையைப் பறித்துக் குழியை ஏற்படுத்தும்.
இதைத் தவிர்க்கவும், குடில் தரையைச் சிமென்ட்டால் அமைப்பது அவசியம்.
நாய்கள் நடமாடும் பகுதியின் தரை மண், புல் ஆகியவற்றால் இருப்பதே நன்று.
உண்ண, உறங்க, ஓய்வு எடுக்க மட்டும், கூரையுடன் கூடிய குடிலை அமைக்க வேண்டும்.
இந்தக் குடிலில் நல்ல வெளிச்சம், காற்றோட்டம் இருக்க வேண்டும்.
குடிலின் ஒரு பகுதியில் நாய் படுப்பதற்கு, குறைந்தது 15 செ.மீ. உயரத்தில் மேசை போன்ற அமைப்பு இருப்பது நல்லது.
சிறிய நாய்க்கான குடில், 100 செ.மீ. நீளம், 75 செ.மீ. அகலம், 70 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
நடுத்தர உடலைக் கொண்ட நாயின் குடில், 150 செ.மீ. நீளம், 100 செ.மீ. அகலம், 100 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
பெரிய நாய்க்கான குடில், 250 செ.மீ. நீளம், 200 செ.மீ. அகலம், 150 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு நாயினங்களை, நடுத்தர மற்றும் பெரிய நாயின வகைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
எனினும், குடிலின் நீளம் நாயின் உடல் நீளத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
குடிலின் அகலம், நாயின் உடல் அகலத்தை விட, மூன்றில் இரண்டு பங்கு கூடுதலாக இருக்க வேண்டும்.
குடிலின் உயரம், நாயின் உயரத்தை விட, ஐந்தில் ஒரு பங்கு கூடுதலாக இருக்க வேண்டும்.
நாய்களுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களை, தரையில் இருந்து 6-12 அங்குல உயரத்தில் வைக்க வேண்டும்.
வாயகன்ற உலோகப் பாத்திரம் நல்லது. நீர்க் குவளையும் உலோகத்தில் இருப்பதே நன்று. எப்போதும் குடிநீர் தயாராக இருக்க வேண்டும்.
பயிற்சிக் குழிகள்: நாட்டின நாய்க் குட்டிகள் வலுவான கால்களைக் கொள்ளவும், தாவிக் குதிக்கவும், நீளமாக வளரவும்,
பல்வேறு ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, அவற்றுள் குட்டிகளை இறக்கி விட்டு, சில நிமிடங்கள் கழித்து வெளியே வரப் பழக்க வேண்டும்.
இந்தக் குழிகளை மண் தரையில் அமைக்க வேண்டும். நாய் வளர்ப்பிடத்தைச் சுற்றி, ஆறடி உயரத்துக்கு மேல் வேலி இருக்க வேண்டும்.
முனைவர் ந.குமாரவேலு, மரு.தெ.திவ்யலட்சுமி, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.