நாய்களைத் தாக்கும் உண்ணிகள்!

நாய் Dog

நாய் வளர்ப்போர் சந்திக்கும் மிக முக்கியச் சிக்கல்களில் ஒன்று, நாய்களில் ஏற்படும் உண்ணி மற்றும் தெள்ளுத் தொற்றாகும். உண்ணிகளால் உண்ணிக் காய்ச்சல் என்னும் நாய்களின் உயிரை எடுக்கக் கூடிய கொடிய நோய் ஏற்படுகிறது.

நாய்களை விட மக்களுக்கும் உண்ணிகளால் காய்ச்சல் மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்படுவது, நாய் வளர்ப்போருக்கும் ஆபத்தானது தான். வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில், உண்ணிகள் பெருகிக் காய்ச்சலை ஏற்படுத்தும்.

நாய்களில் காய்ச்சலை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த உண்ணிகள், பெருமளவு இரத்தத்தை உறிஞ்சி இரத்தச் சோகையை, ஈரல் நோயையும் ஏற்படுத்தும். இந்நிலையில், நாய்களுக்குச் சரியான சிகிச்சையை அளிக்கா விட்டால் அவை இறந்து போகும் சூழல் உண்டாகும்.

உண்ணி, தெள்ளுத் தாக்கம் காரணமாக, நாய்கள் எந்நேரமும் சொறிந்து தம்மைக் காயப்படுத்திக் கொள்ளும். சிலவகை முடிசார் சிக்கல்களும் ஏற்படும். நாய்களில் உள்ள உண்ணி, தெள்ளுகள் மக்களைக் கடிக்கும் போது, அவர்களுக்கும் பல நோய்கள் ஏற்படும். Lyme disease போன்ற காய்ச்சலும் ஏற்படும்.

கட்டுப்படுத்துதல்

முள்ளந்தண்டுப் பகுதியில் விடப்படும் Spot-on மருந்துகள், நாய்கள் உண்ணும் சொக்லட் போன்ற மருந்து, உண்ணிக் கழுத்துப் பட்டிகள், உண்ணி சோப் மற்றும் ஷாம்பூ,

உண்ணித் தெளிப்பு மருந்துகள் மூலம், உண்ணிகள் பெருகுவதை அழிக்கலாம். உண்ணி பவுடர்களைக் குட்டி நாய்களில் தெளிக்கலாம்.

பல இடங்களில் உண்ணிகளைத் தடுக்க, ஊசி மருந்துகளைத் தொடர்ந்து போடுகின்றனர். இது தவறான முறை. நீண்டகாலம் இந்த மருந்துகளைப் போட்டால், நாய்களின் ஈரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப் படலாம்.

எனவே, முடிந்த வரை கால்நடை மருத்துவர் பரிந்துரை செய்யும் சரியான உண்ணி எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.


நாய் DR.G.KALAISELVI e1616350379131

முனிவர் கோ.கலைச்செல்வி, ந.ஜெயந்தி, சீ.ஜெயஸ்ரீ, பல்கலைக் கழக மைய ஆய்வகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!