கோடை வெய்யில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. மனிதன் மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்துக்கும் சவாலானது இந்தக் கோடை வெப்பம். குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழகி விட்ட மனிதனின் மனதுக்குப் பிடித்த இடம் அவன் வாழும் இல்லமே.
இந்த இல்லத்தின் இனிமையை அதிகரிக்கச் செய்வதில் செல்லப் பிராணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போருக்கு ஏற்ற செல்லப் பிராணிகளாக, செல்லப் பறவைகள், வண்ண மீன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உடலும் மனமும் ஒருசேரக் களைத்து வீடு புகும் நமது மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை இந்தச் செல்லப் பறவைகள்.
மயக்கும் நிறங்கள் மற்றும் கொஞ்சும் குரலில் நம்மை வசியம் செய்யும் இந்தப் பறவைகள். நம் வீட்டின் அங்கத்தினராக வாழும் இப்பறவைகள், தமது அனைத்துத் தேவைகளுக்கும் நம்மையே சார்ந்துள்ளன.
இவ்வகையில், கோடை வெப்பம் அதிகமுள்ள மாதங்களில் இந்தப் பறவைகளுக்குச் சிறப்புக் கவனிப்புகள் தேவை.
கோடை விடுமுறைக் காலத்தில் நாம் பல்வேறு செயல்களைத் திட்டமிடுவதால், நமது செல்லப் பறவைகளைக் கவனிக்கத் தவறலாம். இதனால், அவை வெப்பத் தாக்கத்தின் இன்னலுக்கு உள்ளாகலாம்.
வெப்பத் தாக்க அறிகுறிகள்
வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும் பறவைகள், தங்களின் செயல்களை வெகுவாகக் குறைத்து அமைதியாக இருக்கும். இறகுகளை அலகினால் கோதி விடுதல் மற்றும் இயல்பான சப்தங்களை எழுப்புதல் குறையும். வாய் வழியே வேகமாகச் சுவாசிக்கும். இறக்கைகளைச் சற்றுத் தூக்கி, உடம்பில் ஒட்டாமல் வைத்திருக்கும்.
தொண்டை மற்றும் தாடைப்பகுதி எலும்பு மற்றும் தசையில் ஒருவித அதிர்வு காணப்படும். தீவனம் உண்பது குறையும்; நீரை அதிகமாக அருந்தும். நீருள்ள பாத்திரத்தில் தலையை நனைக்கும். ஈரமான தரையில் படுக்கும்.
பறவைகளின் உடல் வெப்பநிலை, பாலூட்டிகளை விட அதிகம். அதாவது, 104-105 டிகிரி பாரன்ஹீட் ஆகும். எனவே, பாலூட்டிகளை விட வெப்பத்தைச் சமாளிக்கும் திறனுள்ளவை இந்தப் பறவைகள். எனினும், கோடை வெப்பத்தால் இவற்றின் உடல் வெப்பநிலை கூடுவதால், வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும்.
செல்லப் பறவைகளில் இத்தகைய வெப்பத்தாக்க அறிகுறிகள் தென்படும் போது, சரியான பராமரிப்பு முறைகள் மூலம், அவற்றை வெப்பத் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
செல்லப் பறவைகளில் வெப்பத்தைச் சமாளிக்கும் தகவமைப்புகள்
பொதுவாக, பறவைகளின் உடல் வெப்பத்தை விடச் சுற்றுப்புற வெப்பநிலை குறைவாக இருக்கும் போது, பறவைகளின் உடல் வெப்பம் சுற்றுப் புறத்துக்குக் கடத்தப்படும். இதனால், அவற்றின் உடல் வெப்பம் சீரடையும்.
அதாவது, குவளையில் இருக்கும் சூடான தேநீர், சுற்றுப்புற வெப்பநிலை குறைவாக இருக்கும் போது, எளிதில் குளிர்ந்து விடுவதை இதனுடன் ஒப்பிடலாம்.
மேலும், அதிக வெப்பக் காலத்தில் பறவைகளின் சுவாசம் மிகுவதுடன், அது வாய்வழிச் சுவாசமாக இருக்கும். இந்த நேரத்தில் சுவாசம் வழியாக ஆவியாக வெளியேறும் நீருடன், பறவையின் உடல் வெப்பமும் கடத்தப்படும்.
ஆனால், சுற்றுப்புற வெப்பம் அதிகமாகி, முறையான பராமரிப்பு இல்லாத போது, முன்கூறிய முறைகளில் வெப்பம் வெளியேறுவது பாதிப்படையும்.
கோடை வெப்பத்தில் இருந்து காக்கும் முறைகள்
காற்றோட்டமான கூண்டு: செல்லப் பறவைகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் அவற்றின் கூண்டமைப்பு இருக்க வேண்டும். கோடையில் சிறிய மின் விசிறிகளைப் பொருத்திப் போதிய காற்றோட்டம் கிடைக்கச் செய்யலாம்.
மேலும், காற்றோட்டம் முறையாக இருப்பது, கூண்டுக்குள் தேவையற்ற வாசனையைத் தவிர்க்க உதவும்.
கூண்டில் வெய்யில் படாமல் இருக்க வேண்டும். தோட்டத்தில் குளிர்ந்த மரநிழல் இருந்தால், தற்காலிகமாகக் கூண்டை அங்கே மாற்றலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், தெளிப்பான் மூலம் பறவைகள் மீது நீரைத் தெளித்து வெப்பத் தாக்கத்தைக் குறைக்கலாம்.
கூண்டில் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, குளிர்ந்த நீரை நிரப்பி வைத்தால், பறவைகள் அதில் குளித்து உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். இந்த நீரை அவ்வப்போது மாற்ற வேண்டும்.
வீட்டுக்குள் பறவைகளை வளர்த்தால், சன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்துப் போதிய காற்றோட்டம் கிடைக்கச் செய்யலாம். வாகனங்களில் பறவைகளை எடுத்துச் செல்லும் போது, கண்ணாடிகளைத் திறந்து வைக்க வேண்டும்.
தீவன மேலாண்மை
பொதுவாக, உண்ணும் உணவு செரிக்கும் போது வெப்பம் வெளிப்படுதல் இயல்பாகும். வெப்பத் தாக்கத்துக்கு உள்ளான பறவைகளில் செரிமானம் மூலம் உருவாகும் வெப்பமானது, பறவைகளின் உடல் வெப்பத்தை மேலும் கூட்டும்.
இதைத் தவிர்க்க, குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவும் போது உணவிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைத் தரலாம்.
செரிப்பின் போது அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் ரொட்டித் துண்டுகள், மைதா உணவுகள் மற்றும் முட்டை கலந்த உணவைத் தவிர்த்தல் நல்லது. வெப்பக் காலத்தில் பறவைகளுக்குக் குடிநீர் அதிகமாகத் தேவைப்படும். எனவே, நாள் முழுவதும் குளிர்ந்த குடிநீர்க் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அதிக நீரிழப்பு ஏற்படுதல் மற்றும் தீவனம் உண்ணுதல் குறைவதால், செல்லப் பறவைகளுக்குத் தாதுச்சத்து மற்றும் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தீவனத்துடன் உரிய சத்துகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
வெப்பத்தாக்கப் பறவைகள் பராமரிப்பு
அதிகப் பாதிப்புக்கு உள்ளான பறவைகளை உடனே பிரித்து, காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். இறக்கையின் உட்புறம் சிறகுகள் இல்லாத பகுதியில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.
அதே சமயம், பறவைகள் மேல் லேசான காற்றும் படும்படிச் செய்தால், வெப்பம் குறையத் தொடங்கும். பறவைகள் சற்று இயல்பு நிலைக்கு வந்ததும், குளிர்ந்த நீரைக் கொடுக்கலாம்.
சிறகுகள் இல்லாத பகுதி வழியாக வெப்பம் கடத்தப் படுவதால் அப்பகுதியைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அழுக்கு, மெழுகு போன்றவை இங்கே படிவதை அவ்வப்போது துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
நீர் வடியாத வகையில், நனைத்த போர்வையைக் கூண்டின் மேல் மூடி வைக்கலாம். வெப்பக் காற்று மேலெழும்பிச் செல்லக் கூடியது. எனவே, கோடையில் கூண்டைச் சற்று இறக்கித் தொங்க விடலாம்.
இந்தப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், கோடை வெப்பத் தாக்கத்தில் இருந்து செல்லப் பறவைகளைப் பாதுகாக்க இயலும்.
முனைவர் இரா.செல்வக்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நாகர்கோவில் – 629 601.